என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி, மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் மாளவிகா (வயது 20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலுள்ள அறைக்குள் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்துஉள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது மாளவிகா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாளவிகாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாளவிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.

    இறந்துபோன மாளவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில், மாளவிகா உடன் பயிலும் மாணவர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உறவினர் மகனை திருமணம் செய்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக மாளவிகா தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மேலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்தனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் சுற்றி திரிந்ததால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் தாமதம் ஏற்பட்டது.

    எனவே பொதுமுடக்கத்தை மேலும் கடுமையாக்க முடிவு செய்து இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

    பொதுமக்கள் தங்களுக்கு தேலையான பொருட்களை வாங்க வசதியாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதித்தது. அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    நகரில் காந்தி சாலை, காமராஜர்சாலை, மூங்கில் மண்டபம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. முக்கியமாக காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறிகளின் விற்பனையும் 2 முதல் 3 மடங்கு அளவுக்கு அதிகரித்து இருந்தது.

    இதே போன்று சூழ்நிலையை பயன்படுத்தி காய்கறி வியாபாரிகள் விலையை அதிகரித்திருப்பது கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் புலம்பினார்கள்.

    காய்கறிகள் வரத்து குறைவு காரணமாகத்தான் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ சுகாதார ஆய்வாளர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள் சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆஸ்பத்திரி சேர்க்கை, உடல் நலம் சார்ந்த சந்தேகம், படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை பெற 044 27237107, 27237207, 27237784, 27237785, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-8978, 9345440662 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு தரைகிணற்றின் மேல் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சுமதி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பஸ்நிலையத்தில் தொடங்கப்பட்ட காய்கறி சந்தையில் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க அனுமதிக்காமல் பல்வேறு பகுதிகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மட்டும் காய்கறிகள் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக செயல்பட்டுவந்த காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறிச்சந்தை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

    அத்தியாவசிய பொருளான காய்கறிகளை தட்டுப்பாடின்றி விற்பனை செய்வதற்காக காஞ்சீபும் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறிச்சந்தை அமைத்து கொடுக்க காஞ்சீபுரம் பெருநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி காஞ்சீபுரம் பெருநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு காய்கறி வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து நேற்று முதல் ரெயில்வே ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ராஜாஜி காய்கறிச்சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் செயல்பட தொடங்கியது.

    பஸ்நிலையத்தில் தொடங்கப்பட்ட காய்கறி சந்தையில் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க அனுமதிக்காமல் பல்வேறு பகுதிகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மட்டும் காய்கறிகள் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் செயல்பட ஆரம்பித்த காய்கறி சந்தையை காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் காய்கறி வாங்க அனுமதிக்கப்படாததால் காய்கறி சந்தை வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டது.

    மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் காய்கறிகள் விற்பனையாகாததால் மனவதனை அடைந்தனர்.
    காஞ்சீபுரம் சரகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி ஊர் சுற்றக்கூடியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யதனர்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி ஊர் சுற்றக்கூடியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அந்த வகையில் கடந்த 15-ந்தேதி முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 வாகனங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் என காஞ்சீபுரம் சரகத்தில் 2,014 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 2,245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது
    ஆலந்தூர்:

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதல் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி இந்திய விமானப்படையின் தனி விமானம் நேற்று இரவு டில்லியிலிருந்து சென்னை பழைய விமானநிலையம் வந்தது. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் வெண்டிலேட்டர்கள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் 35 பார்சல்களில், மொத்தம் 888 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன.

    சென்னை விமானநிலைய அதிகாரிகள் மருத்துவ பார்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    ‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு ‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது மங்களூருவைச் சேர்ந்த முகமது அரபாத் (வயது 24) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ‘எமர்ஜென்சி’ விளக்கு ஒன்று இருந்தது. ஆனால் அது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், ‘எமர்ஜென்சி’ விளக்கை பிரித்து பார்த் தனர்.

    அதில் பேட்டரிக்கு பதிலாக தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அரபாத்தை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகமது அஸ்ரப் (வயது 21) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் ஒருவித பதற்றத்துடன் இருந்தார். அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாகவும் பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

    ஆனால் அவர் நடக்கும்போது ஒரு காலை நொண்டியபடி ஒருவிதமாக நடந்து வந்தார். அதுபற்றி அதிகாரிகள் கேட்டதற்கு, கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக காலில் கட்டுப்போட்டு இருப்பதாகவும் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது காலில் கட்டி இருந்த கட்டை பிரித்து சோதனை செய்தனர். அதில் அந்த கட்டுக்குள் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக முகமது அஸ்ரப்பை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர். அதில், துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் ஏற வந்தபோது அங்கிருந்த ஒருவர் இதை எனது காலில் கட்டிவிட்டார். சென்னை விமான நிலையத்தில் ஒருவர் வந்து இந்த கட்டை பெற்றுக்கொள்வார் என்று கூறியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரை விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்திருந்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (39) என்பவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.
    உத்திரமேரூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த அரசாணி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் அதே கிராமம் நியூ பாரதி நகரை சேர்ந்த ஹரிதா வயது 20 என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ஹரிதாவுக்கு கரு கலைந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ஹரிதா வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவரை உடனடியாக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தாம்பரம் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
    உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மடம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள சிலர் புதுச்சேரியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர். இதையடுத்து மடம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

    அப்போது அவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி‌ 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர் 54 வயதானவர். இவர் கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சீபுரம்‌ செட்டியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் 2 மணியளவில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காஞசீபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா தொற்று காரணமாக அவர் நேற்று மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இநதநிலையில் இது போன்ற முடிவு எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
    ×