என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மோசமான வானிலை காரணமாக மைசூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து மைசூருக்கு நேற்று இரவு தனியார் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் மைசூரில் இறங்க முடியவில்லை. எனவே, சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    அதைதொடர்ந்து, அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதிகாரிகள் தரை இறங்க அனுமதி அளித்தனர்.

    இந்தநிலையில், விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே, அவசரமாக தரை இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

    உடனே தரை இறங்கி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த அந்த விமானம் திடீர் என்று பாதி வழியில் நின்றது. இதனால் முதலாவது ஓடு தளத்தில் தரை இறங்க வேண்டிய சென்னை விமானங்கள் 2-வது ஓடு தளத்தில் தரை இறக்கப்பட்டன.

    இந்த விமானத்தில், 47 பயணிகள், 5 ஊழியர்கள் உள்பட 52 பேர் இருந்தனர். சரியான நேரத்தில் விமானி கோளாறை கண்டு பிடித்து அவசரமாக விமானத்தை தரை இறக்கியதால் 52 பேரும் உயிர் தப்பினார்கள்.

    ‘ஓடு தளத்தில் நின்ற விமானத்தில், சற்று நேரத்துக்கு முன்பு இது நிகழ்ந்திருந்தால், பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானியின் சாமார்த்தியத்தால் 52 பேர் உயிர் பாதுகாக்கப்பட்டு உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓடுதளத்தில் நின்ற விமானம் இழுவை வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு போகப்பட்டு எந்திரம் சரி செய்யப்பட்டது. பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தரீக் (வயது 36), சையத் முகமது பாரீஸ் (34), தஸ்தகீர் (34), சென்னையை சேர்ந்த சிக்கந்தர் மஸ்தான் (34), ரகுமான்கான் (31) ஆகிய 5 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் கால் சட்டை மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சீயாட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). கூலித்தொழிலாளி. மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வலி தாங்க முடியாமல் மனம் உடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். 

    அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம் அருகே 18 வயதுடைய கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர் மசூதி காலனியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 20). இவர், மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.

    இவர், 18 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானார். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.

    ஆனால் ஷேக் முகமது, மாணவியை திருமணம் செய்ய மறுத்தார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் முகமதுவை கைது செய்தனர்.
    தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை வாங்கி கொடுக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்கலவாக்கம் கிராமம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் சுனில் (வயது 19). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.

    இவர், தனது தந்தை பாலாஜியிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு அவர், தீபாவளிக்கு முந்தைய நாள் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

    ஆனால் சுனில், உடனடியாக தனக்கு புத்தாடை வாங்கி தரும்படி தந்தையை வலியுறுத்தினார். மேலும் தனது தந்தை உடனடியாக புத்தாடை வாங்கி கொடுக்காததால மனமுடைந்த சுனில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமானங்களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    ஆலந்தூர்:

    நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைவரும் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக உள்ளனர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்திலும், பொதுமக்கள் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முண்டியடித்தனர். பஸ், ரெயிலில் டிக்கெட் கிடைக்காத பலர் கடைசி நேரத்தில் விமானங்களில் சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டிருக்கின்றனா். இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கிற்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது முதல் இதுவரை அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 180 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

    தற்போது தீபாவளி பண்டிகை காரணமாக பயணிகள் வரத்து அதிகமானதால் நேற்று முதல் 200 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 100 விமானங்கள் செல்வதற்கும், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து 100 விமானங்கள் வரவும் உள்ளன. மத்திய அரசு அதிகபட்சமாக 60 சதவீத உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதியளித்து உள்ளது.

    இந்த அடிப்படையில் விமான சேவை எண்ணிக்கை தற்போது 240 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி நெருங்குவதையொட்டி, முந்தைய நாட்களான குறிப்பாக வரும் 13-ந் தேதி வரை பயண டிக்கெட்களின் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்ல வழக்கமாக ரூ.3,500 இருந்த கட்டணம் தற்போது ரூ.6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதுவே உயர் வகுப்பாக இருந்தால் கட்டணம் ரூ.20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3 ஆயிரமாக டிக்கெட் கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,500 டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. சேலத்திற்கு ரூ.2,300 குறைந்த பட்ச கட்டணம் தற்போது ரூ.3,900 வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, மும்பை, ஐதராபாத் ஆகிய வழித்தடங்களிலும் விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தீபாவளிக்கு முந்தைய தினமான 13-ந் தேதி வரைதான் இந்த கூடுதல் கட்டணம் இணையதளத்தில் காட்டுகிறது. தீபாவளி தினமான 14-ந் தேதியில் இருந்து மீண்டும் பழைய குறைந்த கட்டணமே இணையதளத்தில் காட்டுகிறது.

