என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த பனங்காட்டு வலசு கிளை வாய்க்கால் அருகே ஒருவர் இடது கையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அவரது அருகில் ஒரு நாட்டு துப்பாக்கியும், மோட்டார் சைக்கிளும் கிடந்தன. இது தொடர்பாக அரச்சலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் அரச்சலூர் அடுத்த முள்ளாம்பரப்பு அருகே உள்ள நல்லாந்தொழுவை சேர்ந்த குமரவேல் என்கிற குமரேசன் (வயது 38) என்பது தெரிய வந்தது.
விவசாயியான அவரது அருகில் கிடந்தது அவரது மோட்டார் சைக்கிள் ஆகும். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
அவர் அடிக்கடி நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு செல்வது வழக்கம். எனவே அவ்வாறு சென்ற போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து அவரது இடது கையில் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது பற்றி போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
குமரவேல் பனங்காட்டு வலசு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று முன் தினம் இரவு வேட்டைக்கு சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் அவரது இடது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
எனினும் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டை நோக்கி வந்துள்ளார். அப்போது கிளை வாய்க்கால் அருகே ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் யாரும் பார்க்காமல் அதிக ரத்தம் வெளியேறி அவர் இறந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குமரவேல் உண்மையில் துப்பாக்கி வெடித்துதான் இறந்தாரா? அவரது அருகில் கிடந்தது அவர் பயன்படுத்திய துப்பாக்கிதானா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி.
இவர் இன்று தனது மொபட்டுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். விஜயமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு செல்ல அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பழனிசாமிக்கு 3 மகள்கள் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு சோலார் அடுத்த நகராட்சிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 38). இவரது மனைவி பெயர் சித்ரா. 2 குழந்தைகள் உள்ளனர்.
தட்சிணாமூர்த்தி 2 லாரிகள் வைத்து மணல் விற்பனை செய்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் கடன் பெற்று லாரிகளை வாங்கினார்.
இதற்காக மாதாமாதம் வட்டி பணம் செலுத்திக் கொண்டு வந்தார். இந்த நிலையில் தொழிலில் நலிவு ஏற்பட்டதால் கஷ்டப்பட்டார். வட்டி பணத்தை கூட அவரால் செலுத்த முடிய வில்லை.
உரிய காலத்தில் வட்டி கொடுக்காததால் வட்டிக்கு மேல் கந்து வட்டியும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தட்சிணாமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு சோலாரில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்துக்கு தட்சிணா மூர்த்தி வந்தார். அங்கு இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அவருக்கு சாதகமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மேலும் மன வேதனை அடைந்தார்.
இந்த நிலையில் அனைவரும் சென்ற பிறகு லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்திலேயே லாரி உரிமையாளர் தட்சிணா மூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு ஓடிவந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் தட்சிணாமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது மிகவும் பரிதாப மாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முதல் கட்ட விசாரணையில் குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு நடத்தி அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். தவறு யார் செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவர் பாரபட்சம் பார்க்கமாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #RevaluationScam #TNMinister #KPAnbazhagan
ஈரோடு அடுத்த அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா இன்று நடந்தது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை ஓடா நிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்துக்கு வந்தார்.
பிறகு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர்கள் என்றாலே கட்ட பொம்மன், புலித்தேவன், தீரன் சின்னமலை ஆகியோரின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வரும்.
இன்று தீரன் சின்னமலை சிலைக்கு நான் மாலை அணிவித்து வணங்கியதால் மிகப்பெரிய பாக்கியசாலியாக என்னை கருதுகிறேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், பாரதிய ஜனதா ஒரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. ஆனால் ஜெயலலிதா தனி ஒரு ஆளாக நின்று தேர்தலை சந்தித்து தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டால் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
எங்களை காங்கிரஸ் கூட்டணியில் சேருவீர்களா? என்று கேட்கின்றனர். காங்கிரசுடன் தி.மு.க. உள்ளது. பின்னர் எப்படி நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் சேர முடியும்?
காங்கிரஸ் அணியை விட்டு தி.மு.க. வெளியே வரட்டும் பார்க்கலாம். மேலும் இப்போது தேர்தல் வியூகத்துக்கு எல்லாம் பதில் கூற முடியாது.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதற்கு சி.பி.ஐ. விசாரணை கோரும் இவர்கள் ஏன் செய்யாதுரை வீட்டில் நடந்த சோதனையில் பல கோடி பணம் கைப்பற்றினார்கள்? அதுபற்றியும் மேலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து ஏன் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை?
தற்போது முதல்-அமைச்சர் பேசி உள்ள ஒரு வீடியோவில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருமையில் பேசி உள்ளார். இவரைபோலதான் இவரது கட்சி தொண்டர்களும் உள்ளனர்.
ஈரோட்டில் அரசு அதிகாரியை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் மிரட்டி உள்ளார். இப்படிதான் அவரது கட்சி தொண்டர்கள் உள்ளனர். முதல்வர் எடப்பாடி ரூ. 4 ஆயிரம் கோடி டெண்டரை தனது நெருங்கிய சொந்தக்காரருக்கு கொடுத்து ஏன்?
