என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சுயஉதவி குழுக்களுக்கு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நுண்கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி ஊரக மற்றும் நகர்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தநிலையில், அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களில் மக்கள் கடன் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மேற்படி குழுக்கள் பெற்ற கடன் தவணை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்தக்கோரி வற்புறுத்த வேண்டாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் புதிதாக கடன் உதவி தேவைப்படும் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவிடலாம்.

    இதுதொடர்பாக நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் மற்றும் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் விவரம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 044-27236348 / 9342340815 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குடியுரிமை அதிகாரிகள், போலி பாஸ்போா்ட்டில் துபாயில் இருந்து சென்னை வந்த நபரை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனா்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட்டு மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

    அப்போது தஞ்சாவூரைச் சோ்ந்த பஷீா்அலி (வயது 40) என்ற பாஸ்போா்ட்டுடன் ஒருவா் வந்தாா். அவா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய பாஸ்போா்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, அது போலியான பாஸ்போா்ட்டு என்று தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரை வெளியே விடாமல் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினா்.

    அதில், அவருடைய உண்மையான பெயா் சிவகுமாா் (39) என்பது தெரிந்தது. தஞ்சாவூரை சோ்ந்த இவா், 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய்க்கு சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்தாா்.

    பின்னர் அவா் சொந்த ஊா் திரும்ப முடிவு செய்தாா். ஆனால் சுற்றுலா பயணி விசாவில் சென்ற இவருடைய உண்மையான பாஸ்போா்ட்டை பயன்படுத்தி இந்தியா திரும்ப முடியாது என்பதால் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து பஷீா்அலி என்ற பெயரில் போலியான பாஸ்போா்ட்டு பெற்று சென்னை திரும்பி வந்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், போலி பாஸ்போா்ட்டில் வந்த தஞ்சாவூரை சோ்ந்த சிவகுமாரை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனா். குற்றப்பிரிவு போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, கைதான சிவகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது.இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சார்ஜா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

    ஆலந்தூர்:

    சார்ஜாவிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்அரேபியா சிறப்பு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவில் வந்தது.

    அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் முகமது(55), மதுரையை சேர்ந்த சுடர்மணி(33) ஆகிய இருவரின் பாஸ்போர்ட்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது.இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சார்ஜா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

    அதன்பின்பு அங்கிருந்து சட்டவிரோதமாக, இந்திய அரசின் அனுமதியின்றி,தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின்பு தற்போது மீண்டும் சார்ஜா வழியாக சென்னை திரும்பியுள்ளனர் என்பதை ஆவணங்கள் மூலம் கண்டுப்பிடித்தனர்.

    இதையடுத்து இருவரையும் குடியுறிமை அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களுக்கு ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது.நாங்கள் வேலை செய்த நிறுவனம் தான்,எங்களை சில மாதங்கள் ஏமனில் வேலை செய்யும்படி அனுப்பி வைத்தனர் என்று கூறினர்.

    இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் இருவரையும் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு, அரசு அனுமதியின்றி சென்று வந்ததாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.

    அதுபோல் துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது தஞ்சாவூரை சேர்ந்த பஷீர்அலி(40) என்ற பயணியின் ஆவணங்களை சோதனை செய்யும்போது அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

    விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் சிவகுமார் என்றும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய்க்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. உண்மையான பாஸ்போர்ட் மூலம் இந்தியா திரும்ப முடியாது என்பதால்,ஏஜெண்ட்களிடம் பணம் கொடுத்து பஷீர்அலி என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் வாங்கி அதில் சென்னை வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் சிவகுமாரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் முதல் வாரத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னயில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய உள்நாட்டு சேவைகள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 350 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் போதிய பயணிகள் இல்லாததால் வெளி மாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் ஒரு நாளைக்கு 100-க்கும் குறைவான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

    இதில் உள்நாட்டு விமான பயணிகள் 25 ஆயிரம், வெளிநாட்டு விமான பயணிகள் ஆயிரம் பேர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

