என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தபோது பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அந்த தெரு தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைத்து உள்ளே இருந்து யாரும் வெளியேயும், வெளியே இருந்து யாரும் உள்ளேயும் செல்ல முடியாத அளவுக்கு அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வந்தனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகு தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதும் மீண்டும் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய டி பிரிவு குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீதியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் அந்த ஒரு வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த வீதி நுழைவாயிலில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் அந்த வீதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வீதிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த வீதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளசிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை இன்று ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டு அறிந்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு உதவித் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அம்மணி அம்மாள், மாவட்ட உதவித் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரெயில் கட்டண சலுகைகளை பறிக்க கூடாது. ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. புதுச்சேரி, சண்டிகார் பிரதேசங்களில் பெட்ரோல் மானியம் வழங்குவது போல் தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தாலுகா ஒன்றிய அளவில் முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.
பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு மதுமிதா (வயது 20) என்ற மகளும் மலைராஜா என்ற மகனும் உள்ளனர். மதுமிதா தற்போது பி.ஏ. படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆறுமுகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் பாக்கியலட்சுமி தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு பெருந்துறை மேக்கூர் பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று மதுமிதா காலை மற்றும் மதிய உணவு சாப்பிடாத நிலையில் வீட்டு வேலை செய்துவிட்டு மதியம் தூங்க சென்றுள்ளார். மாலை அவரது தம்பி எழுப்பிய போது மதுமிதா எழுந்திருக்கவில்லை.
உடனடியாக தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பாக்கியலட்சுமி மதுமிதாவை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மதுமிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது 34). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அன்பரசு சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வேன், கார்களை வாடகைக்கு விட்டு வந்தார். அன்பரசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக அவருக்கு தொழில் சரியாக போகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அன்பரசு கடந்த 5-ந் தேதி விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி அன்பரசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 14 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்தது 100 அடியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நேற்று தண்ணீர் 552 அடியாக வந்தது. இந்நிலையில் இரவில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2504 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரானா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு நேரக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்க ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் சமர்க்கப்பிக்க வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறக்கப்பட்டது.
இதன்படி தமிழகம்- கர்நாடக எல்லையாக பாரதிபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரானா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் வரும் அரசு பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகள் அரசு வகுத்துள்ள கொரோனா நெறிமுறைகளின்படி தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த இரண்டு சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பஸ் பயணிகள், சுற்றுலா வேன்கள் ஓட்டுநர்கள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
முகாமில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கர்நாடத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காலையில் அதிகளவில் கர்நாடகாவில் இருந்து வந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல கர்நாடகாவில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து, இன்று 2-வது நாளாக பாரதி புரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் ஆடி அமாவாசை அன்று பொதுமக்கள் நீர் நிலைகளில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். மேலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவார்கள்.
பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றில் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இன்று நீர்நிலைகளில் நீராட மற்றும் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.
இதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட மற்றும் சங்க மேஸ்வரர் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் பவானி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் வழி, கார் பார்க்கிங் வழி, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழி, காவேரி வீதி, காசி விஸ்வநாதர் கோவில் பகுதி, செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள வெற்றிலை படித்துறை உள்பட பவானி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்துறைகளுக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.
பவானி அடுத்த லட்சுமி நகர் பைபாஸ் காவிரி ஆற்றுபாலம் பகுதியில் உள்ள ஆறு, காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிகளில் அபாயகரமான பகுதிகளில் தடையை மீறி வெளியூரில் வந்திருந்த சிலர் புனித நீராடினர். இதை அறிந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கூடுதுறையை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் அந்த வழியாக வரும் பொதுமக்களிடம் விசாரணை செய்து கண்காணித்து வருகிறார்கள்.
கொடுமுடி காவிரி ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கபட்டு இருந்தன. கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அடைக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன. மேலும் கொடுமுடி பகுதியில் உள்ள காவிரி படித்துறைகள் தடுப்புகள் போட்டு அடைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் அடைக்கப்பட்டு இருந்தன. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அறியாமல் வந்த சில பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
அதே போல் சத்தி தண்டு மாரியம்மன், தாளவாடி மாரியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், கோபி பச்சமலை, பவள மலை முருகன், சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி அம்மன், பவானி செல்லாண்டியம்மன், சென்னிமலை முருகன், கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டு இருந்தன.
ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், கோட்டை பத்ர காளியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில் உள்பட நகரில் உள்ள கோவில்களில் இன்று காலை பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கோவில் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.






