என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    மனநலம் பாதித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் பயணிகள் நிழற்குடை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணையில் மனநலம் பாதித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத பெண் எனவும், இவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.

    இது குறித்து வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம் அருகே மகன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கராபரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (65). விவசாயி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ந்தேதி தனது 2வது மகன் அலெக்ஸ்பாண்டியன் என்பவரை சொத்து தகராறில் விறகு கட்டையால் அடித்து கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 7 மாதம் சிறையில் இருந்த அண்ணாமலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தன் மகனை கொலை செய்ததால், அண்ணாமலையுடன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் பேசாமல் இருந்துள்ளனர். இதில் மனமுடைந்த அண்ணாமலை வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த அவரது மனைவி குப்பு கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரத்தில் மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தொ.மு.ச. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

    மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் திருத்த சட்டம் மற்றும் பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    திருநாவலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவி மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை. விவசாயி. இவரது மகள் வாசுகி (வயது 7).

    வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த வாசுகி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் சிறுமி நீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இதேபோல திருநாவலூர் அருகே உள்ள ஆதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன் (8). இந்த சிறுவன் தனது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் ஏறிய போது தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் மற்றும் கோஷ்டி பூசல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம் ஆகிய 6 ஒன்றியங்கள், கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கள்ளக்குறிச்சியில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தனர்.

    அதன்படி அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் பகுதியைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரிடம் பணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறத் தொடங்கினர். இந்நிலையில் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட ஒவ்வொரு ஒன்றியத்திற்க்கும் ஒரு நபர் மட்டுமே விருப்ப மனு அளிக்கவேண்டும் என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் இருந்து விருப்ப மனு பெற வந்த நிர்வாகிகள் பணம் கட்டும் அனை வருக்கும் மனு வழங்க வேண்டும் எனக்கூறி தேர்தல் பொறுப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் இருந்து ஒன்றிய செயலாளருக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய வந்த ராஜசேகர் மற்றும் இளங்கோவன் ஆகியோருக்கும் விருப்ப மனு பெறுவது தொடர்பாக வாய்த்த கராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் மாவட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அங்கிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமர குரு ஒன்றிய, நகர, பேரூர் கழகத்திற்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் விருப்பமனு அளிக்கலாம். ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு மட்டுமே உட்கட்சி தேர்தலில் பொறுப்புகள் வழங்கப்படும் எனக் கூறினார். இதனை ஏற்று நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுவை பெற்றுச்சென்றனர். மீண்டும் பூர்த்தி செய்த மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் மற்றும் கோஷ்டி பூசல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கல்வராயன் மலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
    கச்சிராயப்பாளையம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை உள்ளது. இந்த கல்வராயன் மலையில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியாக 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.

    இந்த கல்வராயன் மலையில் கரடி, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளும் அரியவகை மூலிகைகள் நிறைந்த செடிகள் விலை உயர்ந்த மரங்கள் உள்ளது.

    கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு, வெள்ளிமலை, இன்னாடு, கோமுகி, பாலப்பட்டு, என வனச்சரகங்கள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் வனவிலங்குகள் மற்றும் கல்வராயன்மலை வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கல்வராயன் மலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் வனவிலங்குகள் ஆர்வலர் மற்றும் தன்னார்வலர் கீர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் வனத்துறை ரேஞ்சர் கோவிந்தராஜ் தலைமையிலான வனக்காவலர்கள் மணிகண்டன்,

