search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு
    X

    முதலமைச்சர் பிரசாரம்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

    • இன்று காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர்.
    • வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும்.

    ஈரோடு:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

    இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பாக அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஒரு படையே தேர்தலுக்கு பணியாற்றியது. அதேபோல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.

    இன்று காலை முதலே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அனல்பறக்கும் வகையில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேறினர். இதனால் பெரும்பாலான சாலைகள் மற்றும் தங்கும் விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும்.

    பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×