என் மலர்
ஈரோடு
- சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
- டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
- தற்போதைய நிலையில் மாவட்டத்தில் 3,406 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 23 லட்சத்து 77,315 பேர் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து, 36,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 35,922 பேர் குணமடைந்தனர்.
இன்றைய நிலையில் 2 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரேனாவால் இறந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.12.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
மாவட்ட அளவில் 18 வயதுக்கு மேற்பட்ட 16.56 லட்சம் பேர் முதல் தவணையும், 15.38 லட்சம் பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 90,763 பேர் முதல் தவணையும், 80,658 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
12 முதல் 14 வயதினரில், 56,519 பேர் முதல் தவணையும், 45,679 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மொத்தமாக 18 லட்சத்து 3,771 பேர் முதல் தவணை யும், 16 லட்சத்து, 64,180 பேர், 2-ம் தவணையும், 2 லட்சத்து, 13,545 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
தற்போதைய நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 8 அரசு மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,406 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 31).இவர் விஜயமங்கலம், பெருமாள் கோவில் பின்புறம் கடந்த 8 வருடங்களாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறு நாள் காலை கடைக்கு வந்து கேட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சுற்று சுவர் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் டிரம் இருந்தது. பின்னர் பொருட்களை சரி பார்த்தார்.
அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த 60 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகன பேட்டரிகள், 80 கிலோ எடை உள்ள செம்பு கம்பிகள், 40 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்கள் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்ததும் மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடு த்தார். இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா க்களை ஆய்வு செய்தார்.
அப்போது அதில் 2 பேர் இரும்பு கடையில் பழைய பொருட்களை திருடி ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. அவர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் ஈரோடு, முத்தம்பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த பக்கிரி (36) என்பதும் விஜயமங்கலம் பழைய இரும்பு கடையில் பொரு ட்களை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களி டம் இருந்து திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+2
- முட்டைகோஸ்களை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
- முட்டை கோசை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனர். ஒரு சில இடங்களில் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டை கோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளது. முட்டைகோஸ்களை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
இதனால் முட்டை கோசை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனர். ஒரு சில இடங்களில் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.
தாளவாடி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ்களை பயிரிட்டு உள்ளோம். 3 மாத பயிரான முட்டைகோஸ் பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்து உள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கேட்கின்றனர். ஆனால் தற்போது வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வருகிறது.
குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்றால் தான் எங்களுக்கு கட்டுபடியாகும். விளைச்சல் அதிகம் என காரணம் கூறி எங்களிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் நாங்கள் அறுவடை செய்யாமல் முட்டைகோஸ்களை செடியிலேயே விட்டு விட்டோம். சில இடங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ரேஷன் கடைகளில் முதியோர்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது கைரேகை பதிவாகவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
- கைரேகை பதிவாக நபர்கள் குறித்து ரேஷன் ஊழியர்கள் கணக்கெடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள கவுந்தப்பாடி மெயின் ரோடு, மூவேந்தர் நகர் பகுதியில் ஈரோடு மாவட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடத்தி பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக ரூ.49.51 கோடி மதிப்பீட்டிலும், 2-வது கட்டமாக ரூ.36.28 கோடி மதிப்பீட்டிலும் என ரூ.85.79 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள இப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தற்போது ரேஷன் கடைகளில் முதியோர்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது கைரேகை பதிவாகவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
பொங்கல் பரிசு வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு பணம் வழங்குவது தடைபடும் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் அந்த மாதிரி சில பிரச்சனை இருந்தால் அது தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
பெரிய எண்ணிக்கையில் இதுபோல் பிரச்சனை இருக்காது. குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். எனவே அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் அதிகாரிகளை கேட்டுக்கொள்வது என்ன வென்றால் இதுபோல் கைரேகை பதிவாக நபர்கள் குறித்து ரேஷன் ஊழியர்கள் கணக்கெடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னர் அவர்கள் பெயர் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களின் வீட்டுக்கு தேடி சென்று பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம், பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
- போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், எப்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ஹிட்டாச்சி வண்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி.
