என் மலர்
ஈரோடு
- இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
- தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும், நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வரும் திங்கட்கிழமை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ந்தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம்.
- 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு :
காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.
இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் இதுவரை 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ஏற்கனவே 5 கம்பெனி துணை ராணுவமும், 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் தவிர உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 1,206 பணியாளர்கள் பணியாற்றுவர். வாக்குப்பதிவிற்காக 1,430 வாக்குப்பதிவு எந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அளித்த வாக்கை உறுதி செய்யும் 310 'விவிபாட்' எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்படும் எந்திரங்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டதாக ரூ.64.34 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரொக்கத் தொகை மட்டும் ரூ.51.31 லட்சமாகும். கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ.11.68 லட்சமாகும்.
தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம். இதுவரை சி-விஜில் மூலம் பெறப்பட்ட 2 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை பணப்பட்டுவாடா தொடர்பானவை அல்ல. மேலும், 1950 என்ற எண்ணின் மூலம் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் உடனடியாக மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும்.
அந்தத் தொகுதியில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் வந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நாள் காலை 8 மணிவரை தபால் ஓட்டுகள் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
- அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), ஆனந்த் (தே.மு.தி.க.) உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தாலும் அவர்களைவிட தி.மு.க.வினர் தான் அதிகம் பேர் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மேயர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்ட பகுதி கழக செயலாளர்கள் என ஏராளமானோர் சென்று முகாமிட்டு கடந்த ஒரு மாதமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னணி பேச்சாளர்கள் பிரசாரம் செய்திருந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார்.
காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரசார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பேசுகிறார்.
இதன்பிறகு பூம்புகார் நகர், காந்திநகர், வல்லரசம்பட்டி வழியாக அக்ரஹாரம் சென்று பிரசாரம் செய்கிறார். அத்துடன் காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 3 மணி அளவில் சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி வழியாக சென்று முனிசிபல் காலனி அருகே வேனில் இருந்தபடி பேசுகிறார். அதன்பிறகு மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக சென்று பெரியார் நகரில் பிரசாரம் செய்து 'கை' சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார். அத்துடன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து பின்னர் சென்னை புறப்படுகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்றும் ஈரோடு தொகுதியில் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் முகாமிடுவதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
வாக்குப்பதிவு 27-ம் தேதி நடைபெறுவதால் வெளியூரில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
- பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி பர்வதம் (55).
சம்பவத்தன்று இருவரும் மொபட்டில் தனது பேரன் நலனை ஈங்கூர் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் விடுவதற்காக சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் பாலப்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது ரோட்டினை கடப்பதற்காக மொபட்டை திருப்பி உள்ளார்.
அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மொபட் மீது மோதியது.
இதில் துரைசாமி காயமடைந்தார். அவரது மனைவி பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேரன் நலன் காயமின்றி தப்பினார்.
இது குறித்து சென்னிமலையினை சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிட் வெள்ளம் போல் குட்டப்பாளையம்- கம்புளியம்பட்டி தார் ரோட்டில் வழிந்தோடியது.
- இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, குட்டப்பாளையம் பகுதியில் பெருந்துறை சிப்காட் வளாகம் உள்ளது.
இங்கு கள்புளியம்பட்டி ஊராட்சி எல்லை பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான கெமிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5-க்கும் மேற்பட்ட பெரிய எவர் சில்வர் டேங்கில் ஆசிட் இருப்பு வைத்து சில்லரை விற்பனை நடக்கிறது.
இந்நிலையில் இரவு இந்த ஆசிட் இருப்பு வைத்துள்ள டேங் ஒன்றில் சிறிய வெடிப்பு ஏற்பட்டு ஆசிட் கசிய தொடங்கியது. கசிய தொடங்கிய ஆசிட் வெள்ளம் போல் கம்பெனியின் மண் ரோடு வழியாக வழிந்தோடி குட்டப்பாளையம்- கம்புளியம்பட்டி தார் ரோட்டில் வழிந்தோடியது.
