என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து நேற்று இரவு 164 பயணிகளுடன் சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர் என்பவர் திடீரென தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட் எடுத்து புகை பிடிக்கத் தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக விமான பணிப்பெண்கள் வந்து அவரை கண்டித்தனர். மேலும் விமானம் சென்னை வந்தவுடன் விமான நிறுவனம் சார்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சேவியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போரூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் பூமாலை (வயது52). இவர் சென்னை அசோக் நகர் 10-வது அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு குடியிருப்பவர்கள் பூமாலையை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பூமாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் குடியிருப்பு வாசல் முன்பு மதுபோதையில் தூங்கிய 4 வாலிபர்களை பூமாலை எழுப்பி அங்கிருந்து செல்லுமாறு கூறியதும் இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் அருகில் கிடந்த கம்பால் பூமாலையை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்கிற சபாபதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கானா கார்த்திக், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் பயணத்தின் போது நடக்கும் குறைகளை விமான நிலையத்தில் புகார் தெரிவிப்பது வழக்கம்.
சென்னை விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது என்று விமான பயணிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, இதை எப்படி சரி செய்யலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையை சுமார் 20 சதவீதம் வரை குறைக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஒரு பயணிக்கு ஒரு பொருளின் விலை நியாயமாக தோன்றும்போது அதுவே மற்றொரு பயணிக்கு அதிகமாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கொரோனா கட்டுப்பாடு காரணமாக விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் விற்பனை இல்லாமல் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். எனினும் பயணிகளின் நலத்தை விரும்பியே உணவு மற்றும் குளிர்பானங்ளின் விலையை முடிந்த அளவுக்கு குறைக்க முயற்சி செய்து வருகிறோம். பாக்கெட் செய்த பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கு விற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விரைவில் புதிய ஒருங்கிணைந்த முனையங்கள் வர இருக்கிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வணிகத்திற்கு என்றே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் உட்கார்ந்து சாப்பிடும் படி உணவகங்கள் அமைக்கப்படும்.
அது மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டிய பொருட்களும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இது இணைப்பு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அவர்கள் விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு இது உபயோகமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் மற்றும் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-
பொதுமக்களிடம் வருமுன் காப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை கண்டறிந்து மேல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களின் மூலம் 18,101 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 7842 நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 1386 நபர்களுக்கு இருதய பரிசோதனையும், 754 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சையின் போது, மேல் சிகிச்சை செய்திட வேண்டுமென்றால் முதலமைச்சருடைய விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் எலும்பு முறிவு, கை, கால், மூட்டு வலி, தசை தளர்வு போன்ற நோய்களுக்கு வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 82,229 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதுமட்டு மல்லாமல் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து ஏற்படின், அவர்களை மருத்துவ மனையில் சேர்ப்பவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பிரியாராஜ் கலந்து கொண்டனர்.
செங்காடு கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது, உத்தமர் காந்தி விருது, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என்ற பல்வேறு விருதுகளை அறிவித்து கொண்டிருக்கிறோம்.
மாநில அளவிலும் ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களை திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் சேர்ப்பது, அது உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும்.
எனவே இன்றைய கிராம சபை கூட்டத்தில் உங்களிடம் கேள்விகளை கேட்ட போது அத்தனை பேரும் எழுந்து சொன்னீர்கள். இது இந்த கிராமத்தில் மட்டுமல்ல ஏறக்குறைய 10 வருட காலமாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. நான் முறையாக தேர்தலை நடத்தி உள்ளோம். ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறோம்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக்க கோரிக்கை வைத்தீர்கள். அதை மிக வேகமாக நிறைவேற்றித்தர காத்திருக்கிறோம். இதேபோல் இங்குள்ள மதுரை வீரன் குளம் புனரமைக்கப்படும். சாலை வசதி, மயானபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலைகளும் அமைக்கப்படும்.
இந்த பணிகள் நடந்து முடிந்ததா? என்று அடுத்தமுறை நேரடியாக வந்து பார்ப்பேன். இங்கு சொன்ன பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும்.
நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார்.
மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராமசபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்பதற்கு ஏற்ப கிராம சபையில் முக்கிய அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பங்கேற்றார்.
இந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவே அவர் ஸ்ரீபெரும்புதூர் வந்து தங்கினார். இன்று காலை 10.50 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கோடு கிராமத்திற்கு சென்றார்.
அங்கு அவரை கிராம மக்கள் உற்சாகத்துடன் கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அந்த கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு என்னென்ன தேவை என்பது குறித்து பேசினார்கள்.
அவர்கள் சொன்ன குறைகள் மற்றும் கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக கேட்டுக்கொண்டார். அப்போது அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்து பதில் கூறினார். அதன்பிறகு இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது கிராம முன்னேற்றத்துக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் டெல்லி (வயது23). சென்னை அண்ணாநகர் எல்.ஐ.சி. நகரை சேர்ந்தவர் சரிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இதையடுத்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஆனால் இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பிறகு கண்ணகி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். டெல்லி தினமும் வீட்டில் தூங்கிய பிறகு சரிதா செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரது நடத்தையில் டெல்லி சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந்தேதி இரவு டெல்லி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது இரவு 2 மணியளவில் சரிதா போன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடுக்கிட்டு எழுந்த டெல்லி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் மனைவியை வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் சரிதா மயங்கி விழுந்தார். டெல்லியும் பின்னர் போதையிலேயே தூங்கிவிட்டார்.
காலையில் டெல்லி கண் விழித்து பார்த்தபோது சரிதா மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்தார்.
உடனே அவரை டெல்லி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சரிதா பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என 3 ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சாமி சிலை இருந்ததை கண்டெடுத்துள்ளனர். உடனே சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் 2 அடி உயரம் கொண்ட குதிரை வாகனத்துடன் கூடிய சாமி சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தால் சாமி சிலை ஆற்றில் அடித்து வரப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் ஆற்றில் வீசி சென்றுள்ளனரா என பல்வேறு கோணங்களில் வருவாய் துறையினர் சாமி சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பணிகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவிலில் மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்கும் படி அரசு கூறி உள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
கோவிலில் வடக்கு-தெற்கு நுழைவு வழிகள் மூடி இருப்பது விரைவாக திறக்கப்படும். கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ் வந்து கொண்டிருந்தது. தாமல் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சை முந்தி சென்ற டாராஸ் லாரியின் பின்னால் திடீரென பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 19 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இளநீர் வியாபாரி. இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்ற நாடகத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் தனசேகரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது கை, கால், கழுத்து, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவி, கார்த்திக், சந்தானம், அஜித், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






