என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பணம் மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்தது.
    • கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மோசடி செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு மற்றும் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர். அதில் தங்களிடம் பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி செய்ததாக தெரிவித்து இருந்தனர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியானது.

    சேலம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் ஒரு தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பணம் மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்தது.

    சோப்பு விற்பது போல் வீடுகளுக்கு செல்லும் மர்ம நபர்கள் தனியாக இருக்கும் பெண்களிடம் 2 சோப்பு ரூ.50-க்கு தருகிறோம். சோப்பில் பரிசு கூப்பன் உள்ளது. கூப்பனில் என்ன பரிசு விழுந்ததோ அது உடனடியாக கொடுக்கப்படும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

    இதை நம்பி பரிசுக்கு ஆசைப்பட்டு பெண்கள் சோப்பு வாங்கி உள்ளனர். அப்போது சிலருக்கு குக்கர், தோசைக்கல் பரிசாக விழுந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்களிடம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ரூ.100 கொடுத்து மற்றொரு பரிசு கூப்பன் வாங்கினால் மெகா பரிசு கிடைக்கும். அதில் மொபட், 7 பவுன் நெக்லெஸ் ஆகியவை பரிசாக கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய பெண்கள் கூப்பனை வாங்கி இருக்கிறார்கள்.

    பின்னர் மோசடி கும்பல் கூப்பன் வாங்கிய பெண்களின் வங்கி கணக்கு எண், செல்போன் எண் ஆகியவற்றை பெற்று சென்றுள்ளனர். திடீரென ஒரு நாள் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு மொபட் பரிசு விழுந்ததாக கூறி ஏதாவது ஒரு ஷோரூம் முன்பு நின்று மொபட்டை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளனர்.

    இதை உண்மை என்று நம்பும் பெண்களிடம் ஜி.எஸ்.டி, டேக்ஸ் ரூ.12 ஆயிரம் ஜிபே மூலம் செலுத்தினால் உங்களுக்கு மொபட் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பரிசு விழுந்த மகிழ்ச்சியில் அந்த பெண்களும் மோசடி நபர்கள் சொல்லும் எண்ணுக்கு ஜிபே மூலம் பணத்தை அனுப்பி உள்ளனர்.

    இதேபோல் நெக்லெஸ் பரிசு விழுந்ததாக கூறி ஒரு பவுனுக்கு ரூ.2500 ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.17,500 அனுப்ப சொல்லி கூறி உள்ளனர். இதை உண்மை என்று நம்பி அவர்களும் பணத்தை செலுத்தி உள்ளனர். பணம் செலுத்திய பின்பு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய எண்ணை தொடர்பு கொண்டால் அது பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனம் என்று தெரிய வந்தது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முக கவசம் அணிந்தபடி வந்தவர்கள் தங்களது உறவினர்கள் பணம் செலுத்துவார்கள் அதை எங்களிடம் கொடுங்கள் என்று கூறி வாங்கி சென்றது தெரிய வந்தது. இதேபோல் இந்த கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மோசடி செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அந்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பழைய பீரோ ஒன்றை ஆன்லைனில் விற்க முயன்ற தாய், மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்த தாய், மகள் தங்கள் பழைய பீரோ ஒன்றை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தனர். அதன் விலை ரூ.6 ஆயிரம் ஆகும்.

    இந்த விளம்பரத்தை பார்த்து ஒரு வடமாநில வாலிபர் அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் உங்கள் பீரோவை வாங்கிக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனையடுத்து கூகுள் பே மூலம் உங்களுக்கு பணம் அனுப்பி விடுகிறேன் என்று கூறி முதலில் அந்த நபர் கியூ ஆர் கோர்டை அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

    அந்த பெண்ணை முதலில் ஒரு ரூபாய் போட சொல்லியுள்ளார். பின்னர் அந்த நபர் 2 ரூபாய் போட்டு உள்ளார். பின்னர் அந்த பெண் 100 ரூபாய் அனுப்பி உள்ளார். அந்த நபர் ரூ.200 அனுப்பி உள்ளார்.

    பின்னர் அந்த பெண் 6000 ரூபாய் அனுப்பி உள்ளார். அந்த நபர் ரூ.12000 அனுப்ப வேண்டும். ஆனால் அந்த நபர் அனுப்பவில்லை. இது குறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது பணம் அனுப்புவதில் ஏதோ பிரச்சனை உள்ளது. உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. வரும் அந்த நம்பரை பார்த்து கொஞ்சம் கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பி அந்த பெண் 243869 என்ற ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 869 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது ஒன்றும் பிரச்சனை இல்லை பணம் திரும்பவும் வந்துவிடும். உங்கள் செல்போன் எண்ணிற்கு தற்போது ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்துள்ளது அதை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணும் 485000 என்ற நம்பரை கூறியுள்ளார். அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கிலிருந்து 4 லட்சத்து 85 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக வந்தது. இவ்வாறாக அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அந்த பெண் அந்த நபரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
    • தேசிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து வருகின்றனர். ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்காக ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தபால்காரரிடம் தங்களது ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரம், பி.பி.ஓ.எண் ஆகியவற்றை வழங்கி, கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயர்வால் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம்.

    அதேபோல் தமிழக அரசுடன் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் மேமென்ட்ஸ் பாங்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 1.60 லட்சம் பேருக்கு மேல் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சேவையை ஓய்வூதி யதாரர்கள் பயன்படுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பவானி முதல் சின்ன பள்ளம் வரை ரூ.85 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் இரண்டு புதிய பாலங்கள் இரண்டு 49 பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    பவானி:

    ஈரோட்டில் இருந்து அக்ரஹாரம், ஆர்.என். புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல இந்த மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமைய பெற்று உள்ளது.

