என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக குறைந்து உள்ளது.
- அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 689 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 7 திருட்டு வழக்கில் ராஜீவ்காந்திக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
- சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு வீட்டில் திருடிய வழக்கில் செந்தில்குமார் (30), கருப்புசாமி (31), பாலசுப்ரமணி (42) ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு திட்டங்களை வகுத்து கொடுத்தது ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி (35) என தெரிய வந்தது.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் செந்தில்குமார் ஏற்கனவே பெருந்துறையில் 2021-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீஸ்காரர் ராஜீவ்காந்தி சென்றார்.
அப்போது செந்தில்குமாருடன் நட்பை ஏற்படுத்தி சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தன்னை சந்திக்குமாறும், போலீசில் சிக்காமல் திருட்டு வழிப்பறியில் ஈடுபட திட்டம் வகுத்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி ஜாமீனில் வெளிய வந்த செந்தில்குமார் கூட்டாளிகளுடன் சென்று போலீஸ்காரர் ராஜீவ் காந்தியை சந்தித்துள்ளார்.
அப்போது போலீஸ்கார் ராஜீவ்காந்தி பெருந்துறை யில் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் செந்தில்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகளை வேலைக்கு சேர்த்து விடுவது போல் சேர்த்து விட்டு திருடுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
அதன்படி செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்தோடு, பெருந்துறை, திருப்பூர் என பல்வேறு இடங்களில் வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதனையடுத்து போலீஸ்காரர் ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது ராஜீவ் காந்தி கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கடந்த 2009 முதல் 2020-ம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.
பணிபுரிந்த காலத்தில் பல குற்றச்சாட்டுகள் சர்ச்சைகள் இருந்ததால் அவர் அடுத்த டுத்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறை போலீஸ் நிலையத்தில் குற்ற பிரிவு முதன்மை காவலராக பணி புரிந்தார். அதன் பின்னர் அவர் ஈரோடு ஆயுதப்ப டைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூரில் அவிநாசி சப்-டிவிஷனில் பெருமா நல்லூர், குன்னத்தூர், அவிநாசி, ஈரோட்டில் சித்தோடு, பெருந்துறை என 7 திருட்டு வழக்கில் ராஜீவ்காந்திக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.
- முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை.
சென்னிமலை:
ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.
ஏலத்தை விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 105 வாழைத்தா ர்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் செவ்வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 35 ரூபாய்க்கும், தேன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 10 ரூபாய்க்கும்,
அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கும், பச்சை வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும்,
ரஸ்தாளி வாழை குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,075 கிலோ எடையுள்ள வாழைத்தார்கள் ரூ.10 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.
முதன்முதலாக தொடங்க ப்பட்ட வாழைத்தார் ஏலத்தில் விலை குறைவாக கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது குறித்து ஈரோடு வேளாண் விற்பனைக்குழு அலுவல ர்கள் கிராமங்கள் தோறும் அறிவிப்பு செய்திருந்த னர்.
ஆனாலும் விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்ததால் வியாபாரிகளும் குறைவாக வந்தனர்.
முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை. இனிவரும் வாரங்களில் நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.
- பிக்கப் வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர்.
ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக் என்பவருடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகிய நிலையில் ஞான சவுந்தர்யா அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டும் படித்து வந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது அக்கா ஞான சவுந்தர்யாவை பெரியகொடிவேரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் சென்று உள்ளார்.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி ஞான சவுந்தர்யாவை அழைத்து கொண்டு குமாரபாளையத்தில் இருந்து பவானி-சத்தியமங்கலம் சாலை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே சத்தியமங்கலம்-பவானி சாலை நோக்கி வந்த பிக்கப் வேன் ஒன்று கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கிருஷ்ணமூர்த்தி சாலையில் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஞான சவுந்தர்யா சாலையோரம் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனையடுத்து பவானி அரசு மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த அக்கா, தம்பி உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆப்பக்கூடல் பகுதியில் கடந்த 2 நாட்களில் சாலை விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
அதனால் ஆப்பக்கூடல் மற்றும் பவானி சாலையில் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதி, போலீஸ் நிலையம் பகுதியில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைத்து கொடுத்து மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 16,290 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நிலஅதிர்வு, ஆழிப்பேரலையால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்க ப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரங்களை 4 ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆண்டு முதலும் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஒரு ஹெக்ேடருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3.. என எண்கள் குறித்து விவசாயியுடன் புகைபடம் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
காப்பீடு செய்வதற்கு முன்மொழி படிவத்துடன், ஆதார் நகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம்,
காப்பீடு செய்வதற்கன வேளாண்மை உதவி இயக்குநரின் சான்றிதழ், கட்டணத்திற்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
- குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
- ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள்ஊர்வலமாக அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அங்கு உள்ள சிவலிங்கத்துக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சருகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.
