என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பெருங்களத்தூர்-பல்லாவரத்தில் இளம்பெண்-என்ஜினீயரை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பெருங்களத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் ஜமுனாராணி. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணிமுடிந்து வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பெருங்களத்தூர் இரணியம்மன் கோவில் அருகே வந்தபோது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.

    திடீரென அவர்கள் ஜமுனா ராணியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். முகத்தில் பலத்த காயம் அடைந்த ஜமுனா ராணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லாவரம், மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் அவர் பணிமுடிந்து பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் குமாரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர்.

    இந்த இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கழுகுன்றம் அருகே பாலாற்று பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஆனூர் பாலாற்று பகுதியில் இன்று வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடைந்தனர். அருகில் வி‌ஷபாட்டில் கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுகுன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அவர்கள் காதல் ஜோடியான திருக்கழுகுன்றத்தை அடுத்த எலுமிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ் (19), சவுமியா (17) என்பது தெரிந்தது.

    இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

    இந்தநிலையில் பிரதீப்ராஜும், சவுமியாவும் பாலாற்று பகுதியில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பிரதீப்ராஜ் பேண்ட் மியூசிக்கராவார். சவுமியா பிளஸ்-2 முடித்துள்ளார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அச்சரப்பாக்கத்தில் இன்று காலை தினகரன் கட்சி செயலாளரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த தேன்பாக்கத்தில் வசித்து வந்தவர் பாலமுருகன் (வயது 37). இவர் தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார்.

    பாலமுருகன் அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் டீக்கடை நடத்தி வந்தார். தினமும் அதிகாலை 4 மணிக்கு கடையை திறப்பது வழக்கம்.

    இன்று காலை அவர் வழக்கம் போல் கடையை திறந்தார். சிறிது நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கடையின் அருகே உள்ள இடத்துக்கு சென்று விட்டு திரும்பி நடந்து வந்தார்.

    அப்போது அருகில் உள்ள கடைகளில் ஆங்காங்கே பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாளுடன் பாலமுருகனை சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் பாலமுருகனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டீக்கடையில் இருந்தவர்களும், அவ்வழியே வந்தவர்களும் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கொலை திட்டத்தை முடித்த கும்பல் சிறிது தூரத்தில் தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அச்சரப்பாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா விரைவில் நடை ற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது பால முருகனுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே இந்த மோதலில் கொலை நடந்ததா? கட்சியினர் யாருடனும் மோதல் உள்ளதா? அல்லது தொழில் போட்டி ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொலையுண்ட பால முருகனுக்கு பவானி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
    கல்பாக்கம் அணுமின் நிலைய பெண் விஞ்ஞானி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி பிரிவில் விஞ்ஞானியாக பணி புரிபவர் செல்வியா. கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. அருகில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை மர்மநபர்கள் சுருட்டி உள்ளனர். எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    உயர் பாதுகாப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் கொள்ளை நடந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.

    காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதலில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காஞ்சீபுரம்:

    சென்னையில் இருந்து வேலூர் நோக்கி இன்று அதிகாலை அலுமினிய பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்றது. லாரியில் அதன் உரிமையாளர் வேலூர் சங்கர் பாளையத்தை சேர்ந்த சங்கர் (45) என்பவர் இருந்தார்.

    காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் கூட்டு ரோடு அருகே அதிகாலை 4 மணியளவில் மினி லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின் பக்கத்தில் திடீரென மினி லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் மினி லாரியில் இருந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டிய டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்றபட்ட தகராறு காரணமாக கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. ராஜகுமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். வெங்கடாசலபதி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ராஜகுமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த வெங்கடசலாபதி, ராஜகுமாரியின் உடலை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கண்ணகி நகர் போலீசார் விரைந்து சென்று ராஜகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜகுமாரி சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 
    மாமல்லபுரம் அருகே பண்ணை வீட்டில் மூதாட்டியிடம் 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தனர். அவர்களை தடுக்க முயன்ற மூதாட்டியின் கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே பையனூரில் உள்ள பண்ணை வீட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹேமசந்திரா ரெட்டி (வயது 75), இவரது மனைவி ஜெயம்மா (70) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் முன்பக்க கதவை நேற்று தட்டினர். அப்போது ஜெயம்மா கதவை திறந்தார். உடனே மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமசந்திரா ரெட்டி, மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அதில் ஒருவன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஹேமசந்திரா ரெட்டியின் வயிற்றில் குத்தினான். பின்னர் 10 பவுன் தங்க சங்கிலியுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ஆபத்தான நிலையில் ஹேமசந்திரா ரெட்டி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்த காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி அங்கு வந்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரத்தில் உரக்கடை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் எம்.எம். அவென்யூவில் வசித்து வருபவர் ஹரிகரன். இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உரக்கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு கடையை மூடிவிட்டு காமராஜர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம்.

