என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தமிழகத்தில் எத்தனை இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தாலும், அரசியல் கட்சியினர் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது திருமங்கலம் பார்முலா தான்.
    • கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த சாலைகள் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக 18-ந் தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. எம்.எல்.ஏ. இறந்த 14-வது நாளிலேயே தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எந்த கட்சியினருமே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தேர்தல் வந்து விட்டது என்பதால் அனைத்து கட்சியினரும் போட்டியிட வேண்டிய நிலை உருவானது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினரும் நியமிக்கப்பட்டனர். இதே போல் அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் பணிக்குழு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சார்பிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. உள்பட 77 பேர் போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-அ.தி.மு.க.வுக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் ஆட்சிக்கு நற்சான்றிதழாக இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க.வும், வருகிற பாராளுமன்ற தேர்தல் முன்னோட்டாக இந்த தேர்தல் வெற்றி அமைய வேண்டும் என்ற முனைப்போடு அ.தி.மு.க.வினரும் தேர்தல் களப்பணியாற்றினர்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் குவிய தொடங்கினர். அவர்களுக்கு உள்ளூர் கட்சிகாரர்கள் தங்கும் விடுதிகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஈரோட்டையொட்டி உள்ள பண்ணை வீடுகள், தோட்டத்து வீடுகளை வாடகைக்கு எடுத்து கொடுத்தனர். இதில் 25 நாட்களுக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகையாக கொடுக்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் முதலில் பயன் அடைந்தது வீட்டு உரிமையாளர்கள் தான். முதலில் தொகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்தனர். இதனால் வாக்காளர்கள் பெரிதாக அரசியல் கட்சியினரை கண்டு கொள்ளவில்லை. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 10-ந் தேதி வெளியானது. அன்று முதலே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் குதித்தனர்.

    ஒரு பொறுப்பாளருக்கு 100 ஓட்டுகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர். இதனால் குறிப்பிட்ட பொறுப்பாளர் தலைமையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு வரும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை பொதுமக்கள் வரவேற்கும் வகையில் அவர்களுக்கு சில்வர் குடம், சேலை, ரூ.500 வழங்கப்பட்டது. இதே போல் 2 முக்கிய அரசியல் கட்சியினரும் மாறி மாறி மக்களை கவனித்தனர். இதனால் வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு மக்கள் பிரசார தொழிலுக்கு மாறிவிட்டனர்.

    இதையடுத்து ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் புதுபுது வகையில் பிரசார வியூகத்தை வகுத்தனர். இதில் ஒரு அரசியல் கட்சியின் பிரசாரம் அனைத்து கட்சியினரையும் கதிகலங்க வைத்தது.

    தமிழகத்தில் எத்தனை இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தாலும், அரசியல் கட்சியினர் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது திருமங்கலம் பார்முலா தான். அந்த பார்முலாவையே பின்னுக்கு தள்ளிவிட்டது இந்த ஈரோடு இடைத்தேர்தல் பார்முலா. பொதுமக்கள் பிரசாரம் செய்யவேண்டாம். அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் பணிமனைகளில் காலையில் இருந்து இரவு 10 மணி வரை அமர்ந்துஇருந்தாலே போதும் ரூ.500-ம் பிரியாணியும் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு கூடுதலாக ஒரு மதுபாட்டிலும் கொடுக்கப்பட்டது. வாக்காளர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டதால் பிரசாரம் செய்ய முடியாமல் மற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களும் கதிகலங்கினார்கள்.

    அதோடு இல்லாமல் பவானி கூடுதுறை, சென்னிமலை, திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலுக்கும் சொகுசு பஸ்களில் வாக்காளர்களை அழைத்து சென்றனர். அவர்களுக்கு 3 வேளை உணவுடன் ரூ.750 முதல் ரூ. 1000 வரை பணமும் கொடுக்கப்பட்டது. அரசியல் கட்சியினர் நல்ல முறையில் தினமும் கவனிப்பதால் பொதுமக்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஒரு கட்டத்தில் 2 அரசியல் கட்சி பிரசாரத்துக்குமே வாக்காளர்கள் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் காலையில் ரூ.500, மாலையில் ரூ.500 என தினமும் ரூ. 1000 வரை சம்பாதித்தனர்.

