search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்
    X

    கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    • ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம்.
    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களின் காவல் அரணாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்தது அ.தி.மு.க. தான். ஆனால் தேர்தல் வந்த உடன் பொய்களை சொல்லிக் கொண்டு வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது பா.ஜனதா கட்சி. அந்த சட்டத்தை கொண்டு வந்த போது ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்ட கட்சி அ.தி.மு.க. தான். மாநிலங்களவையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தான் குடியுரிமை சட்டம் நிறைவேறியது.

    ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர். உங்களுக்கு நன்றாக தெரியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி குடியரசு தலைவருக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம்.

    அருந்ததியர் மக்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கலைஞர் தான். அந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சமயத்தில் கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு முதுகில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் ஓய்வுபெற்று வந்தார். இந்நிலையில் துணை முதலமைச்சராக இருந்த என்னை தலைவர் கலைஞர் கூப்பிட்டு இன்று சட்டமன்றத்தில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. என்னிடத்தில் இருந்து நீ தான் நிறைவேற்றி தரவேண்டும் என்றார். அதன் அடிப்படையில் நான் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அருந்ததியருக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

    ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வரப்போகிறது.

    அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன். அத்தனை பேரையும் பிடித்து ஜெயிலில் போடுவோம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு அந்த அம்மா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×