என் மலர்tooltip icon

    ஈரோடு

    மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி:

    சித்தோட்டை அடுத்த பேரோடு சி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் என்கிற லட்சுமணன் (வயது 43). தொழிலாளி. இவர் கங்காபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சி.மேட்டுப்பாளையம் கூட்டுறவு பால் சங்கம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த மின்சார கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே வெங்கடாசலம் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை அம்மனை நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஆனால் கோவில் கதவு பூட்டப்பட்டு இருந்தது.
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மறுநாள் ஆடி அமாவாசை அன்று கோவில்களில் சென்று பொதுமக்கள் வழிபடவோ, நீர் நிலைகளில் புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று கோவில்களில் பொது மக்களுக்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை அம்மனை நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஆனால் கோவில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கோவில் வாசல் முன்பு நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    இதைப்போல் பவானி சங்கமேஸ்வர் கோவிலிலும் பொதுமக்களுக்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் முன்பு மக்கள் நின்று வழி பட்டு சென்றனர். கோபி கொண்டத்துக் காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், ஈரோடு மாநகர் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், கள்ளுகடை மெடு பத்திரகாளியம்மன் கோவில் உள்பட கோவில்களிலும் இன்று பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் கோவில் முன்பு வழிபட்டுச் சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் உறவினருக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோட்டில் உள்ள ஒரு நகை கடைக்கு வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்து வந்த சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி விக்னேஷ் அந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினார். ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

    இதனை அடுத்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து விக்னேஷ் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் வெறுத்துப்போன அந்த இளம்பெண் தனது போன் எண்ணை மாற்றி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அந்த இளம்பெண்ணின் சகோதரி மகன் செல்போன் எண்ணிற்கு இளம்பெண் குறித்து தவறான தகவலை அனுப்பி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து விக்னேஷ் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணைக்கு வந்த விக்னேஷ் இனிமேல் எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் என எழுதி கொடுத்து சென்றார்.

    இந்நிலையில் மீண்டும் இளம்பெண்ணின் சகோதரி மகனுக்கு ஆபாச இமெயில் வந்தன. விக்னேஷ் மீது சந்தேகம் அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் மீண்டும் அவர் மீது புகார் அளித்தனர்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விக்னேஷ் தான் ஆபாச மெயில் அனுப்பியது தெரியவந்தது .

    இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த உபரி நீர் பவானி ஆற்று வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த மாதம் 25-ந் தேதி மாலை தொடர்ந்து 4-வது ஆண்டாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது.

    தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த உபரி நீர் பவானி ஆற்று வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. எனினும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக 100 அடியிலேயே இருந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 112 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி வீதம் என மொத்தம் 1,100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியிடப்பட்டு வருகிறது.
    ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி சார்பில், கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு பிரசார வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி சார்பில், கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு பிரசார வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மேட்டுக்கடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனப்பிரியா சின்னசாமி, கூரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி குணசேகரன், கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, சவுந்திரவள்ளி வேலுச்சாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
    பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதேபோல் புதுமண தம்பதிகளும் பவானி கூடுதுறையில் காவிரி தாயை வணங்கி கல்யாணத்தன்று அணிவித்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். மேலும் தாலியும் மாற்றிக் கட்டுவார்கள்.

    பின்னர் புதுமணத் தம்பதிகள் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம்  ஆடிப்பெருக்கு விழா அன்று கோவில்களில் வழிபடவோ, நீர் நிலைகளில் நீராடவோ தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதனையடுத்து இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஈரோடு மக்கள் தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக சென்னை, கோவையை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடிப்பெருக்கு விழாவில் பொது மக்கள் கோவில்களில் சென்று வழிபடவோ, நீர் நிலைகளில் புனித நீராடவோ இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் கொடுமுடி, கொடிவேரி ஆகிய இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆற்றுக்கு செல்லும் வழிகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் சத்திய மங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சிவகிரி தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் இன்று அந்தந்த கோவில் பூசாரிகளால் நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பவானிசாகர் அணையில் உள்ள பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பூங்காவிற்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும் பூங்காவை சுற்றி உள்ள 75 மீன் கடைகளும் இன்று முதல் 3 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மொடக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் செங்கோடகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய மனைவி கவிதா (வயது 33). இவர் மொடக்குறிச்சி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கவிதா சம்பவத்தன்று பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மொடக்குறிச்சி மானூர் ரோடு சுமைதாங்கி வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று கவிதாவை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிசங்கிலியை பறித்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பித்து சென்றனர்.