    விமானம்

    இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல் விமானங்கள் செல்வதால் மத்திய அரசு அறிவித்திருக்கும் 15 சதவீத டிக்கெட் கட்டண உயர்வை இதுவரை எந்த விமான நிறுவனமும் அமல்படுத்தவில்லை. தற்போது முழு ஊரடங்கு முடிந்து ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் முதல் வாரத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து டிக்கெட் விலை கட்டணத்தை பயணிகள் வருகையை பொருத்து விமான நிறுவனங்கள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊரடங்கு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவுபொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
    காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தினந்தோறும் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அவை வாலாஜாபாத், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் உணவு தயாரிக்கப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் சுகாதாரமின்றி உணவு தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிப்பவர்கள் தலையில் உள்ள முடி உதிர்ந்து விழாமல் இருக்க போட வேண்டிய மூடி போடாமல் இருந்தது, காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரித்தது போன்றவற்றை கண்டறிந்தனர். உணவை சுகாதாரான முறையில் தயாரிக்குமாறு கோவில் செயல் அலுவலர் ஆ.குமரனிடம் அறிவுறுத்தினர்.

    இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா கூறுகையில்:-

    சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக வீடியோ ஒன்று எடுத்து ஒருவர் அனுப்பி இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அங்கு விசாரணை மேற்கொண்டோம். உணவு சுவையானதாகவும், தரமானதாகவும் இருந்தது. ஆனால் முடி உதிராமல் இருக்க போட வேண்டிய மூடி மட்டும் போடாமல் இருந்தனர். தக்க அறிவுரைகளை வழங்கி உணவு தயாரிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்போரூர் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் கெஜலட்சுமி (23).

    இவர் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை பணி முடிந்து தனது அறைக்கு சென்ற கெஜலட்சுமி திடீரென வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை உடனடியாக மீட்டு திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கெஜலட்சுமி மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் கெஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவம்பாட்டி கிராமத்தை் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அஞ்சலை (வயது 65). உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.

    சில நாட்கள் இவர் மாத்திரைகளை சரிவர சாப்பிடாததால் அவரது மகன் குமரவேல் மாத்திரை சாப்பிடும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அஞ்சலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அஞ்சலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பெண் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் கண்ணகப்பட்டு படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி பாரதி (வயது 53). அ.தி.மு.க. மகளிர் அணி ஒன்றிய அவைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

    இவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து காய்ச்சல் சரியாகாததால் கடந்த 25-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிக்கு கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் அவர் நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது உடலை பெருங்குடி மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கினையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 5 ஆயிரம் வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வில்லா முழுஊரடங்கு வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே சுற்றிதிரியும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், காஞ்சிபுரம் நகரில் முக்கிய சந்திப்புகளான பூக்கடைச்சத்திரம், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா தலைமையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    அப்போது தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் நேற்று வரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்ததாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 850 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் புதபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி மலர் (34). கணவன், மனைவி இருவரும் மொபட்டில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் என்னும் இடத்தில் செல்லும்போது வேகமாக வந்த லாரி முருகன் ஓட்டிவந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் முருகன், மலர் இருவரும் தூக்கி விசப்பட்டனர். முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி மலரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காஞ்சீபுரம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 23). இவர் சுங்குவார் சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மது பழக்கதுக்கு அடிமையான அவர் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆனந்தனை அந்த வீட்டிலேயே பாட்டியுடன் விட்டுவிட்டு சுங்குவார் சத்திரம் பகுதியில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். தனது குடி பழக்கத்தால் குடும்பத்தினர் தன்னை பிரிந்து சென்று விட்டதாக மனஉளைச்சளில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் சாக போவதாக பதிவிட்டுள்ளார். நேற்று காலை ஆனந்தனின் உறவினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மூடியிருந்தது. நீண்ட நேரமாக கதவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார். ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் ஆங்காங்கே சாராய விற்பனையும் நடந்து வந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தை அடுத்த சாலவாக்கம், பெருநகர், மணிமங்கலம், சோமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் சிறு காவேரிப்பாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 21), ஜெயபால் (23), செந்தில்குமார் (35), கோனேரிக்குப்பத்தை சேர்ந்த பத்மா (36), அஞ்சலை (40) உள்பட 23 பேரை கைது செய்தனர்.

    மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தெரிவித்துள்ளார்
    ×