என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்
- திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
- இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்ப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 5 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை கருவி மூலம் கண்காணிக்க வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் (ஏ.சி.) பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு செல்வதையும் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