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection
தண்ணீருக்கு பதிலாக பாறைகளும் வெறும் மணலாகவும் காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி ஆறு பொங்கி வருகிறது. ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு வெள்ளம் பெருக்கு புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியேகளை கட்டிவிட்டது.
ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் முக்கிய இடமாக கருதப்படுவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை ஆகும். பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதி கள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை.
இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் அமர்க்களமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் மட்டு மல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். இவர்கள் பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.
சுமங்கலி பெண்கள் தங்கள் வாழ்க்கை நாயகன் நலமுடன் வாழ வேண்டி வணங்கி புது தாலிக்கயிறு அணிவார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டியும், திருமண வாழ்க்கைகை கூட வேண்டியும் வழிபடுகிறார்கள்.
குறிப்பாக விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலங்களை செ(கொ)ழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள். இப்படி நாளை பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஒரு லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.
காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு செல்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆழமான பகுதி யில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு உள்ளது.
போலீசார் ஆற்றில் பரிச லில் சென்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகவும் அதன் மொத்த நீர் இருப்பு 32.80 டிஎம்சி ஆக உள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 3568 கனஅடியாகவும் அணையின் நீர்மட்ட உயரம் 97.70 அடியாகவும் அணையில் இருந்து நீர்திறப்பு 1500 கனஅடியாகவும் நீர் இருப்பு 26.96 டிஎம்சியாகவும் உள்ளது. அணை நிரம்புவதற்கு 8 அடி நீர்மட்டம் மட்டுமே போதுமானதாக உள்ளது.
பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலுக்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதற்கான விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு அணையின் கால்வாய் மதகு பட்டனை அழுத்தி கீழ்பவானி திட்ட கால்வாய்க்கு தண்ணீரை திறந்துவிட்டனர்.
அப்போது கால்வாய் மதகில் சீறிப்பாய்ந்து வந்த வெண்நிற நுரையுடன் கூடிய தண்ணீரில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றனர். அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முற்கட்டமாக 500 கனஅடியும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக 1000, 1500 2000 என உயர்ந்து அதிகபட்சமாக விநாடிக்கு 2300 கனஅடியாக திறந்து விடப்படும்.
ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் திறப்பால் நெல் சாகுபடியும் காய்ந்து போன் தென்னை, வாழை காப்பாற்றப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே ஜூலை 12ம் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு ஆற்று மதகு மூலம் தினந்தோறும் விநாடிக்கு 1500 கனஅடிநீர் திறந்து விடுப்படுவதால் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி மட்டுமே தண்ணீர் திறப்பு நடைபெறும். இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ள நிலையில் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் முன்கூட்டியே அணையில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12-ந் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு தினந்தோறும் ஆற்று மதகு மூலம் விநாடிக்கு 1500 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு விநாடிக்கு 2300 கனஅடிநீரும் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு 1500 கனஅடிநீரும் என மொத்தம் விநாடிக்கு 3800 கனஅடிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்படும்.
2006-ம் ஆண்டு பிறகு பவானிசாகர் அணை தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் தருவாயில் உள்ளது. அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்று மதகு மூலம் 8 மெகாவாட் மற்றும் கால்வாய் மூலம் 8 மெகாவாட் என மொத்தம் 16 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜா கிருஷ்ணன், சிவசுப்பிரமணி, தனியரசு, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி ஆணையராக இருப்பவர் அசோக்குமார். இவரை அ.தி.மு.க பிரமுகர் கோவிந்தராஜன் என்பவர் பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தையால் பேசினாராம்.
மேலும் நான் சொல்கிற படிதான் நடக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்து வந்தாராம். அவரது செயலை கண்டித்து 4-ம் மண்டல அலுவலகம் முன் உதவி ஆணையர் அசோக்குமார் தலைமையில் ஊழியர்கள் 4-ம் மண்டல அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க. பிரமுகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி அடிமட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஆவேசம் அடைந்தனர்.
அரசு அதிகாரியையே மிரட்டும் தொனியில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அவரை இயக்குவது யார்? என்று ஆத்திரம் கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், ஊழியர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் மாநகராட்சியின் 4 மண்டலங்களின் உதவி ஆணையர்கள் இளநிலை பொறியாளர்கள் என 1800 பேர் திரண்டு வந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி வரும் அ.தி.மு.க பிரமுகர் கோவிந்தராஜனை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.
ஒட்டு மொத்த பணியாளர்களும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது. பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஈரோடு பிரப் ரோடு ஸ்தம்பித்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய ஊழியர்களின் போராட்டம் 10 மணி வரை நீடித்தது.
இது குறித்து 4-ம் மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவிந்தராஜன் எங்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறார். நான் சொல்லும்படிதான் நடக்க வேண்டும். என்று தொந்தரவு செய்து வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். அவர் சொல்லும் வேலையை செய்யாத ஊழியர்களை தாக்கவும் முயற்சித்தார். அவரை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்யாத வரை இங்கிருந்து கலைந்து போக மாட்டோம்“ இவ்வாறு அவர் கூறினார்.
