என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 82 ஆயிரம் பயனாளிகள் பயன்- அமைச்சர் தகவல்
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் மற்றும் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-
பொதுமக்களிடம் வருமுன் காப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை கண்டறிந்து மேல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களின் மூலம் 18,101 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 7842 நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 1386 நபர்களுக்கு இருதய பரிசோதனையும், 754 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சையின் போது, மேல் சிகிச்சை செய்திட வேண்டுமென்றால் முதலமைச்சருடைய விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் எலும்பு முறிவு, கை, கால், மூட்டு வலி, தசை தளர்வு போன்ற நோய்களுக்கு வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 82,229 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதுமட்டு மல்லாமல் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து ஏற்படின், அவர்களை மருத்துவ மனையில் சேர்ப்பவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பிரியாராஜ் கலந்து கொண்டனர்.