    இதுபற்றி விமான நிறுவன வட்டாரங்களில் கேட்டதற்கு, விமானங்களில் தீபாவளி கூட்டம் காரணமாக குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவாகிவிட்டன. தற்போது அதிக கட்டண டிக்கெட்டுகள் மற்றும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் தான் கிடைக்கப்பெறுகிறது. இது வழக்கமான நடைமுறை தான் என்று தெரிவித்தனர். இந்த திடீா் கட்டண உயர்வால் தீபாவளி கொண்டாட விமானத்தில் சொந்த ஊர் செல்ல இருந்த பயணிகள் கவலையடைந்து உள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் டாக்டர் தம்பதியிடம் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்துர் ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 40). பிசியோதெரபி டாக்டர். இவரது மனைவி ஜோஸ் அனிஸ்டல் (37). ஓமியோபதி டாக்டர். அருள் தாஸ், மற்றும் ஜோஸ் அனிஸ்டல் இருவரும் வீட்டின் முன் பகுதியில் கிளினிக் வைத்துள்ளனர்.

    நேற்று அதிகாலை அருள் தாஸ் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் வீட்டின் மாடி கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு அருள் தாஸ் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து எழுந்தனர். வீட்டில் புகுந்த மர்மநபர்கள் கத்திமுனையில் டாக்டர் தம்பதியை மிரட்டி பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர். அருள்தாஸ் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் செல்லும்போது கண்காணிப்பு கேமரா பதிவை எடுத்து சென்றனர். கொள்ளையர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து இருந்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள புதுநல்லூர் அண்ணா நகர் தளபதி தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் என்கிற ஜேசுதாசன் (வயது 54). இவருடைய மகன் இஸ்ரவேல் மோசஸ் (26). தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இருவரும் வீட்டில் இருந்தபோது இஸ்ரவேல் மோசசை ஒருவர் அழைத்துள்ளார்.

    இஸ்ரவேல் மோசஸ் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இருந்த மர்ம நபர்கள் அவரை தந்தையின் கண் முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயம் அடைந்த இஸ்ரவேல் மோசஸ் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஞானராஜ் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பழைய நல்லூர் பகுதியில் வசிக்கும் நவமணி (26) என்பவர் முன்விரோதம் காரணமாக தூண்டுதலின் பேரில்தான் அட்டை என்கிற வெங்கடேஷ், (19) எலி அப்பு என்கிற விக்னேஷ், (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து எனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    எனவே இவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நவமணி, வெங்கடேஷ், விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா உறுதி செய்யப்பட்ட மகேஸ்வரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 22). தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நங்கநல்லூரில் வேலை முடிந்து மயிலாப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றார். இந்த நிலையில், அவர் ஆலந்தூர் கத்திப்பாரா மேம்பால சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பெருங்குடி நோக்கி சென்ற தண்ணீர் லாரி ஒன்று, இவர் மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

    அதேபோல் ராமாபுரத்தில் உள்ள மருந்தகம் நிறுவனத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (40), தர்மபுரியை சேர்ந்த திவாகர்(22) ஆகியோர் நேற்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் நந்தம்பாக்கம் மவுண்ட் சாலையில் சென்றனர். அப்போது கிண்டி நோக்கி சென்ற கூரியர் வேன் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர்.

    அப்போது சுப்பிரமணியன் மீது வேன் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, காயங்களுடன் கிடந்த திவாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த 2 விபத்துகள் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சிறப்பு விமானத்தில் ரூ.70½ லட்சம் தங்கத்தை கடத்தி வந்த 6 பேரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதில் இருந்து வந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது செரீப் (வயது 39), அஜ்மீர் ஹாஜா (26), நைனா முகமது (53), திருச்சியை சேர்ந்த ஜெகதீஷ் (55), புதுக்கோட்டையை சேர்ந்த சாகுல் அமீது (33), சென்னையை சேர்ந்த முகமது ஆசிப் (23) ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்களது கால் சட்டை மற்றும் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த வகையில் அவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.70 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 312 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    பெரிய காஞ்சீபுரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி தாங்க முடியாத வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×