என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டனர்.
    • ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    அதுவும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தான் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வியூகம் அமைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பிரசார வியூகம் வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாக மாறி இருக்கிறது. தொழிலாளர்கள் நிறைந்த இந்த தொகுதி வாக்காளர்கள் பலர் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டனர். பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைத்து வந்தது. அதோடு இல்லாமல் தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டால் ரூ.500, பிரியாணி, ஆண்களுக்கு ரூ.500 மற்றும் மதுபாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தை வாக்காளர்கள் ஜாலியாக அனுபவித்தனர்.

    இந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குக்கர், வெள்ளி கால் கொலுசு, பட்டுபுடவை மற்றும் ஒரு அரசியல் கட்சி சார்பில் ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம், மற்றொரு அரசியல் கட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் என வழங்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    சில இடங்களில் பட்டுபுடவை சரியில்லை என்று கூறி பெண்கள் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியானது. மொத்ததில் இந்த தேர்தல் காரணமாக கிழக்கு தொகுதி வாக்காளர்களின் தனிநபர் வருவாய் அதிகரித்து இருக்கிறது. 20 நாள் பிரசாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக திருநகர் காலனி, கிருஷ்ணம் பாளையம், கே.ஏ.எஸ். நகர். திரு.வி.க. வீதி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் 2-வது தவணையாக ஏதாவது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் இந்த தேர்தல் பிரசாரம் மக்களுக்கு முழுநேர தொழிலாகவே மாறி விட்டது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • பதற்றமான வாக்குசாவடிகள் முழுவதும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக போலீசாருடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த பதற்றமான வாக்குசாவடிகள் முழுவதும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மற்ற வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 77 பேர் போட்டியிடுவதால் இந்த இடைத்தேர்தலில் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் கருவி பயன்படுத்தப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாளை மாலை 5 மணி முதல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் காலை 11 மணி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

    தேர்தல் மண்டல அலுவலர்கள் இந்த பணிகளை கண்காணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 27-ந் தேதி காலை 6 மணிக்கு அந்தந்த முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அறைகளில் பெட்டிகள் வரிசையாக வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.

    இதனைத்தொடர்ந்து அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். அதனைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

    மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒரு அறையில் 10 மேஜைகளிலும் மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் எண்ணப்படுகிறது. அன்று மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    • காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • இன்று காலை முதல் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சி போட்டியிடுவதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களை தவிர 73 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் முதல் கட்ட பிரசாரம் செய்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் பிரசாரம் செய்தனர்.

    இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைவதால் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

    பிரசாரம் நாளையுடன் நிறைவடைவதால் கடந்த ஒருவாரமாகவே தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    இன்று காலை முதல் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேள தாளம் முழங்க தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

    அரசியல் கட்சியினருடன் ஏராளமான பெண்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினராகவே உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணியாற்ற பல்வேறு இடங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் வந்ததால் ஈரோடு மாநகரம் கடந்த 20 நாட்களாகவே கூட்டமாக இருந்தது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினர் நிரம்பி காணப்பட்டனர்.

    மேலும் ஈரோடு நகரின் சாலைகளில் விலை உயர்ந்த கார்களும் பவனி வந்து கொண்டு இருந்தது.

    நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்ததும் வெளிமாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நாளை மாலையுடன் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் மீது சாலையில் இருந்த தண்ணீர் பட்டதாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்த அந்த நபர் பள்ளி வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்-பவானி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை வெள்ளித்திருப்பூர், ஆலம்பாளையம், எண்ணமங்கலம், மூலக்கடை, சங்கரா பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் காலை நேரங்களில் பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மீண்டும் அவர்களை மாலையில் விடுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளி வாகனம் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

    அப்போது சங்கராபாளையம் பகுதியை கடந்து கெட்டிச்சமுத்திரம் ஏரி பகுதிக்கு அருகில் பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் மீது சாலையில் இருந்த தண்ணீர் பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் பள்ளி வாகனத்தை மோட்டார் சைக்கிளில் சென்று குறுக்கே மறித்து பள்ளி வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பள்ளி வாகனம் அரை மணி நேரத்திற்கு மேலாக அதே பகுதியில் நின்று கொண்டிருந்தது.