    நாள் முழுவதும் உழைத்தாலும் ரூ. 350-க்கு மேல் கூலி கிடைக்காத நிலையில் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேர பிரசாரத்துக்கு ரூ.1000 கிடைப்பதால் பொதுமக்கள் இடைத்தேர்தலை உற்சாகமாக கொண்டாட தொடங்கினர். அது மட்டுமின்றி திரும்பும் திசையெல்லாம் காதணி விழா என்ற பெயரில் வாக்காளர்களுக்கு மெகா பிரியாணி விருந்தும் நடத்தப்பட்டு வந்தது. சிக்கன், மட்டன் கறி, மளிகை பொருட்களும் வழங்க தொடங்கினர். பின்னர் சேலை, வேட்டி, சட்டையும் வழங்கினர். உண்ண உணவு, உடுக்க உடை, செலவுக்கு பணம் கிடைத்ததால் வாக்காளர்கள் பிரசாரத்துக்கு எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினர். அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு அழைக்காவிட்டாலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சியினரிடம் அண்ணே... இன்று பிரசாரம் உள்ளதா? என்று கேட்க தொடங்கி விட்டனர்.

    பிரசாரம் இறுதி கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்களுக்கு கவனிப்புகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. முதலில் குக்கர், தொடர்ந்து பட்டுபுடவை, வெள்ளி கால் கொலுசு, வேட்டி, சட்டை, வெள்ளி கிண்ணம், ஆகியவை வழங்கப்பட்டது. இதில் சேலை கலர் பிடிக்காமல் அரசியல் கட்சியினரிடம் பெண்கள் வாக்குவாதமும் செய்து உள்ளனர். சில பெண்கள் சேலைக்கு பதிலாக பணமும் கேட்டு வாங்கி கொண்டனர். பின்னர் ஓட்டுக்கு 2 அரசியல் கட்சியினரிடம் இருந்து 5000 ரூபாயும் மொத்தமாக கிடைத்தது. இவ்வளவு கிடைத்தும் இன்னும் ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்பில் வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த 20 நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முத்த நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் சர்வ சாதாரணமாக சின்ன சின்ன தெருக்களில் கார்களில் சென்றும், நடந்து சென்றும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர். பொதுமக்களும் அரசியல்வாதிகளுடன் செல்பியும் எடுத்து கொண்டனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் வெளியூர்களில் இருந்து ஈரோட்டிற்கு வந்து இருந்ததால் ஈரோடு மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. சில பள்ளிகளில் பள்ளிகளை முன்கூட்டியே ஒரு மணி நேரத்துக்கு முன்பே விட்டனர். அரசியல் கட்சியினர் வருகையால் ஈரோடு கிழக்கில் உள்ள ஓட்டல்கள், கறிகடைகள், சலூன் கடைகள், மதுக்கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் என எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நகரின் பல்வேறு இடங்களிலும் விலை உயர்ந்த சொகுசு கார்களின் அணிவகுப்பாக இருந்தது. சிறிய சிறிய தெருக்களில் கூட கார்கள் அணிவகுத்து நின்றது.

    நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தி.மு.க.-அ.தி.மு.க. தொண்டர்கள் நேற்று கார்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்ததால் வெளியூர் அரசியல்வாதிகள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அதன்படி வெளியூர் அரசியல் கட்சியினர் தாங்கள் தங்கிய அறைகளை காலி செய்து விட்டு நேற்று மாலை சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் ஈரோடு-சேலம் சாலையில் கடுமையான போக்குவத்து நெரிசல் ஏற்பட்டது.

    வெளியூர் அரசியல்வாதிகள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் ஈரோடு மாநகரம் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த சாலைகள் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. கடந்த 20 நாட்களாக திருவிழா போல் காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது வெறிச்சோடியது. கடைகளில் உள்ளூர்காரர்களை தவிர வெளியூர்காரர்கள் யாரும் இல்லை. இதனால் கடந்த 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஈரோடு பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.

    • தனியார் விடுதிக்கு சென்ற போலீசார் அங்கு வருகை பதிவில் உள்ள வெளி நபர்கள் விவரங்கள் குறித்து சேகரித்தனர்.
    • எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அமைதியானது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதற்கான இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட நிர்வாகிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட நிர்வாகிகளும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இதேபோல் தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெளி மாவட்ட நிர்வாகிகளும்ஏராளமானோர் ஈரோட்டில் முகாமிட்டு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

    இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகள், லாட்ஜிகள், தனி வீடுகள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள் அனைத்தும் நிரம்பியது.

    கடந்த ஒரு மாதமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் வாகனங்கள் அணிவகுத்து சென்றதை காண முடிந்தது. காலை 6 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சியினர் காலை 11 மணிக்குள் பிரசாரத்தை முடித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சியினர் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இதனால் காலை, மாலை நேரங்களில் ஈரோடு மாநகர் பகுதியில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர்.

