search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் பாதுகாக்க வெள்ள தடுப்பு பணிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
    X

    வெள்ள தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

    குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் பாதுகாக்க வெள்ள தடுப்பு பணிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

    • போரூர் ஏரியின் நீர் அனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவே பயன்பட்டு வருகிறது.
    • ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

    சென்னை மாவட்டம் மதுரவாயல் வட்டம் காரம்பாக்கம் மற்றும் போரூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தெள்ளியகரம் கிராமத்திலும் அமைந்துள்ள போரூர் ஏரி நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இவ்வேரியின் நீர்பரப்பு 252 ஏக்கர் எனவும் கொள்ளளவு தற்பொழுது 67 மில்லியன் கன அடி ஆகும். இதன் வலது கரையோரம் 25 மீட்டர் நீளத்திற்கு உபரி நீர் வழிந்தோடி அமைந்துள்ளது. இவ்வேரியின் மொத்த கரையின் நீளம் 3092 மீட்டர் ஆகும். இவ்வேரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகர்மயம் ஆனதின் விளைவாக ஏரியின் நீர் அனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவே பயன்பட்டு வருகிறது.

    பல வருடங்களாக ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மௌலிவாக்கம், மதனந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் கிராம பட்டா நிலங்களின் வழியாக சென்று முகலிவாக்கத்தில் உள்ள இராமாபுரம் ஓடையில் கலந்து மணப்பாக்கம் மற்றும் இராமாபுரம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது.

    தற்பொழுது உபரி நீர் செல்லும் பட்டா நிலங்கள் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும் ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், மற்றும் அய்யப்பதாங்கல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் போது மேற்கண்ட பகுதிகள் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளானது.

    தமிழக முதலமைச்சர் 04.12.2021 அன்று போரூர் ஏரியின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக வெள்ள பாதிப்புகளை தவிர்க்க பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அடையாறு மற்றும் கொசஸ்தலையாறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல், கரைகளை சீரமைத்து பலப்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகளை ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காஞ்சிபுரம் மாவட்டம் போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாயினை மேம்படுத்துதல் மற்றும் நீர் ஒழுங்கி அமைத்தல் பணி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிசாலையில் கூடுதல் பெட்டி வடிவிலான கல்வெட்டுகள் Push through முறை மூலம் அமைத்தல் பணி (ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது), காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கொளுத்துவான்சேரி சாலையில் தந்தி கால்வாயிலிருந்து போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாய் வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைத்தல் பணி, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இப்பணியால் போரூர் ஏரியின் அருகில் உள்ள தனலட்சுமி நகர், குமரன் நகர், ஸ்ரீ சாய் நகர், மதுரம் நகர், ஜோதி நகர், பாலாஜி நகர், சீனிவாசபுரம், மற்றும் மாங்காடு, கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், பெரியபணிச்சேரி, அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் கிராமங்களில் வெள்ள நீர் சூழாமல் அடையாறு ஆற்றினை சென்றடையும். இதனால் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    Next Story
    ×