இந்நிலையில் ராஜேஷ் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த புத்தி கட்டையில் உள்ள வெங்கடாசலபதி என்பவர் நிலத்தை குத்தகைக்கு ஒட்டி வரும் பூமியை சமப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது ராஜேஷின் வலது கையில் காயமும், மணிக்கட்டு பகுதியில் காயமும், கழுத்து கீழ்ப்பகுதியில் காயமும் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவர் தாளவாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதா கவும், விசாரித்து நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- அவர் பாலிதீன் கவரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு ஆவின் எதிரே உள்ள டாஸ்மார்க் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சித்தோடு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்குமார் (35) என்பதும், அவர் பாலிதீன் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
- ஈரோடு மாவட்டத்தில் 16 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் பேசி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கொரோனோ மீண்டும் வருமோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. உலகின் சில இடங்களில் பாதிப்புகள் இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.
எனினும் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவிற்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக 3,406 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் இருக்கின்றன. அதை தேவையான சூழல் ஏற்பட்டால் மேலும் 400 படுக்கைகள் அளவிற்கு அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திடீர் பின்னடைவு ஏற்பட்டது. தற்பொழுது அதையும் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து கொள்ள வேண்டும். மேலும் அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொ ள்வதற்கு வசதியாக இருக்கும்.
பொதுமக்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தாங்களாக முன்வந்து பொது இடங்க ளுக்கு செல்லும்போது முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். தடுப்பூசி 2-ம் டோஸ் போடாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும்.
பூஸ்டர் தடுப்பூசி ஈரோடு மாவட்டத்தில் 16 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய அளவில் பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அவர்களே தானாக முன்வந்து தனது பணியாளர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகள் 4 நாட்களுக்கு மேல் வரவி ல்லை எனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை போல கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு இன்னும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் பாதுகாப்புடன் இருந்து தங்களை தொற்றி லிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர்.சோமசுந்தரம், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) பிரேம குமாரி, மாநகர மருத்துவ அலுவலர் பிரகாஷ், அரசு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்திய மூர்த்தி, ஈரோடு வருவாய் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெருந்துறை பட்டக்காரன் பாளையம், கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த செரீப் (54), சத்யா நகரை சேர்ந்த முனியப்பன் (30) என்பது தெரியவந்தது.
இவர்கள் திருவாச்சி வாவிக்கடையை சேர்ந்த பாப்பாத்தி (70) என்ற மூதாட்டியிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பாப்பாத்தியை போலீசார் கைது செய்தனர். இவர்களி டமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டனர்.
- கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் கதிர்கள் சேதமடைந்ததுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பணக்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, தலமலை, ஆசனூர், கேர்மாளம், குழியாடா, திங்களூர் என 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள விவசாயிகள் ஆகஸ்ட் மாதம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டனர். 3 மாத கால பயிரான மக்காச்சோளம் நல்ல மழை பெய்து நன்கு வளர்ந்து அறுவடைக்கு தற்போது தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் கதிர்கள் சேதமடைந்ததுள்ளன. இதற்கிடையே அறுவடையான மக்காச்சோளக்கதிர்களை உலர்களத்தில் போட்டுள்ள நிலையில் மழைநீர் புகுந்ததால் மக்காச்சோளக்கதிரில் முளைப்பு தன்மை ஏற்பட்டு அனைத்து மக்காச்சோளம் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை அறுவடை செய்து உலர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஆயிரக்கணக்கான மக்காச்சோள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான கான்கிரீட் உலர்களங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரோடு மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கு வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:
ஈரோட்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி ஈரோட்டில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.
நாளை (25-ந்தேதி) இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.
கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கு வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோட்டில் பல்வேறு ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இன்று நள்ளிரவு ஈரோடு புனித அமல அன்னை, சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம், ரெயில்வே காலனியில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஈரோடு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தேவாலயம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம், கிறிஸ்துமஸ் குடில், கலை நிகழ்ச்சி ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அனைத்து தேவாலயங்களும் மின் விளக்கு களால் அலங் கரிக்கப்பட்டு ஜொலித்தன. ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம் மற்றும் அமல அன்னை பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த் தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒரு வருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
- பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- அணையில் இருந்து 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து அணை யின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து மழைப் பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.95 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.87 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 250 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி என மொத்தம் 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனையடுத்து பொதுப்பணித் துறையினர் உஷார் படுத்தப் பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.