    இதனையடுத்து பள்ளியின் தாளாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் வாகனத்தின் உள்ளேயே அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • டிரோன் கேமிரா ஒன்று தோட்டத்து பகுதிகளுக்கு மேல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.
    • இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தாளவாடி அருகே உள்ள சூசைபுரம், பீம்ராஜ்நகர் கிராமங்களில் மதியம் 12 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது டிரோன் கேமிரா ஒன்று தோட்டத்து பகுதிகளுக்கு மேல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே விவசாயிகள் அந்த டிரோன் கேமிரா வந்த திசையை நோக்கி சென்று பார்த்தனர்.

    அப்போது அந்த கேமிரா கர்நாடக மாநிலம் பிசில்வாடி பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது. மாலை 4 மணி வரை டிரோன் கேமிரா அங்குள்ள தோட்டத்து பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது.

    அதன் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் யார் அந்த டிரோன் கேமிராவை பறக்க விட்டது என்று தெரியவில்லை.

    இது குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபுஜா குமாரி குச்சியை எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.
    • இதில் குச்சி உடைந்து தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பீகார் மாநிலம், ஹிசுவா பகுதியை சேர்ந்தவர் அனூப் மாஞ்சி (43). இவர் ஈரோடு மாவட்டம் குப்பக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அனூப்மாஞ்சி சம்பவத்தன்று பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது மகள் சபுஜா குமாரி (12) விளையாடி கொண்டிருந்துள்ளார்.

    அப்போது சபுஜா குமாரி கையில் வைத்திருந்த மரக் குச்சியை அங்கு இயங்கி கொண்டிருந்த எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.

    இதில் குச்சி உடைந்து சபுஜா குமாரியின் தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சபுஜா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு எங்களுக்கு அனுப்பப்படுகிறது.
    • நாங்களும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி அதன் விளக்கத்தை இ-மெயில் மூலம் உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை, சிக்கன், மட்டன் கறி, பிரியாணி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

    மேலும் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் குறித்து இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் நேற்று மாலை காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் ஈரோட்டில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் செலவின பார்வையாளர் கவுதம்குமார், காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறும் போது, தேர்தல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து இருப்பதாகவும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கான விளக்கமும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாக்கு சாவடி ஏற்பாடுகள், மின்னணு எந்திரம் கொண்டு செல்லும்வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், பதற்றமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தமிழக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு எங்களுக்கு அனுப்பப்படுகிறது. நாங்களும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி அதன் விளக்கத்தை இ-மெயில் மூலம் உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.

    இந்த ஆலோசனை கூட்டம் முழுக்க, முழுக்க தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தே நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது.
    • ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க.வினர் பிரசாரத்தை உற்று பார்த்தால் அவர்கள் எப்போதுமே உண்மை பேச மாட்டார்கள் என்பது நன்றாக தெரியும்.

    ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சர்களும் ஈரோட்டில் உள்ளனர். இவர்களை தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அலுவலகத்தில் சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது.

    இளங்கோவன் எம்.எல்.ஏ.வானால் அவர் பொதுமக்களை திரும்பி கூட பார்க்க மாட்டார். அவர் அமைதிப்படை அமாவாசை மாதிரி பதவிக்காக மாறி மாறி பேசுவார். அவரது தாத்தா பெரியார் காங்கிரசை எதிர்த்தார். அவரது அப்பா சம்பத் தி.மு.க.வை எதிர்த்தார்.

    ஆனால் இன்று அவரோ தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். இளங்கோவன் இதற்கு முன்னாடி கருணாநிதி, ஸ்டாலினை திட்டி தீர்த்து உள்ளார். அது பற்றி ஒரு புத்தகமே போடலாம்.

    இளங்கோவனை நம்பாதீர்கள். இதுதான் எனக்கு கடைசி தேர்தல். எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று கூறி தேர்தலில் நின்று வருகிறார்.

    எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது. ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார்.

    ஈரோடு:

    அ.தி.மு.க. சார்பில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.

    ஈரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கோகுல் இந்திரா, கே.பி.முனுசாமி உட்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அ.தி.மு.க. மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆர். ஆல் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை போராடி எடப்பாடி பழனிசாமி இன்று மீட்டு உள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டு உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிலர் தர்ம யுத்தம் நடத்தினர். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் நமது வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் முனுசாமி, நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது செல்லும் என்று தானே அர்த்தம். விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தேர்தலில் ஒரு வாக்கு சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த நிலையில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பார்வையாளர் ராஜ்குமார்யாதவ், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
    • வீரப்பன் சத்திரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நேற்று இரவு தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் விஜய், கணேஷ் பாபு ஆகிய 2 பேரை வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    ×