    அரசியல் கட்சியினர் பிரசாரத்திற்கு செல்லும்போது தங்களுடன் அந்தப் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களையும் அழைத்து சென்றனர். இதற்காக அவர்களுக்கு தனி கவனிப்பும் இருந்தது. இதனால் ஈரோட்டில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.

    இந்நிலையில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இதேபோல் தே.மு.தி.க.வினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினர் தலையாகவே தெரிந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    இதனையடுத்து தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதன்படி வெளி மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக கிழக்கு தொகுதியை விட்டு வெளியேறினர். அவர்கள் முழுவதும் தொகுதியை விட்டு வெளியேறி விட்டார்களா? என்பதை கண்காணிக்க போலீஸ் சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டது.

    அவர்கள் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து சென்று ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் உள்ள தனியார் விடுதிகள், லாட்ஜிகள், திருமண மண்டபங்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு தங்கி இருந்த அரசியல் கட்சியினரை போலீசார் வெளியேற்றினர். தனியார் விடுதிக்கு சென்ற போலீசார் அங்கு வருகை பதிவில் உள்ள வெளி நபர்கள் விவரங்கள் குறித்து சேகரித்தனர். அதில் எத்தனை பேர் விடுதியில் தங்கி இருந்தனர். தற்போது அனைவரும் வெளியேறி விட்டார்களா? என்று ஆய்வு செய்தனர்.

    மேலும் ஒவ்வொரு அறைக்கு சென்றும் வெளிநபர்கள் இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர். டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் விதிமுறை காரணமாக வெளிநபர்கள் இனி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் தங்கக்கூடாது. உடனடியாக வெளியேற வேண்டும். அப்படி வெளியேறவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    இதேபோல் திருமண மண்டபங்களில் போலீசார் சென்று ஆய்வு செய்தனர். எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அமைதியானது. முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஈரோடுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் பெயர், முகவரி, எந்த ஊர், எதற்காக ஈரோட்டுக்கு வருகிறீர்கள், செல்போன் எண்கள் போன்ற விவரங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் உடமைகளையும் தீவிர பரிசோதனை செய்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 12 சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    • ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

    இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் இதர அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதனால் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் நாளை தங்களது வாக்குகளைச் செலுத்த, தொகுதிக்கு உட்பட்ட 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்

    238 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம், அதாவது 48 வாக்குச்சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர்.

    அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈ.வி.எம்.), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டக அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட 20 வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. இந்தப் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    மேலும் அந்த வாகனத்தில் வாக்குச்சாவடி அலுவலரும், 238 வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்படும் பொருட்களான பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்க தேவையான பொருள்கள், ஓட்டு பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களும் தனித்தனி சாக்கில் எடுத்துச் செல்லப்பட்டன.

    இத்தேர்தலையொட்டி, 238 வாக்குச்சாவடிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 34 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு பணியில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், துணை ராணுவ வீரர்கள், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

    அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்த கணக்கு எண் அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பாராளுமன்ற, சட்டமன்ற சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்க ப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஓட்டு போட்ட பிறகும் வாக்காளர்களை பசியோடு அனுப்ப அரசியல் கட்சியினருக்கு மனம் வரவில்லை.
    • வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்த பிறகு இறுதி கட்டமாக இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டனர்.

    இடைத்தேர்தல் வரலாற்றில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாகவே அமைந்துவிட்டது. அந்த அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களை சென்றடைந்துள்ளன. காலத்தால் மறக்க முடியாத அளவுக்கு அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வாரி வழங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் ஓட்டு போட்ட பிறகும் வாக்காளர்களை பசியோடு அனுப்ப அரசியல் கட்சியினருக்கு மனம் வரவில்லை.

    எனவே ஓட்டுப்போட்டு வந்தவுடன் வாக்காளர்கள் சுடச்சுட பிரியாணி சாப்பிடலாம் என்ற அறிவிப்பை அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்த பிறகு இறுதி கட்டமாக இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் வாக்காளர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓட்டுபோட்டு விட்டு வரும் வாக்காளர்களுக்கு பிரியாணி வழங்குவதற்காக அந்தந்த பகுதியில் இடவசதியை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஓட்டு போட்டு விட்டு வரும் வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அடையாளமாக கை விரலில் வைக்கப்படும் மையை காண்பித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சுடச்சுட பிரியாணி சாப்பிடலாம் என்று கூறி உள்ளனர். இதனால் ஓட்டு போட உள்ள வாக்காளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

    • இன்று காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர்.
    • வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும்.

    ஈரோடு:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

    இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தலுக்கு பணியாற்றியது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.

    இன்று காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அனல்பறக்கும் வகையில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேறினர். இதனால் பெரும்பாலான சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும்.

    பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டி சமுத்திரம் ஏரி கரை பெரு மாள் கோவில் பகுதியில் இருந்து சங்கரா பாளையம் சுமை தாங்கி கல் பகுதி வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதை சரி செய்யும் பணி தொடங்கியது. இதையடுத்து குண்டும் குழியுமான ரோடு பறிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சாலைகளில் ஜல்லி மற்றும் கற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. கடந்த 3 நாட்களாக பறித்து போடப்பட்டு பணிகள் செய்யாமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அந்த கற்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (25) ஐ.டி கம்பெனியில் பணி புரியும் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சங்கரா பாளையத்தில் இருந்து அந்தியூருக்கு வந்து கொண்டி ருந்தார்.

    அப்போது சாலையில் ஆங்காங்கே பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூரில உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் பல இடங்களில் கற்கள் சிதறி கிடப்பதால் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது.

    எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து விபத்து க்கள் மேலும் நடை பெறாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கி ன்றனர்.

    • மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டை காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மங்களம் (வயது 46). இவர் அந்த பகுதியில் தங்கி ஒரு தனியார் கம்பெனி யில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 80 சதவீத மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வந்ததை கேட்டு நான் வேதனை அடைந்தேன்.
    • அதிகாரிகளிடம் பற்றி பேசி முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சம்பத் நகரில் பிரசாரம் செய்தார்.

    சொல்லின் செல்வன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் மகனுக்கு கலைஞரின் மகன் ஓட்டு கேட்டு வந்து இருக்கிறேன்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தம்பி திருமகன் ஈவெராவை வெற்றி பெற வைத்தீர்கள். 46 வயதே ஆன அவர் தீவிரமாக மக்கள் பணி, கட்சி பணி ஆற்றி வந்தார். திடீரென அகால மரணம் அடைந்தார். தந்தை இறந்த அந்த இடத்தை பூர்த்தி செய்ய மகன் வருவார். ஆனால் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை மகன் இருந்த இடத்தை பூர்த்தி செய்ய அவரது தந்தை வந்து உள்ளார். எனவே அவருக்கு மாபெரும் வெற்றியை தர வேண்டும்.

    தி.மு.க. 2 ஆண்டுகால சாதனைகளை மிகப்பெரிய பட்டியலாக சொல்லலாம். அதற்கு குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் சொல்கிறேன்.

    தி.மு.க.வை பொறுத்தவரை 5 முறை கலைஞர் ஆட்சி செய்து உள்ளார். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது கலைஞர் 2 முக்கியமான விசயத்தை சொல்வார். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்பார். அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

    அவரது மகன் ஆகிய நான் சொல்வதை செய்வேன். செய்வதை சொல்வேன். சொல்லாததையும் செய்வேன். மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். நான் ஆட்சி பொறுப்பேற்ற உடன் 5 கையெழுத்து இட்டேன்.

    அதில் ஒன்று மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், உறவினர் வீட்டுக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சியாக செல்கிறார்கள். இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வேறு குடும்ப செலவு செய்கிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது.

    அடுத்ததாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம். நான் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது மாணவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் கேட்ட போது காலை உணவு சாப்பிடவில்லை என்றனர்.

    80 சதவீத மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வந்ததை கேட்டு நான் வேதனை அடைந்தேன். இதையடுத்து அதிகாரிகளிடம் இது பற்றி பேசி முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தினோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.

    அடுத்ததாக விவசாய மக்களுக்கு உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். எதற்காக என்றால் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டி, அதுவும் ஒரு பைசா குறைக்க வேண்டி. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து 1989-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது சட்டமன்றத்தில் யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் நீங்கள் ஒரு பைசா குறைக்க வேண்டி போராடி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பைசா கூட தரவேண்டாம். உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார். அதனை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி இருக்கிறோம்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகத்திலே இல்லாத அளவிற்கு சென்னையில் நடத்தினோம். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கோரிக்கை பெற்று அதை நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

    இன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் பெயரில் சமத்துவபுரம் திட்டம், உழவர் சந்தை, அரசின் முன்மாதிரி பள்ளி, பத்திரிகையாளர் நல வாரியம், எழுத்தாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் பெயரில் பள்ளிகள் மேம்பாட்டு திட்டம், காமராஜா் பெயரில் கல்லூரிகள் மேம்பாட்டு திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாட அறிவிப்பு, அதே நாளில் உறுதிமொழி எடுக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து நிறைவேற்றி வருகின்றோம். வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கின்றோம். அன்னை தமிழில் அர்ச்சனை, பெரியார் நினைத்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை திராவிட மாடல் ஆட்சி நீக்கி இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கின்றேன்.

