search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urapakkam railway station"

    ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மின்சார ரெயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    பரங்கிமலை ரெயில் விபத்திற்கு பிறகு மின்சார ரெயில்கள் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    பாஸ்ட் ரெயில்கள் அனைத்தும் சாதாரண மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால் கடந்த 2 வாரமாக ரெயிலில் அடிபட்டு உயிர் இழக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் இடையே இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் தற்போது அனைத்து நிலையங்களிலும் நின்று செல்வதால் தாமதமாக செல்வதாக புறநகர் ரெயில் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்று காலை ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் செங்கல்பட்டு-கடற்கரை மின்சார ரெயில் பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். விரைவு மின்சார ரெயிலை இயக்காததால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், கல்லூரிகளுக்கு போக முடியவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

    இதனால் மின்சார ரெயில் சேவை இரு மார்க்கமும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.

    செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரெயிலையும் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அதிகாரிகள் பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

    செங்கல்பட்டில் இருந்து முன்பு காலை 8.15 மணிக்கு விரைவு மின்சார ரெயில் புறப்பட்டு வரும். இந்த ரெயிலில் பயணம் செய்தால் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள் சரியான நேரத்திற்கு சென்று வந்தனர். அந்த ரெயில் இப்போது சாதாரன மின்சார ரெயிலாக மாற்றி காலை 8.30 மணிக்கு புறப்படுவதால் தாமதமாக பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவு மின்சார ரெயிலாக அதனை மீண்டும் இயக்க வேண்டும். அப்போதுதான் புறநகர் பயணிகளுக்கு அது உதவியாக இருக்கும் என்றனர். #ChengalpattuTrain
    ×