உடனே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் “அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்“ என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு, தெற்கு பள்ளம், ஜீவாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த 3 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவரது மனைவி மாதம்மாள் (வயது 42). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மாதம்மாள் அங்குள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதம்மாள் திடீரென மாயமானார். அவரது பிள்ளைகளும், உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனால் மாதம்மாளை காணவில்லை. எனவே அவர் மாயமானது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் மாதம்மாளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜீவா நகர் அருகே முட்புதர் பகுதியில் ஒருவருடைய முனகல் சத்தம் கேட்டது.
இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் முனகல் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் ரத்த காயங்களுடன் கிடந்தார்.
இது பற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் மாயமான மாதம்மாள் என்பது தெரியவந்தது. அவரது தலையில் யாரோ கல்லை தூக்கி போட்டு அவரை கொல்ல முயன்றுள்ளனர்.
போலீசார் மாதம்மாளை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாதம்மாள் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாதம்மாளின் தலையில் கல்லை போட்டு அவரை கொல்ல முயன்றவர் யார்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர்.
மாதம்மாள் படுகாயத்துடன் கிடந்த முட்புதர் பகுதியில் மது பாட்டில்கள் கிடந்தது. எனவே அந்த பகுதியில் இருந்து மது குடித்தவர்கள் தான் மாதம்மாளை கொல்ல முயன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இடத்துக்கு மாதம்மாள் சென்றது ஏன்? என்பதும் தெரியவில்லை. அது தொடர்பாகவும், மாதம்மாள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் வேலை பார்க்கும் தர்மபுரி பகுதியை சேர்ந்தவருக்கும், மாதம்மாளுக்கும் பழக்கம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடினர். ஆனால் அவரை காணவில்லை. வேலைக்கும் வரவில்லை. அவர் தலைமறைவாக உளளர். எனவே அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த நபரை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். அவர் பிடிபட்டால் மாதம்மாளை கொல்ல முயன்றது யார்? என்பது பற்றிய மேல் விவரம் தெரியவரும்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் நாவிதன் தோட்டம் என்ற இடத்தில் தனியார் பைப் கம்பெனி உள்ளது.
இந்த கம்பெனியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின்மூலம் காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தவர் ஜெகதீஸ் (வயது 39). இவரது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள அருகம்பாளையம் ஆகும்.
காவலாளி ஜெகதீஸ் தனியார் கம்பெனி ஊழியர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால் கம்பெனியில் அவரை "இனி வேலைக்கு வர வேண்டாம்" என்று கூறி விட்டார்களாம். இதனால் அவர் வேலைக்கு வராமல் அங்கு சுற்றி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஜெகதீஸ் தனது செல்போனில் 100-க்கு போன் செய்தார். போனில் தான் வேலை பார்த்த தனியார் கம்பெனி பெயரை கூறி அங்குவெடி குண்டு பதுக்கி வைத்து உள்ளார்கள் என்று கூறினார். இந்த போன் சென்னை கண்ட்ரோல் அறைக்கு சென்றது. உடனே அவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் கூறினார்கள்.
பெருந்துறை டி.எஸ்.பி. ராஜாகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக கூறிய காவலாளி ஜெகதீசை போலீசார் கைது செய்தனர்.
பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 01.04.2017ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 6,86,104 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் புதியதாக மின்னணு குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு கைப்பேசியில் குறுஞ்செய்தி வரப்பெற்ற பயனாளிகள் தங்களுக்குரிய தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் வட்டவழங்கல் அலுவலகத்தில் உரிய ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஆகவே செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ். தகவலை அவ்வப்போது பார்த்து தெரிந்து கொண்டு ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் இதனை தெரிவித்துள்ளார். #SmartCards
கோவை மாவட்டம் சிறுமுகை, காந்தவயலை சேர்ந்தவர் கிருபைராஜ் (வயது 47). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள தனியார் பஞ்சு மில்லில் அதிகாரியாக உள்ளார்.
நேற்று இரவு சத்தியமங்கலத்தில் அதிகாரி ஒருவரின் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கிருபைராஜ் கலந்து கொள்ள இருந்தார்.
இதற்காக அவர் பவானிசாகருக்கு வந்தார். பவானிசாகர் நால்ரோட்டில் உள்ள தனது தம்பி பவானி சங்கர் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்து பிரிவுபசார விழா விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். அவருடன் பவானிசங்கரின் மகள்களான சந்திரலேகா (15), எழிலரசி (10) ஆகியோரும் சென்றனர்.
3 பேரும் மோட்டார் சைக்கிளில் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்டனர்.
சத்தியமங்கலம் அருகே அன்னூர்கவுண்டர்தோட்டம் என்ற இடத்தில் வந்த போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், பவானிசாகர் நோக்கி சென்ற அரசு பஸ்சும் மோதிக்கொண்டன.
இதில் கிருபைராஜ், சந்திரலேகா, எழிலரசி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே எழிலரசி பரிதாபமாக இறந்தார்.
கிருபைராஜ், சந்திரலேகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பலியான எழிலரசி உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த கிருபைராஜ், சந்திரலேகா ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரலேகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிருபைராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பலியான சந்திரலேகா பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், அதே பள்ளியில் எழிலரசி 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
அவர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து அவர்களது பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. #tamilnews