    செல்வராஜ், அக்சயசாமி, சதேஷ்குமார், ராம்குமார்,.சரவணகுமார், சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையின ரும் இணைந்து கல்வராயன் மலையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பூட்டை ஏரிக்கரை பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் தென்னரசு(வயது 72) விவசாயி. இவர் அவரது வீட்டின் மாடிப்படியில் ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின் தலையில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஏரவார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் குமரவேல் (வயது 29). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 10ம் அணியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இவருடன் பணிபுரிந்து வந்த நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அருகே கருங்காலி குப்பத்தை சேர்ந்த கலைவாணன் (30) மற்றும் சங்கராபுரம் அருகே ஆலத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (32) ஆகிய போலீஸ்காரர்கள் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் மாடூர் தனியார் பால் பண்ணை அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்து இடதுபக்கமாக திரும்பியதால் குமரவேல் மோட்டார் சைக்கிளும் கார்த்திக் மற்றும் கலைவாணன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்களும் கார் மீது மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் இறந்து போனார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கார் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், அம்மா பாளையம், வள்ளிமலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் ஆனந்த ராஜ் (22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர் அருகே நூதனமுறையில் மணல் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் காங்கியனூர் கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் விரைந்து சென்ற மணலூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த டெம்போவில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கள்ளிப்பட்டி கிராமத்தில் மொபட்டில் மணல் கடத்திய அய்யப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து 5 மூட்டை மணல் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அய்யப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் ஜம்பை கிராமத்தில் சதீஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை மணல் கடத்திய போது போலீசார் மடக்கி பிடித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    சங்கராபுரம் அருகே பள்ளிக்கு நடந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சொந்த செலவில் ஆட்டோ வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சோழம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு மூரார்பாளையம், வனக்காடு, நெடுமானூர், காட்டுக்கொட்டாயர் போன்ற பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் வருகின்றனர்.

    போதிய பஸ் வசதி இல்லாததால் இந்த கிராமங்களில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் மாணவர்களில் பள்ளி படிப்பை நிறுத்தி விடலாம் என பெற்றோர்கள் முடிவு செய்னர். இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் திலிப்குமார், ஜோஸ்பின்மேரி, கலையரசி, சுதா,சாஷிதாபேகம் ஆகியோர் முன்வந்து தங்களது சொந்த செலவில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ வாங்கி கொடுத்தனர். குறைந்த ஊதியத்தில் ஆட்டோவை ஓட்டுவதற்கு வேல்முருகன் என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி கூறியதாவது:-

    பள்ளிக்கு மாணவ-மாணவிகள் நடந்து செல்வதை பார்த்து மனவேதனை அடைந்தேன். அப்போது 2 மாணவர்கள் சோர்ந்து போய் கீழே அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்த நான் மாணவர்கள் ஏன் வகுப்பிற்கு செல்லவில்லை என்று விசாரித்த போது நடந்து வந்ததால் கால் வலி, உடல் சோர்வு, மற்றும் பசி மயக்கம் என்று கூறினார்கள்.

    உடனே நான் எனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று காலை உணவு வாங்கி கொடுத்தேன். உடனடியாக இதே போன்று எத்தனை மாணவர்கள் நடந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்று கணக்கெடுத்தேன். இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வருகிறார்கள் என தெரிந்தது.

    இது தொடர்பாக உடனடியாக என்னுடன் பனியாற்றும் ஆசிரியர்களிடம் ஒன்று கூடி முடிவு எடுத்து எங்களது சொந்த செலவில் பணம் சேர்த்து ஆட்டோ வாங்கினோம். அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் முககவசம் மற்றும் சானிடைசர் மற்றும் வாந்தி, தலைவலி, காய்ச்சல், சிறு காயங்கள் போன்றவற்றிக்கு பள்ளியில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
    சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி ஆனந்தி(வயது25). இவருக்கும் எதிர் வீட்டை சேர்ந்த விஜயகுமார் மனைவி நிஷாந்தி (26) என்பவருக்கும் கோழி மேய்ந்தது சம்பந்தமாக வாய்ச்சண்டை நடந்தது. இதன் முன்விரோதம் காரணமாக நிஷாந்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆனந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இது குறித்த புகாரின் பேரில் நிஷாந்தி, அஞ்சலை, மீனா, திருமூர்த்தி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிந்து உள்ளார். இவர்களில் திருமூர்த்திகைது செய்யப்பட்டார்.
    ×