என் மலர்
உள்ளூர் செய்திகள்

அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி அடித்துக்கொலை
போரூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் பூமாலை (வயது52). இவர் சென்னை அசோக் நகர் 10-வது அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு குடியிருப்பவர்கள் பூமாலையை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பூமாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் குடியிருப்பு வாசல் முன்பு மதுபோதையில் தூங்கிய 4 வாலிபர்களை பூமாலை எழுப்பி அங்கிருந்து செல்லுமாறு கூறியதும் இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் அருகில் கிடந்த கம்பால் பூமாலையை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்கிற சபாபதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கானா கார்த்திக், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.