பொதுமக்கள் செல்லும் தார் ரோட்டில் நுரையும், புகையுமாக ஆசிட் இருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு பொதுமக்கள் திரண்டு கம்பெனி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உரிமையாளர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் கொண்டு வந்து பீய்சி அடித்து ஆசிட் வீரியம் குறைந்து விடுவதாவும், அதன் பின்பு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் உரிமையாளர் உறுதி கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சதீஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத போது தேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே ஈங்கூர் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவருடைய மனைவி தேவி (வயது 30). இவர்களுக்கு 11 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
சதீசும் அவரது மனைவி தேவியும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஒப்பந்த அடிப்படையில் தையல் எந்திரங்கள் போட்டு கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் சதீஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தேவி தனது துப்பட்டாவால் வீட்டுக்குள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் தேவியின் தந்தை வேலுச்சாமி வீட்டுக்கு விரைந்து வந்தார்.
பின்னர் இது குறித்து வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
- 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.
இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.
- காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
- இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்த பகுதிகளில் தண்ணீரை பீய்சி அடித்தும்,
தீயணைப்பு வண்டி செல்ல இயலாத பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அந்த பகுதியில் யாரோ பீடி, சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு வீசிய நெருப்பால் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காப்புக்காடு பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.
வனத்துறையினர் இந்த பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும், காப்புக்காடு பகுதியில் விழிப்புணர்வு போர்டு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலையோர கடையில் தோசை போட்டு கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார்.
- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஒருவர் குடுகுடுப்பைக்காரன் வேடம் அணிந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த நாளில் இருந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதுடன் சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தலுக்கு பணியாற்றி வருகிறது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வாக்கு சேகரிக்கும் விதம் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
முனிசிபல் காலனி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீரென தள்ளுவண்டி கடை அருகே சென்றார். பின்னர் தள்ளுவண்டி கடையில் பரோட்டா போட்டு கொடுத்து கை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் முறுக்கு விற்றும், ஜிலேபி போட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்தார். இது வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்தது.
சாலையோர கடையில் தோசை போட்டு கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார். அவர் போட்டு கொடுத்த தோசையை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஊட்டி விட்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கச்சேரி வீதி பகுதியில் இஸ்திரி போட்டு கொடுத்தும் தேநீர் கடையில் டீ போட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் ட்ரம்ஸ் அடித்தும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.
வள்ளியம்மை தெருவில் சென்னை மாவட்ட தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர். அப்போது தனது வீட்டிற்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து பிரஷ்ஷை வாங்கி, வெள்ளை அடித்துக்கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நூதனமாக வாக்கு சேகரித்தனர்.
சென்னை மேயர் பிரியா மரப்பாலம் பகுதியில் வீதி வீதியாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கு ட்ரம்ஸ் அடித்து கொண்டிருந்த இசைக்கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து கொடுத்து கை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார். இது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஒருவர் குடுகுடுப்பைக்காரன் வேடம் அணிந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். இந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் ஜெயிக்கிராறுனு ஜக்கம்மா சொல்ரா ஜக்கம்மா சொல்ரா என்று கூறி வாக்கு சேகரித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
எங்கு திரும்பினாலும் கட்சி நிர்வாகிகள் செய்யும் சேவையெல்லாம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இவர்கள் போட்டு கொடுத்த பரோட்டா, டீ, தோசை எல்லாம் வாக்காக மாறுமா என்பது மார்ச் 2-ந் தேதி தான் தெரிய வரும்.
- நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தபோது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர்.
- அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர். இந்நிலையில் பிரசாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இது பற்றி தெரிய வந்ததும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் நாங்கள் அனுமதி பெற்று தான் பிரசாரம் செய்கிறோம்.
ஆனால் போலீசார் எங்கள் தொண்டர்களை அனுமதி இல்லை என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி அனுமதி இன்றி பிரசாரம் செய்தால் என்னிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் அனுமதி வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
- போலீஸ் தரப்பில் 75 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை மாலை 5 மணியுடன் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும். அதேபோல் அரசியல் கட்சியினருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை நாளை மாலை 5 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு எந்த ஒரு தேர்தல் தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. மிக முக்கியமாக நாளை மாலை 5 மணிக்கு பிறகு இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத அரசியல் கட்சியினர், பிரதிநிதிகள் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
வேட்பாளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கனவே 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து பொருட்களும் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.
மேலும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 4 நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது தொடர்பாக புகார் வந்த போது சம்பவ இடத்திற்கு நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரணை நடத்தினர்.