    இதுகுறித்து கவிதா மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் சாவடிப்பாளையம் புதூர் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 மோட்டார்சைக்கிள்களில் 5 பேர் வந்து கொண்டிருந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி வடக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் தினகரன் (25), வடக்கு காந்திகிராமம் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் பிரவீன்குமார் (23), கிருஷ்ணராயபுரம் மணவாசி கேபி குளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மணிகண்டன் (23), படிக்கட்டு துறை வள்ளியம்மை இல்லத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் பிரதீப் என்கிற வெள்ளையன் (26) மற்றும் 19 வயது வாலிபர் உள்பட 5 பேர் என்பதும், இவர்கள் 5 பேரும் மொடக்குறிச்சி மானூர் ரோடு சுமைதாங்கி வாய்க்கால் பாலம் அருகே ரேஷன் கடை பெண் ஊழியர் கவிதாவிடம் தாலிசங்கிலி பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    மேலும் நடத்திய விசாரணையில் 5 பேர் மீதும் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் மானூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருக்கும் பிரபல கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 7 பவுன் தாலிசங்கிலி மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபரை போலீசார் போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 23). இவர் ஈரோடு அணைக்கட்டு ரோடு, கோழிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சக்திக்கு ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சக்தி சிறுமியுடன் நைசாக பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இதையடுத்து சக்தி ஒரு மாத்திரையை வாங்கி கொடுத்து சிறுமியின் கருவை கலைத்து உள்ளார். இதனால் உடல் நலம் பாதித்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.

    ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூலப்பட்டறை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு லாட்டரி சீட்டு விற்ற, மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 43), கருங்கல்பாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (43), ஈரோடு மேட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (40), ஈரோட்டை சேர்ந்த ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இவர்களிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 60 பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் உள்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மாருதி நகரில் பல்வேறு திட்டங்களுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு ரூ.10 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.

    தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் திண்டல் லட்சுமி நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் சோலார் பகுதியில் அமைய உள்ள ஈரோடு புறநகர் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சோலார் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முதல் கட்டமாக 15 முதல் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.

    அவ்வாறு சோலாரில் பஸ் நிலையம் வரும் போது ஏற்கனவே இருக்கிற பழைய பஸ் நிலையம் நகர பஸ் நிலையமாக செயல்படும். மேலும் புதிய பஸ் நிலையத்தையொட்டி ஒரு மாதிரி மார்க்கெட்டும் அமைக்கப்பட உள்ளது.

    ஈரோட்டில் உள்ள மஞ்சள் வளாகம் 5 ஏக்கரில் செயல்படுகிறது. இதை 15 ஏக்கரில் விரிவுப்படுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. விளையாட்டு துறை முன்னேற்றத்திற்காக ரூ.35 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் விளையாட்டு மைதானம், புதிதாக சட்டக் கல்லூரி என்பது உள்பட 82 திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    போலீஸ்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    ஈரோட்டில் இருந்து செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்து வருகிறோம். நீர்நிலை பகுதியையொட்டி வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கான ஏற்பாடு செய்திருக்கிறோம். தியாகி திருப்பூர் குமரன் பெயரில் ஒரு சாலை அமைக்கவும், ஈரோட்டில் பெரிய நூலகம் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    துணை நகரம், ஆட்டோ நகரம் இப்படி நிறைய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக தனியாக வாட்ஸ் அப் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20-ந்தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் செயலில் இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 93 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆய்வின்போது அமைச்சருடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநில நெசவாளர் அணி தி.மு.க. செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    பவானியில், தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை ஆனந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அன்னக்கொடி (40). இவர்களுக்கு சொந்தமாக 2 ஆயிரம் சதுர அடி காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெற முயற்சித்துள்ளனர். இதற்காக இவர்களுக்கு தெரிந்த கட்டிட பொறியாளரான தேவனந்தத்தை அணுகி உள்ளனர். அவர், அந்த காலி இடத்தில் வீடு கட்டுவதற்கான திட்டம், திட்ட மதிப்பீடு போன்றவற்றை தயாரித்து கொடுத்து உள்ளார்.

