என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
ஓடி ஓடி சேவை செய்யும் கட்சி நிர்வாகிகள்- சுட்ட பரோட்டாவும், தோசையும் வாக்காக மாறுமா?
- சாலையோர கடையில் தோசை போட்டு கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார்.
- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஒருவர் குடுகுடுப்பைக்காரன் வேடம் அணிந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த நாளில் இருந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதுடன் சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தலுக்கு பணியாற்றி வருகிறது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வாக்கு சேகரிக்கும் விதம் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
முனிசிபல் காலனி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீரென தள்ளுவண்டி கடை அருகே சென்றார். பின்னர் தள்ளுவண்டி கடையில் பரோட்டா போட்டு கொடுத்து கை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் முறுக்கு விற்றும், ஜிலேபி போட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்தார். இது வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்தது.
சாலையோர கடையில் தோசை போட்டு கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார். அவர் போட்டு கொடுத்த தோசையை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஊட்டி விட்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கச்சேரி வீதி பகுதியில் இஸ்திரி போட்டு கொடுத்தும் தேநீர் கடையில் டீ போட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் ட்ரம்ஸ் அடித்தும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.
வள்ளியம்மை தெருவில் சென்னை மாவட்ட தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர். அப்போது தனது வீட்டிற்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து பிரஷ்ஷை வாங்கி, வெள்ளை அடித்துக்கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நூதனமாக வாக்கு சேகரித்தனர்.
சென்னை மேயர் பிரியா மரப்பாலம் பகுதியில் வீதி வீதியாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கு ட்ரம்ஸ் அடித்து கொண்டிருந்த இசைக்கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து கொடுத்து கை சின்னதுக்கு வாக்கு சேகரித்தார். இது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஒருவர் குடுகுடுப்பைக்காரன் வேடம் அணிந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். இந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் ஜெயிக்கிராறுனு ஜக்கம்மா சொல்ரா ஜக்கம்மா சொல்ரா என்று கூறி வாக்கு சேகரித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
எங்கு திரும்பினாலும் கட்சி நிர்வாகிகள் செய்யும் சேவையெல்லாம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இவர்கள் போட்டு கொடுத்த பரோட்டா, டீ, தோசை எல்லாம் வாக்காக மாறுமா என்பது மார்ச் 2-ந் தேதி தான் தெரிய வரும்.