தலைமை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுமூகமாக நடத்தும் வகையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளன. அவர்கள் ஆலோசனைப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஏற்கனவே இது தொடர்பாக கூட்டம் நடைபெற்றுள்ளது. மீண்டும் ஒரு கூட்டம் இது தொடர்பாக நடைபெறும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் போலீஸ் தரப்பில் 75 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குக்கர் பட்டுவாடா தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக புகார் வந்தபோது சம்பந்தப்பட்ட இடத்திற்கு எங்கள் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரித்த போது அந்த பகுதி பொதுமக்கள் நாங்கள் குக்கர் வாங்கவில்லை, எங்கள் சொந்த காசில் தான் வாங்கினோம் என்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு பதற்றமான வாக்குச்சாவடி என்பது ஒரே பகுதியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள்.
அதனை ஆராய்ந்து பதட்டமான வாக்குச்சாவடி என்று கூறியுள்ளோம். மற்றபடி சட்ட ஒழுங்கு ஏற்படும் வகையில் இங்கு பதட்டமான வாக்குச்சாவடிகள் இல்லை.
அ.தி.மு.க. சார்பில் இதுவரை 13 புகார்கள் தரப்பட்டுள்ளன. அதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் 20 ஆயிரம் ஓட்டுகள் இல்லை என தெரிவித்துள்ளார். அதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் கமிஷனரான எனது ஓட்டும், எனது மனைவி ஓட்டும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
உண்மையில் அப்படி இல்லை. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இத்தொகுதியில் தான் நான் வாக்களித்தேன். எனக்கு ஓட்டு உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 பேர் அலட்சியமாக பணியாற்றியதாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நாம் தமிழர் கட்சி பிரசாரத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெயில் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
அதேபோல் வரும் 26-ந் தேதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்கள் 40 லட்சத்திற்குள் தான் செலவு செய்கிறார்களா என்பதை கண்காணிக்க தேர்தல் கணக்கு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் பொன்முடி அங்கிருந்தவர்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
- செல்லூர் ராஜூ பதிலுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பின்போது தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னாள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பும் நடந்து வருகிறது. கொள்கை ரீதியில் வேறுபட்டிருந்தாலும் நேரில் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து செல்கின்றனர்.
அதே போன்று நேற்று ஈரோடு கள்ளுக்கடை மேடு ஆலமரத்து தெருவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கை சின்னத்தில் அமைச்சர் பொன்முடி அந்த பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதே பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
பொன்முடி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் கிளம்ப சென்றபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இங்குதான் பிரசாரம் செய்கிறார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். உடனடியாக அமைச்சர் பொன்முடி காரை விட்டு இறங்கி செல்லூர் ராஜூ வாக்கு சேகரிக்கும் வீட்டுக்கு சென்றார்.
அவரைப் பார்த்ததும் செல்லூர் ராஜூ புன்சிரிப்புடன் பொன்முடியை வரவேற்றார். அப்போது ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசி ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்துக் கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்தவர்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது செல்லூர் ராஜூ தன்னிடம் கேட்காதீர்கள் அவர்களிடம் கேளுங்கள் என்று சிரித்தபடி கூறினார். உடனடியாக பொன்முடி கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
அப்போது செல்லூர் ராஜூவும் பதிலுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.
அப்போது அமைச்சர் பொன்முடி அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் அம்மா ஓட்டு போடுங்க அம்மா என்றார். அப்போது அங்கிருந்த செல்லூர் ராஜூவை பார்த்து அவரே எங்களுக்குத்தான் ஓட்டு போடுவார் என்று கூறி ஜாலியாக தட்டி கலாய்த்தார். வாக்கு கேட்க வந்த இடத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டதால் அங்கிருந்த வாக்காளர்களும் இதை ஆச்சரியமாக பார்த்து சிரித்தனர். அந்த நேரத்தில் அமைச்சர் பொன்முடி அவரது சின்னத்துக்கு வாக்களிக்காதீர்கள் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் அம்மா என்று கூறி சென்றார். அப்போது மேலும் அங்கிருந்தவர்களிடம் அமைச்சர் பொன்முடி அவர் எனக்கு சொந்தக்காரர் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் வந்த அமைச்சர் பொன்முடியிடம், செல்லூர்ராஜூ வாக்கு கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.






