என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் பகுதியில் மணிமுக்தா ஆற்றில் மணல் கொள்ளை
    X
    தியாகதுருகம் பகுதியில் மணிமுக்தா ஆற்றில் மணல் கொள்ளை

    தியாகதுருகம் பகுதியில் மணிமுக்தா ஆற்றில் மணல் கொள்ளை

    தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆறும் இணைந்து மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையனாச்சி, கூத்தக்குடி ஆகிய ஊராட்சிகளில் வழியாக தண்ணீர் கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது.

    இந்த ஆற்றில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றுப்பகுதியில் மணல் வளம் செழிப்பாக காணப்பட்டது. தற்போது மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆற்றில் மணல் எடுக்க ஆற்றின் ஓரமாக வாகனங்களை நிறுத்தி விட்டும், ஆற்றின் கரை ஓரங்களில் பாதைகள் அமைக்கப்பட்டும் மினி லாரிகளில் ஹைட்ராலிக் பொருத்தப்பட்டு இரவு நேரங்களில் மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு மணல் அள்ளுவதற்காக மட்டும் சித்தலூரில் 2, உடையனாச்சி 2, ராமநாதபுரம் 1, கொங்கராயபாளையம் 1, கூத்தக்குடி 3 மினி லாரி உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட மினி லாரிகள் 2 யூனிட் கொள்ளளவில் ஆற்றில் மணல் ஏற்றுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மினி லாரிகளிலும் இரவு நேரங்களில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஆற்றில் மணல் திருட்டுத்தனமாக அள்ளுவதற்க்கு காவல்துறையினருக்கு மாமூல் வழங்கப்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். ஒரு சில இடங்களில் சாக்குப்பைகளில் மணல் மூட்டைகளை கட்டி ஆற்றின் கரை பகுதியில் கொண்டு வந்து வைத்து விடுகின்றனர். தொடர்ந்து அங்கு வரும் மினி லாரியில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

    மேலும் சிலர் இரு சக்கர மோட்டார் சைக்கிளில் சாக்குமூட்டையில் மணல் விற்பனை செய்வதாகவும், மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றிச் சென்று விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு மணிமுக்தா ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலம் சமூகவிரோதிகள் மணல் எடுத்துச் செல்லும் வழியில் பள்ளங்கள் தோண்டி ஆற்றில் மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும்.

    போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் மேலும் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×