என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது போந்தூரை சேர்ந்த வேல் முருகன், சீனு,சேட்டு ஆகிய 3 பேர் அங்குள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பது தெரிந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து1கிலோகஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை பரங்கிமலை பட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஜ்குமார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது தந்தையுடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கிண்டி கத்திப்பாரா பாலம் அருகே போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் பகுதியில் சென்ற போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில் மிரட்டி காரில் இருந்த 2 சூட்கேஸ்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஹரிஜ்குமார் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பரங்கிமலை துணை கமிஷனர் முத்துஅலி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்தி வியாசர்பாடியை சேர்ந்த ரத்னம், ஜெகதீஸ்வரன் அபினேஷ், டில்லிபாபு, பிரகாஷ், சரவணன், திருவொற்றியூர் லியோ, அண்ணாநகர் லாரன்ஸ் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வியாசர்பாடி பகுதியில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு துணை கமிஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
நந்தம்பாக்கத்தை அடுத்த மனப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி (38) என்பவருக்கும் இணைய தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் இந்த தொடர்பு தீவிரமானது. அந்த இளம் பெண்ணும் சசிகாந்த் சிவாஜியும் வியாபாரம் தொடர்பாக பேசிக்கொண்டனர். இந்த நிலையில் சசிகாந்த் சிவாஜியை சந்திக்க இந்த இளம்பெண் புனே சென்றார்.
இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் நெருங்கிப் பழகினார்கள். வாலிபர் சசிகாந்த் சிவாஜி தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அந்த பெண் இருந்தார்.
இந்த நிலையில், அந்த பெண்ணை வற்புறுத்தி சசிகாந்த் சிவாஜி பலமுறை உறவு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் மனப்பாக்கத்துக்கு திரும்பினார்.
சில தினங்களில் அங்கு வந்த சசிகாந்த் சிவாஜி அந்தபெண்ணின் வீட்டில் தங்கினார். இருவரும் கணவன்-மனைவி போல இருந்து வந்தனர்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில், சசிகாந்த் சிவாஜி திடீர் என்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் புனே சென்று வாலிபர் சசிகாந்த் சிவாஜியை சந்தித்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சென்னை திரும்பினார். நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், “சசிகாந்த் சிவாஜி திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து விட்டதாகவும், வியாபாரம் செய்வதாக கூறி ரூ.10 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து வாங்கி மோசடி செய்து விட்டதாகவும்“ கூறி இருந்தார்.
இதையடுத்து, கடந்த 6-ந் தேதி போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மோகன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் புனே சென்று மணப்பாக்கம் பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வடமாநில வாலிபர் சசிகாந்த் சிவாஜியை கைது செய்தனர்.
சென்னை கொண்டு வரப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அவரை கைது செய்து கொண்டு வந்த தனிப்படை போலீசாரை, துணை கமிஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
சென்னை பழவந்தாங்கலை அடுத்த பூவரசம் பேட்டையில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இன்று காலையில் அம்மனை தரிசிக்க சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுபற்றி பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அம்மன் சிலையை பார்த்தனர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க சரடு மற்றும் வெள்ளியிலான சூலம், குத்து விளக்கு ஆகியவை கொள்ளை போயிருந்தது.
சுமார் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். உண்டியலை உடைக்கும் முயற்சியை மேற்கொண்ட கொள்ளை கும்பல் உடைக்க முடியாமல் விட்டு சென்றனர்.
கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். ஆடி மாதத்தில் உண்டியலில் காணிக்கை பணம் அதிகம் இருக்கும் என்று நினைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அவர்களால் அம்மனின் நகைகளை மட்டுமே கொள்ளையடிக்க முடிந்தது.
கடந்த ஆண்டும் இதே போல ஆடி மாதத்தில் இந்த கோவிலில் கொள்ளையடித்துள்ளனர். அந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்குள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர்.

ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு பகுதியில் 2-வது நம்பர் கேட் அருகே 3 துணிப்பைகள் கேட்பாரற்று கிடந்தன.
நீண்ட நேரமாக அங்கு கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
போலீஸ் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் துணிப்பை பரிசோதிக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு இல்லை. ஆனால் பயன்படுத்தும் பழைய ஆடைகள் மட்டுமே இருந்தன.
