search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

    • தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம்.
    • 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஈரோடு :

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

    இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் இதுவரை 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ஏற்கனவே 5 கம்பெனி துணை ராணுவமும், 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் தவிர உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 1,206 பணியாளர்கள் பணியாற்றுவர். வாக்குப்பதிவிற்காக 1,430 வாக்குப்பதிவு எந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அளித்த வாக்கை உறுதி செய்யும் 310 'விவிபாட்' எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்படும் எந்திரங்களின் எண்ணிக்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டதாக ரூ.64.34 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரொக்கத் தொகை மட்டும் ரூ.51.31 லட்சமாகும். கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ.11.68 லட்சமாகும்.

    தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம். இதுவரை சி-விஜில் மூலம் பெறப்பட்ட 2 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை பணப்பட்டுவாடா தொடர்பானவை அல்ல. மேலும், 1950 என்ற எண்ணின் மூலம் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் உடனடியாக மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    அந்தத் தொகுதியில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் வந்துள்ளன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நாள் காலை 8 மணிவரை தபால் ஓட்டுகள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×