    நீட் விலக்கு பெற்றே தீர்வோம் என்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யவில்லை என சொல்லி வருகிறார். அவருக்கு தெரியவில்லை என்றால் கண் மருத்துவரை பார்த்து பரிசோதிக்க வேண்டும். அல்லது பேசிய பேச்சையாவது கேட்டு பார்க்க வேண்டும்.

    உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். 85 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமுள்ள வாக்குறுதிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன்.

    பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை நிதிநிலை ஒழுங்காக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி இருப்போம். கஜானாவை காலியாக மட்டுமல்லாமல் கடன் வைத்து சென்றார்கள். அதனை சரி செய்து வருகின்றோம். அவை சரி செய்யப்பட்டவுடன் உறுதியாக வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு எப்பொழுது வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கின்றோம்.

    இது எடப்பாடிக்காக சொல்லும் வார்த்தை அல்ல. ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம். சொல்லாததையும் செய்வோம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

    இந்த இடைத்தேர்தல் ஒரு எடை தேர்தலாக பார்க்க வேண்டும். இந்த ஆட்சி எப்படி இருக்கிறது? என்ன செய்திருக்கிறது? தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்திருக்கிறார்களா? முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா என்பதை எடை போட்டு நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு வழங்க தயாராக இருக்கிறீர்கள்.

    திருமகன் ஈவேரா கடந்த தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், உதயநிதி ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டு சென்றார், ஆனால் நான் கேட்கிறேன். அ.தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு தேவை. அந்த வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். சத்தியமாக, உறுதியாக, நிச்சயமாக இதை நீங்கள் செய்வீர்களா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம்.
    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களின் காவல் அரணாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்தது அ.தி.மு.க. தான். ஆனால் தேர்தல் வந்த உடன் பொய்களை சொல்லிக் கொண்டு வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது பா.ஜனதா கட்சி. அந்த சட்டத்தை கொண்டு வந்த போது ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்ட கட்சி அ.தி.மு.க. தான். மாநிலங்களவையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தான் குடியுரிமை சட்டம் நிறைவேறியது.

    ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர். உங்களுக்கு நன்றாக தெரியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி குடியரசு தலைவருக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம்.

    அருந்ததியர் மக்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கலைஞர் தான். அந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சமயத்தில் கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு முதுகில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் ஓய்வுபெற்று வந்தார். இந்நிலையில் துணை முதலமைச்சராக இருந்த என்னை தலைவர் கலைஞர் கூப்பிட்டு இன்று சட்டமன்றத்தில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. என்னிடத்தில் இருந்து நீ தான் நிறைவேற்றி தரவேண்டும் என்றார். அதன் அடிப்படையில் நான் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அருந்ததியருக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

    ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வரப்போகிறது.

    அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன். அத்தனை பேரையும் பிடித்து ஜெயிலில் போடுவோம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு அந்த அம்மா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.
    • ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கொடுத்து அனுப்புவர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது.

    நாளை காலை வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.

    அவற்றுடன் அந்தந்த வாக்குசாவடியில் பணி செய்யும் அலுவலர்களும் உடன் செல்வார்கள். அவர்களிடம், ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கொடுத்து அனுப்புவர். அதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 238 ஓட்டுச்சாவடிக்கும் தனித்தனியே பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்கத் தேவையான பொருட்கள், ஓட்டுப்பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களை சாக்கிலும், பெரிய டிரம்மிலும் போட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது.
    • நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளின் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது.

    ஈரோடு:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

    * திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈ.வி.கே. சம்பத்.

    * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும்.

    * ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    * புதுச்சேரியில் அடிபட்டு கிடந்த கருணாநிதியை பெரியார் அரவணைத்தார்.

    * ஈ.வி.கே. சம்பத் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

    * மறைந்த திருமகன் ஈ.வெ.ரா தொகுதி வளர்ச்சி, மக்கள் பிரச்சினைக்கு பேரவையில் குரல் கொடுத்தார்.

    * திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார்.

    * சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

    * நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது.

    * தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம்.

    * தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    * திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது.

    * குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

    * உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம், அவர்களுக்கு வீல் சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோட்டில் காலையில் பனி தாக்கம் இருந்தாலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.

    வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த பகுதிக்குள் வெளி நபர்கள் வரக்கூடாது என்பதற்காக கோடு போடப்பட்டு வருகிறது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.

    இதேபோல் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் வீடியோ மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இது தவிர நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிக்கின்றனர்.

    ×