என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
    • அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.

    அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.1 கோடி 59 லட்சம் மதிப்புடைய 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவரிடம் தங்க கட்டிகளை கொடுத்தது யார்? அதனை சென்னை விமான நிலையத்தில் வாங்க வந்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
    • பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர்.


    பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் நடந்து செல்லும் வழியில் கும்பலாக அமர்ந்து பணம்வைத்து ரம்மி விளையாடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் நிறுத்தப்பட்டது. பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி பயணிகளுக்கு இடையூறாக அமர்ந்து பணம் வைத்து ரம்மி விளையாடிய 10 பேரை கைது செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
    • சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலைகளை கோவில் அருகே தூக்கி வீசி சென்றுவிட்டனர்.

    இதேபோல் அதே பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

    2 கோவில்களிலும் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட 22 சிலைகள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து சேதப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்தது. திரிசூலத்தையும் உடைத்து இருந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நன்றாக படிக்க வைப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார்.

    இவரிடம் அப்பகுதி மக்கள் தங்களது குறைகளை கூறி பரிகாரம் கேட்டு வந்தனர். இதனால் சாமியார் பிரசாந்த் அப்பகுதியில் பிரபலமாக இருந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றார்.

    அப்போது மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தன்வசப்படுத்தினார். இதனால் மாணவி அடிக்கடி பிரசாந்தை சந்தித்து வந்தார்.

    ஆனால் சாமியார் பிரசாந்துக்கு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சாமியார் பிரசாந்த் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே சாமியார் பிரசாந்த்தின் பாலியல் தொல்லை எல்லை மீறியதால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் போலி சாமியார் பிரசாந்த் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் பிரசாந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
    • இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்ப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 5 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

    அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை கருவி மூலம் கண்காணிக்க வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் (ஏ.சி.) பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு செல்வதையும் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

    திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

    இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுப்பிரமணி இருந்த அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வந்தது.
    • ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூர், 19-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்(வயது 84). இவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. இவருடைய மனைவி அன்னபூரணி. இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சுப்பிரமணி இருந்த வீட்டின் அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அறை முழுவதும் பரவி கரும்புகை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் எரிந்த நிலையில் சுப்பிரமணியம் இறந்து கிடந்தார். அவர் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை பழவந்தாங்கல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
    • விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது.

    ஆலந்தூர்:

    கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 வருடங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக உள்நாடு மற்றும் உள் மாவட்ட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போது உயர்ந்து உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

    சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ல் இருந்து 7,500 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ரூ.10,000, திருச்சிக்கு ரூ.3,500- ரூ.5000, கோவைக்கு ரூ.5,500- ரூ.6000, ஐதராபாத்துக்கு ரூ.6000-ரூ.6500, மும்பைக்கு ரூ.8600-ரூ.9000, பெங்களூருக்கு ரூ.5500-ரூ.6000 ஆக கட்டணம் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து விமான டிக்கெட் ஏஜெண்ட்டுகள் கூறும்போது, இந்த அளவுக்கு விமான கட்டணம் உயர்வுக்கு விமானத்தின் எரிபொருள் விலை உயர்ந்தது தான் காரணம். இதனால் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது.

    நடுத்தர வர்த்தக பயணிகள் விமான பயண கட்டணத்தை பற்றி இப்போது பயப்படுகிறார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களை அவர்கள் குறைத்து கொள்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி பயணத்தை மிச்சப்படுத்த பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பாகவே விமான டிக்கெட்டை புக் செய்கிறார்கள. அவசரமாக விமான பயணத்தை மேற்கொள்வோர்களுக்கு விமான கட்டணம் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

    விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்றனர்.

    • மவுலிவாக்கத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்காக மாணவன் ரித்திக் சென்றான்.
    • மாணவன் உயிரிழப்பு குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ரித்திக் (வயது 15), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அதனை பார்க்க ரித்திக் சென்றான்.

    அப்போது அங்கு இருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தான். இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ரித்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்திக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.
    • மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

    இதனால் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு 68 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் தொடா்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது.

    இதைப்போல் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வந்த விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், வாரணாசி,மங்களூரில் இருந்து வந்த இண்டிகோ ஏன்லைன்ஸ் விமானங்கள் மற்றும் மலேசியாவிலிருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகிய 2 விமானங்களும், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் உட்பட 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்டநேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    இரவு 11.50 மணிக்கு 286 பயணிகளுடன் ஜொ்மன் நாட்டின் பிராங்க்பாா்ட் நகரில் இருந்து வந்த லுப்தான்ஷா ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க வந்தது. மழை, சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    அதிகாலை 2.10 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கும், அதிகாலை 2.20 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் ஐதராபாத்திற்கும், அதிகாலை 2.40 மணிக்கு துபாயில் இருந்து வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், துபாய், பக்ரைன், தோகா, உட்பட சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே, உட்பட 6 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 15 புறப்பாடு விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவில் பெய்த திடீர் சூறைக்காற்று, இடி மின்னல் மழை காரணமாக மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அதிகாரிகள் கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர்.
    • பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

    காஞ்சிபுரம்:

    ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முசரவாக்கம், பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முசரவாக்கம் ஏரியில் ரூ.15 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு கையகப்படுத்தி அறிவிப்பு பலகையை வைத்தனர்.

    • மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன
    • முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 13ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகளை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 272 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்களை காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், தலைமையிலான குழுவினர் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, வாகன இன்சுரன்ஸ், வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி, உள்ளிட்டவைகளை முறையாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்டது.

    • தலைமை நீதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தலைமை நீதிபதி வழிபட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்னை தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திடீர் வருகை புரிந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி மற்றும் அவரது மனைவி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முனிரத்தினம் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை  தலைமை நீதிபதி வணங்கி வழிபட்டார். அவருக்கு அர்ச்சகர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் ஸ்தானிகர் சியாமா சாஸ்திரிகள் பிரசாதங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    ×