search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மொடக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது

    மொடக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் செங்கோடகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய மனைவி கவிதா (வயது 33). இவர் மொடக்குறிச்சி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கவிதா சம்பவத்தன்று பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மொடக்குறிச்சி மானூர் ரோடு சுமைதாங்கி வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று கவிதாவை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிசங்கிலியை பறித்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பித்து சென்றனர்.

    இதுகுறித்து கவிதா மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் சாவடிப்பாளையம் புதூர் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 மோட்டார்சைக்கிள்களில் 5 பேர் வந்து கொண்டிருந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி வடக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் தினகரன் (25), வடக்கு காந்திகிராமம் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் பிரவீன்குமார் (23), கிருஷ்ணராயபுரம் மணவாசி கேபி குளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மணிகண்டன் (23), படிக்கட்டு துறை வள்ளியம்மை இல்லத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் பிரதீப் என்கிற வெள்ளையன் (26) மற்றும் 19 வயது வாலிபர் உள்பட 5 பேர் என்பதும், இவர்கள் 5 பேரும் மொடக்குறிச்சி மானூர் ரோடு சுமைதாங்கி வாய்க்கால் பாலம் அருகே ரேஷன் கடை பெண் ஊழியர் கவிதாவிடம் தாலிசங்கிலி பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    மேலும் நடத்திய விசாரணையில் 5 பேர் மீதும் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் மானூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருக்கும் பிரபல கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 7 பவுன் தாலிசங்கிலி மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×