    இதைத்தொடாந்து வெங்கடாசலம், ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அருகே இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

    இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் பிரதிநிதி பூபதி, கடன் மேலாளர் சிவராமன், கிளை மேலாளர் அருண்குமார் ஆகியோர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தனா்.

    கடன் பெறுவதற்காக முதலில் போலியாக ஆவணங்கள் தயாரித்து, வேறு நபர் கட்டும் கட்டிடத்தின் படங்களை எடுத்து கட்டிட பணிகள் நடப்பது போல காண்பித்துள்ளனர். இதனை எவ்வித ஆய்வும் செய்யாமல், வெங்கடாச்சலத்தின் மோசடிக்கு நிதி நிறுவன அதிகாரிகள் துணை போயுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி ரூ.12 லட்சமும், கட்டிட பணி 60 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கூறி 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி ரூ.4 லட்சமும், 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கூறி ஜூலை மாதம் 31-ந் தேதி ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.21 லட்சத்து 10 ஆயிரத்தை நிதி நிறுவன அதிகாரிகள் கொடுத்தனர். வீடு கட்டாமலே, வேறு நபரின் வீட்டை அவர் கட்டியது போல கணக்கு காண்பித்து மோசடியாக கடன் பெற்று, அதற்கான மாத தவணையை வெங்கடாச்சலம் சரி வர கட்டாமல் இருந்துள்ளார்.

    இதனை தனியார் நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் கள ஆய்வுக்கு சென்றபோது கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து இதுபற்றி நிதி நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேஷ் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வெங்கடாச்சலம், அவரது மனைவி அன்னக்கொடி, போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய பொறியாளர் தேவனந்தம், மோசடிக்கு துணை போன தனியார் நிதி நிறுவன கிளை மேலாளர் அருண்குமார், கடன் மேலாளர் சிவராமன், பிரதிநிதி பூபதி ஆகிய 6 பேர் மீதும் திட்டமிட்டு ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில், கடன் பெற்று மோசடி செய்து ஏமாற்றிய வெங்கடாச்சலத்தை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவரது மனைவி, நிதி நிறுவன மேலாளர் உட்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பவானி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி வியாபாரி இறந்தார். பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
    பவானி:

    ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பவானியை அடுத்த ஆப்பக்கூடலில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர் நேற்று ஆப்பக்கூடலில் இருந்து ஈரோட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

    பவானியை அடுத்த தளவாய்ப்பேட்டை நால்ரோடு அருகே வந்தபோது அந்தியூர் சங்கராபாளையம் பட்டக்காடு பகுதியை சார்ந்த தொழிலாளியான வேலுச்சாமி (வயது 29) என்பவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அவர் மீது மாணவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதுடன், தாறுமாறாக ஓடி சாலையோரம் பூக்கடை வைத்திருந்த தளவாய்ப்பேட்டை வினோபா நகரை சேர்ந்த செங்கோடன் (72), பழக்கடை நடத்தி வந்த கே.கே.நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி புஷ்பா (40) ஆகியோர் மீதும் மோதியது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காரானது அந்தரத்தில் பறந்து சென்று அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்து அங்கிருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி தொங்கி கொண்டு நின்றது. இந்த விபத்தில் வேலுச்சாமி, செங்கோடன், புஷ்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செங்கோடன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் ரகுநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×