இதற்கிடையே அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர்கள் கொல்கத்தா செல்ல நேற்று இரவே இங்கு வந்து தங்கியிருந்ததாக கூறினர். டீ குடிக்க சென்ற போது தங்களது பைகளை இங்கு வைத்து சென்றதாக தெரிவித்தனர். எனவே அவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
பைகள் கிடந்த பகுதியில் போலீசார் யாரையும் நடமாட விடவில்லை. பலத்த கெடுபிடி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவரது மகள் நிவேதா (வயது 9). அதே பகுதியில்உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று அவர் தோழிகளுடன் அதே பகுதியில் உள்ள ஏரியில் விளையாட சென்றார். அப்போது அனை வரும் ஏரியில் குளித்தனர்.
ஆழமான பகுதிக்கு சென்ற நிவேதா தண்ணீரில் மூழ்கினார். உடன் வந்த தோழிகள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி நிவேதாவை தேடினர். சுமார் ½ மணி நேரத்துக்கு பின்னர் நிவேதா பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அச்சரப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார். அச்சரப்பாக்கத்தில் டீக்கடையும் நடத்தி வந்தார்.
நேற்று அதிகாலை பால முருகன் டீக்கடையை திறந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் இறந்தார்.
இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக பாலமுருகனின் உறவினரான மகேஷ் உள்பட 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காந்தி நகரில் உள்ள கோவில் திருவிழா தொடர்பாக பால முருகனுக்கும், சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் பால முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
திண்டிவனத்தை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. கூலிப்படையினரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.
மாமல்லபுரம் அருகே உள்ள பையனூரில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரா ரெட்டி (வயது 75). இவரது மனைவி ஜெயாம்மா (68). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த 9-ந்தேதி காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் ஜெயாம்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஜெயாம்மா வீட்டிற்குள் சென்ற போது உள்ளே புகுந்த 2 பேரும் அவரை கத்தி முனையில் மிரட்டி நகையை பறிக்க முயன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமச்சந்திரா, கொள்ளையர்கள் 2 பேரையும் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஹேமச்சந்திரா, அவரது மனைவி ஜெயாம்மா ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தினர். பின்னர் ஜெயாம்மா கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயம் அடைந்த 2 பேருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரங்கிமலை ரெயில் விபத்திற்கு பிறகு மின்சார ரெயில்கள் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
பாஸ்ட் ரெயில்கள் அனைத்தும் சாதாரண மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால் கடந்த 2 வாரமாக ரெயிலில் அடிபட்டு உயிர் இழக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் இடையே இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் தற்போது அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வதால் தாமதமாக செல்வதாக புறநகர் ரெயில் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்று காலை ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் செங்கல்பட்டு-கடற்கரை மின்சார ரெயில் பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். விரைவு மின்சார ரெயிலை இயக்காததால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், கல்லூரிகளுக்கு போக முடியவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி தண்டவாளத்தில் அமர்ந்தனர்.
இதனால் மின்சார ரெயில் சேவை இரு மார்க்கமும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.
செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரெயிலையும் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அதிகாரிகள் பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
செங்கல்பட்டில் இருந்து முன்பு காலை 8.15 மணிக்கு விரைவு மின்சார ரெயில் புறப்பட்டு வரும். இந்த ரெயிலில் பயணம் செய்தால் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள் சரியான நேரத்திற்கு சென்று வந்தனர். அந்த ரெயில் இப்போது சாதாரன மின்சார ரெயிலாக மாற்றி காலை 8.30 மணிக்கு புறப்படுவதால் தாமதமாக பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவு மின்சார ரெயிலாக அதனை மீண்டும் இயக்க வேண்டும். அப்போதுதான் புறநகர் பயணிகளுக்கு அது உதவியாக இருக்கும் என்றனர். #ChengalpattuTrain
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் 2 தங்க நகைகள் இருந்தன. அவரது சேலையில் 10 தங்க நகைகள் டிசைன்கள் போல வைத்து கடத்தி வந்தார். அந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் எடை 650 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.20 லட்சம்.
அந்த பயணியிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் விமலேஷ்வரி என்றும் மலேசியாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