    இந்த மேட்டூர் மெயின் ரோட்டில் தினசரி நூற்றுக்கணக்கான பைக், பஸ், கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

    நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் தொப்பூர், மேட்டூர், பவானி, ஈரோடு ஜிரோ பை ஜிரோ வரை 7 மீட்டராக உள்ள இந்த தார் ரோட்டை தற்போது 10 மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் ரோட்டின் இரு பகுதிகளிலும் மூன்று மீட்டர் அகலம் ஏற்படுத்தும் வகையில் கடின புருவல்கள் கொண்ட தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி தொப்பூரில் தொடங்கியது.

    அதேபோல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த பணியானது தற்போது பவானி, குப்பிச்சிபாளையம், பெரும்பள்ளம் மற்றும் பிளாட்டினம் மஹால் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள தாகவும், பவானி முதல் சின்ன பள்ளம், பிளாட்டினம் மஹால் வரை ரூ.85 கோடி மதிப்பீட்டில் இப்பணி நடைபெற உள்ளதாக இத்துறை சார்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் இரண்டு புதிய பாலங்கள் இரண்டு 49 பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்தச் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்த பின்னர் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாகன போக்குவரத்து ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், அதிக அளவில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இந்த விரிவாக்க பணிகள் மூலமாக தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் பணியின் போது மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள இரு புறமும் வளர்ந்துள்ள புளிய மரங்கள் அப்புறப்படுத்தாமல் அகலபடுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அதே போல் பவானி நகரப் பகுதியில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் இடையூறாக காணப்படும் மரங்கள் கண்டறியப்பட்டு அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வாரச்சந்தைக்கு சுற்று சுவர், நுழைவு வாயில் கேட்டு இல்லாததால் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
    • சந்தைக்கு சுற்றுச்சுவர் கட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே நகராட்சி வார சந்தை செயல்பட்டு வருகி றது. இங்கு வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கூடுகிறது. மாட்டுச்சந்தை புதன்கிழமை மாலையே தொடங்கிவிடும்.

    இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதுபோல் ஆட்டு, மாட்டு சந்தைக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

    வாரச்சந்தைக்கு சுற்று சுவர், நுழைவு வாயில் கேட்டு இல்லாததால், சந்தை கூடும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

    குடிமகன்கள் பகல், இரவு என எந்நேரமும் மது குடிப்பதுடன் காலி பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் பொருட்களை வீசியும் சென்று விடுகின்றனர். அவ்வாறு வீசி செல்லும் மது பாட்டில்கள் உடைந்து சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே உடனடியாக சந்தைக்கு சுற்றுச்சுவர் கட்டி, சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது.
    • ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சசிகுமார் (வயது43).

    இந்த பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது. பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை கேட்டபோது தாங்களுக்கு தெரியாது என்றும் கேசியரை தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    வேலை முடித்து சென்ற ஊழியர் ஹரின் என்பவரை தேடி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. பின்னர் மதியம் காஞ்சிக்கோயில் நால் ரோட்டில் நின்று கொண்டி ருந்த ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது போதையில் இன்று விடுமுறை என்ப தால் மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியு ள்ளார்.

    அவரிடம் பாக்கெட்டில் மீதம் இருந்த ரூ.1600 எடுத்து கொடுத்து கொண்டார். பின்னர் இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொட ர்பாக காஞ்சிக்கோயில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிந்து ஹரினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஈரோடு:

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும்.

    இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைகளுக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை 1-ந் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.

    • டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • தொடர்ந்து லாரி ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த சேதுபதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குளம் குளத்தோட்டம் என்ற இடத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த இடத்தில் அப்பகுதியில் சிறிய டேங்கர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் லாரி டிரைவர் எங்கோ சேகரித்த கழிப்பறை கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதையடுத்து அந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை ஓரத்தில் கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரியினை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

    தொடர்ந்து லாரி ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த சேதுபதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 செம்மறி ஆடுகளின் கழுத்துப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது.
    • இறந்து போன ஆடுகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாகும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் சக்திவேல் (48) என்பவர் 32 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இவர் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் மாலை வீட்டு அருகே உள்ள ஆட்டுப்பட்டியின் வெளிப்புறத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்து இருந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. இதில் 17 செம்மறி ஆடுகள் கழுத்துப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது. இறந்து போன ஆடுகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாகும்.

    இதுகுறித்து சென்னம்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்திருந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆசனூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்பொழுது மைசூரில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பஸ்சில் ஒருவரின் பேக்கில் கர்நாடக மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தாளவாடி:

    கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கர்நாடக அரசு பஸ் மூலம் மது கடத்தப்படுவதாக தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆசனூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது ஒருவரின் பேக்கில் கர்நாடக மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கர்நாடக மதுவை பறிமுதல் செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சோமனூர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (49) என்பதும், 6 லிட்டர் கர்நாடகா மது பாட்டில், மற்றும் 50 மது பாக்ெகட்டையும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கே.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் இருந்து இன்று காலை 6 மணியளவில் ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் அரக்கன் கோட்டை அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 40 கிலோ எடையுள்ள 32 ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தது பவானி மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு ரேசன் அரிசி கொண்டு செல்வதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் மணிகண்டனை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    ×