    நேற்று இரவு அவர் விற்பனை பணம் ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தார். பணத்தை பையில் வைத்து வண்டியின் முன் பகுதியில் தொங்க விட்டு இருந்தார்.

    காமராஜர் சாலையில் வந்து கொண்டு இருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஹரிகரன் வண்டியில் தொங்க விட்டிருந்த ரூ. 3 லட்சம் இருந்த பணப்பையை பறித்தனர்.

    இதில் நிலைதடுமாறிய ஹரிகரன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் ஹரிகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    ஹரிகரன் தினமும் பணத்தோடு வீடு திரும்புவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்களை பிடிக்க விஷ்ணு காஞ்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநீர்மலையில் குண்டாக இருப்பதாக கூறி மாணவர்கள் கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    திருநீர்மலை. ரங்காநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகள் கல்பனா (வயது 14). குரோம்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கல்பனாவின் உடல் சற்று குண்டாக இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி உடன் படிக்கும் மாணவிகள் சிலர் கிண்டல் அடித்தனர்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் இதுகுறித்து பெற்றோரிடம் கூறி வருத்தம் அடைந்தார். அவர்கள் கல்பனாவுக்கு ஆறுதல் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சோகத்தில் இருந்த கல்பனா நேற்று இரவு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கல்பனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கல்பட்டு அருகே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    விருதுநகர் மாவட்டம் வீரசோழம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). தி.மு.க.வில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதிஅஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதே பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர்கள் 7 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். டிரைவர் ஜெயமுருகன் காரை ஓட்டினார். மதுராந்தகம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ஜெயமுருகனை ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு மணிவண்ணன் காரை இயக்கினார்.

    செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த டிரைவர் ஜெயமுருகன், பெரியசாமி, மாரிமுத்து, செல்லத்துரை, தங்கப்பாண்டியன், ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த 6 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பலியான மணிவண்ணனுக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    காஞ்சீபுரம்:

    தி.மு.க.வின் வரலாற்றில் காஞ்சீபுரம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அக்கட்சியினை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் ஆகும்.

    மறைந்த கருணாநிதி காஞ்சீபுரத்தில் இருந்த திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில்தான் பெரும் காலத்தினை கழித்தவர். கருணாநிதிக்கு மிகவும் பிடித்த ஊரான காஞ்சீபுரத்தில் அவரின் மறைவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    மாவட்டம் முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

    டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சீபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் அடுத்த பொன்னேரிக்கரை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வேன்கள் மற்றும் லாரிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை நோக்கிச் சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கல்பாக்கம் அருகே கணவர் கொலையில் ஜாமீனில் வந்த பெண் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரமதி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சந்திரமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் செல்வம், மனைவி சந்திரமதியை கண்டித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி கூவத்தூர் அருகே செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சந்திரமதியும், கள்ளக்காதலன் ஆனந்தும் சேர்ந்து செல்வத்தை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இந்த வழக்கில் சந்திரமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 மாதத்துக்கு முன்பு சந்திரமதி ஜாமீனில் வெளியே வந்தார்.

    குழந்தைகளை பார்க்க அடிக்கடி கணவர் வீட்டுக்கு வந்தார். இதற்கு அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலை சந்திரமதி மீண்டும் குழந்தைகளை பார்க்க ஆயப்பாக்கத்துக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து நகை மற்றும் உடமைகளை கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் சந்திரமதிக்கும், உறவினர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் உருட்டுக்கட்டையால் சந்திரமதியை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    போலீசார் விரைந்துவந்து உயிருக்கு போராடிய சந்திரமதியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இறந்தார்.

    கொலை தொடர்பாக சந்திரமதியின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலையுண்ட சந்திரமதி கணவரை வெறுத்தாலும் குழந்தைகள் மீது பாசத்தில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த பின் ஆதனூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கணவர் வீட்டாரிடம் அடிக்கடி கேட்டு இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சமாதானம் பேசி அவரை அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் சந்திரமதி குழந்தைகளை பார்க்க சென்ற போது கணவரின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×