என் மலர்
ஈரோடு
- மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ.க .அலுவலகத்தை மொடக்குறிச்சி சரஸ்வதி எம். எல். ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
- தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ.க .அலுவலகத்தை மொடக்குறிச்சி சரஸ்வதி எம். எல். ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
முன்னதாக வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி வரவேற்றார்.
மாநில பொதுச்செ–யலாளர் ஏ. பி .முருகா–னந்தம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட செயலாளர் பாயிண்ட் மணி,தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி செந்தில்குமார்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். சவுந்தரம், பொதுச் செயலாளர்கள் சிவகாமி, செந்தில், மகேஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, வேதானந்தம், மாவட்ட பொருளாளர் சுதர்சனம்,–மற்றும் ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது சவாலாகவே இருந்து வருகிறது.
- நாங்கள் பல வருடங்களாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் கோரிக்கை வைத்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள விவசாயிகள் கல்லூரி மாணவ-மாணவிகள் மாயாற்றை பரிசலில் கடந்து தான் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். தினமும் பொதுமக்கள் கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் பரிசலில் ஆற்றை கடந்து வெளியூருக்கு சென்று வருகின்றனர்.
மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும். இந்த மாதிரி சமயங்களில் பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் மாயாற்றில் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இன்று பரிசல் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக வியாபாரத்திற்காகவும் பிழைப்புக்காகவும் கூலி தொழிலாளர்கள் பரிசலில் மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதே போல் கல்லூரி மாணவ-மாணவிகளும் இன்று கல்லூரிக்கு செல்லவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
நாங்கள் தினமும் பிழைப்புக்காக மாயாற்றை பரிசல் மூலமாக கடந்து சென்று வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது சவாலாகவே இருந்து வருகிறது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது. இருந்தாலும் நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றாக வேண்டும். இதனால் சில சமயங்களில் உயிரை பொருட்படுத்தாமல் மாயாற்றை கடந்து செல்கிறோம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பரிசல் இயக்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் வியாபாரத்துக்கு செல்லவில்லை. எங்கள் குழந்தைகளும் கல்லூரிக்கு செல்லவில்லை.
நாங்கள் பல வருடங்களாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அவை தொடர்ந்து கிடப்பில் உள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையில் தற்போது 98 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி அளவில் 16 ஆயிரத்து 891 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக இருந்தது. அரக்கன்கோட்டை -தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.
பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- சுகாதாரத் துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 40 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2 நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 236 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.
- அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது.
- போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
ஈரோடு:
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவி களுக்கு இடையேயான செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டி நடைபெறுகிறது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும், 11-12 வகுப்பு வரை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
6 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி பார்வை யிட்டார். உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை பஸ் நிலையம் எதிரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு முத்து பாண்டியன் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியது பல்லடம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், விக்கி, முத்து என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- வயிற்று வலி வரும் போது வலி தெரி யாமல் இருப்பதற்காக மது குடித்து உள்ளார்.
- இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலி வரும் போது வலி தெரி யாமல் இருப்பதற்காக மது குடித்து உள்ளார்
இந்த நிலையில் ராமசாமி மது குடித்து விட்டு களை கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி ஜெகதீஸ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இற ந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், கடந்த 1986-ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தாசப்ப கவுண்டன்புதூர் ஊரக மருந்து கட்டிடம் திறக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தாசப்பகவுண்டன் புதூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் காலியாக இருந்த இந்த ஊரக மருந்து கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஏளூர் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த மின்வாரிய அலுவலகத்தில் அரக்கன்கோட்டை, நால்ரோடு வடக்கு மற்றும் தெற்கு, ஜோகியூர், ஏளூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த சுமார் 700 விவசாய மின் இணைப்புகளுடன் குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு என 6 ஆயிரத்து 500 மின் இணைப்புகள் உள்ளது.
இந்த அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் தலைமையில் லைன்மேன், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், உதவியாளர், கணக்கீட்டாளர், வருவாய் பிரிவு அலுவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மின் இணைப்பு பெறுதல், மின் தடை குறித்து புகார் தெரிவிக்க வருதல் என நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரும் இந்த அலுவலகம் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடந்து விட்டன.
இந்நிலையில் தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மழை காலங்களில் அனைத்து அறைகளிலும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் நிலையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை தார்பாய் மூலமாக மூடி வைத்தே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களும், இங்கு பணியாற்றும் அலுவலர்களும் நாள்தோறும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த ஒரு கட்டிடம் மட்டும் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் கட்டிடம் காலாவதியாகி விட்டதால் புதுப்பிக்க முடியாது என்றனர்.
பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த மின் வாரிய அலுவலகத்தை விபத்து ஏற்படும் முன்பே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கன் கோரிக்கை விடுத்தனர்.
- சென்னிமலை அருகே கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. அவரது கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இது குறித்து உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது. அந்த வழியாக சென்ற சிலர் பீடி, சிகரெட் பற்ற வைத்து விட்டு வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- மருமகன் மாமனார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாமனார் மருமகனை கல்லால் தாக்கினார்.
- இது குறித்து மருமகன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி காந்திநகர் புதுகாலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (39).பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அண்ணாதுரை மனைவி வீட்டுக்கு வந்தார். தனது இளைய மகன் லிங்கேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் மணியன் (55) மனைவியை வைத்து குடும்பம் நடத்த தெரியவில்லை. எதற்கு என் பேரனுடன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாதுரையை மணியன் கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்து அண்ணாதுரை புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- விஷ்ணு சம்பவத்தன்று தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். தந்தையிடம் விஷ்ணு தாங்கள் திருமணம் செய்து கொண்டதால் தங்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (22). இவரது மனைவி சந்தியா (20). விஷ்ணு, சந்தியா இருவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் 23-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
விஷ்ணு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்து கொடுக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். திருமணமானதும் விஷ்ணு மனைவியுடன் தனது தந்தை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். பின்னர் விஷ்ணு தனது மனைவியுடன் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். சந்தியா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் விஷ்ணு சம்பவத்தன்று தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். தந்தையிடம் விஷ்ணு தாங்கள் திருமணம் செய்து கொண்டதால் தங்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை மருமகள் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் வளைகாப்பு செய்யும்போது 2 நிகழ்ச்சியும் ஒன்றாக வைத்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
இதனால் கோபமடைந்த விஷ்ணு தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். நேரடியாக அவர் வீட்டில் அறைக்குள் சென்று கதவை தாழிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியா கதவை தட்டி உள்ளார். கதவு திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேற்கூரையை பெயர்த்து பார்த்தபோது விஷ்ணு தூக்கு போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே இறங்கி விஷ்ணுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஷ்ணு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் உடலை பார்த்து சந்தியா அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேட்டுக்கடையில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் தொழிலாளி தூங்கும் போது எந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் மேட்டுக்கடையில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் வேலை முடிந்து கடையில் தூங்கினார். கடை உமையாளர் கதவை தட்டினார்.
ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது சரவணன் எந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






