search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி - கட்டிட மேஸ்திரி கைது

    பவானியில், தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதாக கூறி கடன்பெற்று ரூ.21 லட்சம் மோசடி செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை ஆனந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அன்னக்கொடி (40). இவர்களுக்கு சொந்தமாக 2 ஆயிரம் சதுர அடி காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெற முயற்சித்துள்ளனர். இதற்காக இவர்களுக்கு தெரிந்த கட்டிட பொறியாளரான தேவனந்தத்தை அணுகி உள்ளனர். அவர், அந்த காலி இடத்தில் வீடு கட்டுவதற்கான திட்டம், திட்ட மதிப்பீடு போன்றவற்றை தயாரித்து கொடுத்து உள்ளார்.

    இதைத்தொடாந்து வெங்கடாசலம், ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அருகே இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

    இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் பிரதிநிதி பூபதி, கடன் மேலாளர் சிவராமன், கிளை மேலாளர் அருண்குமார் ஆகியோர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தனா்.

    கடன் பெறுவதற்காக முதலில் போலியாக ஆவணங்கள் தயாரித்து, வேறு நபர் கட்டும் கட்டிடத்தின் படங்களை எடுத்து கட்டிட பணிகள் நடப்பது போல காண்பித்துள்ளனர். இதனை எவ்வித ஆய்வும் செய்யாமல், வெங்கடாச்சலத்தின் மோசடிக்கு நிதி நிறுவன அதிகாரிகள் துணை போயுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி ரூ.12 லட்சமும், கட்டிட பணி 60 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கூறி 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி ரூ.4 லட்சமும், 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கூறி ஜூலை மாதம் 31-ந் தேதி ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.21 லட்சத்து 10 ஆயிரத்தை நிதி நிறுவன அதிகாரிகள் கொடுத்தனர். வீடு கட்டாமலே, வேறு நபரின் வீட்டை அவர் கட்டியது போல கணக்கு காண்பித்து மோசடியாக கடன் பெற்று, அதற்கான மாத தவணையை வெங்கடாச்சலம் சரி வர கட்டாமல் இருந்துள்ளார்.

    இதனை தனியார் நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் கள ஆய்வுக்கு சென்றபோது கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து இதுபற்றி நிதி நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேஷ் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வெங்கடாச்சலம், அவரது மனைவி அன்னக்கொடி, போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய பொறியாளர் தேவனந்தம், மோசடிக்கு துணை போன தனியார் நிதி நிறுவன கிளை மேலாளர் அருண்குமார், கடன் மேலாளர் சிவராமன், பிரதிநிதி பூபதி ஆகிய 6 பேர் மீதும் திட்டமிட்டு ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில், கடன் பெற்று மோசடி செய்து ஏமாற்றிய வெங்கடாச்சலத்தை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவரது மனைவி, நிதி நிறுவன மேலாளர் உட்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×