search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்பு
    X
    மாயாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

    தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்பு

    • மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது சவாலாகவே இருந்து வருகிறது.
    • நாங்கள் பல வருடங்களாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் கோரிக்கை வைத்து வருகிறோம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள விவசாயிகள் கல்லூரி மாணவ-மாணவிகள் மாயாற்றை பரிசலில் கடந்து தான் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். தினமும் பொதுமக்கள் கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் பரிசலில் ஆற்றை கடந்து வெளியூருக்கு சென்று வருகின்றனர்.

    மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும். இந்த மாதிரி சமயங்களில் பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் மாயாற்றில் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இன்று பரிசல் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக வியாபாரத்திற்காகவும் பிழைப்புக்காகவும் கூலி தொழிலாளர்கள் பரிசலில் மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதே போல் கல்லூரி மாணவ-மாணவிகளும் இன்று கல்லூரிக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    நாங்கள் தினமும் பிழைப்புக்காக மாயாற்றை பரிசல் மூலமாக கடந்து சென்று வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது சவாலாகவே இருந்து வருகிறது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது. இருந்தாலும் நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றாக வேண்டும். இதனால் சில சமயங்களில் உயிரை பொருட்படுத்தாமல் மாயாற்றை கடந்து செல்கிறோம்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பரிசல் இயக்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் வியாபாரத்துக்கு செல்லவில்லை. எங்கள் குழந்தைகளும் கல்லூரிக்கு செல்லவில்லை.

    நாங்கள் பல வருடங்களாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தரவேண்டும் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அவை தொடர்ந்து கிடப்பில் உள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×