பின்னர் பக்தர்கள் புடைசூழ கோவில்பூசாரிகள் ஊர்வலமாக வந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
முன்னதாக இதில் கலந்து கொண்ட ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.
- வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு கணேச புரம், சிங்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி (25). மைதிலி கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து க்கொண்டு மைதிலி தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். பின்னர் கணேசன் சமாதா னப்படுத்தி மனைவியை உடன் அழைத்துச்செல்வார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கணவரை பிரிந்து மைதிலி தாய் வீட்டில் வசித்து வந்தார்.
மைதிலிக்கு சின்ன வயதில் இருந்தே கோபப்பட்டால் தலையை சுவற்றில் முட்டி கொள்வது வழக்கம். இதனால் அவருக்கு தலைவலி இருந்து உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலிக்கு மீண்டும் தலைவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் உறவினர் ஒருவ ருக்கு போன் செய்து மைதிலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அவரது தாய் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் அவரது உறவினர் மைதிலி வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார்.
- இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள மைலம்பாடி புது காலனி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று நாராயணசாமி தனது வீட்டின் அருகில் மறைவான இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
உடனே நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாராயணசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மனைவி வளர்மதி பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அந்தியூர் வனப்பகுதியையொட்டியுள்ள கோபிசெட்டி பாளையம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளை இணைத்தும் இந்த புதிய சரணாலயம் அமைக்கப்படுகிறது.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி வட்டங்களில் சிறிதளவு கூட இந்த காப்பகத்தில் இடம் பெறாது.
ஈரோடு மாவட்டம் அதிக அளவிலான வனப்பகுதியை கொண்ட பகுதியாகும். இந்த வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தைகள், மான்கூட்டங்கள், உள்ளிட்ட வனவிலங்குகளும், பறவை இனங்களும், விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடி, கொடிகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கி வருகிறது. இந்த வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதோடு இல்லாமல் வனப்பகுதிகளில் ஏராளமான குளம், ஏரி, குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் அதிகளவில் காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ள நிலையில் நேற்று நடந்த பட்ஜெட் தாக்கலின் போது ஈரோடு மாவட்டத்தில் புதியதாக தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் தாலுகாவில் உள்ள 80.567 ஹெக்டேர் வனப்பகுதியில் இந்த புதிய வனவிலங்குகள் சரணாலயம் அமையபெறுகிறது. இது தமிழகத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது-
ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி வனச்சரக பகுதிகள் முழுமையாகவும், அந்தியூர் வனப்பகுதியையொட்டியுள்ள கோபிசெட்டி பாளையம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளை இணைத்தும் இந்த புதிய சரணாலயம் அமைக்கப்படுகிறது. இந்த சரணாலயத்தில் எந்த பகுதிகள் இருக்கும் என்பது இப்போது தெரியாது. ஆனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி வட்டங்களில் சிறிதளவு கூட இந்த காப்பகத்தில் இடம் பெறாது. எந்தெந்த பகுதிகளை இணைப்பது என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின்பு வனப்பகுதி அல்லாத பிற பகுதிகளை சரணாலயத்துடன் இணைக்க வேண்டியிருப்பின் அங்கு குடியிருக்கும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.
மேற்குதொடர்ச்சி மலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து அந்தியூர் வனப்பகுதி வழியாக புலிகள் சத்தியமங்கலம் காப்பக பகுதிக்கு இடம் பெயர்வது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது போன்று 9 புலிகள் அந்தியூர் வனப்பகுதியில் நடமாடியிருப்பது வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. புலிகள் நடமாட்டத்தில் இடையூறுகளை தவிர்க்க இந்த புதிய வனவிலங்கு சரணாலயம் அமையும். அதோடு இல்லாமல் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், மற்றும் மான்கள் உள்ளிட்டவை அதிகம் வசிக்கிறது.
இது தவிர இந்த புதிய சரணாலயத்தில் 21 வகையான பாலூட்டிகள், 136 வகையான பறவைகள்மற்றும் 118 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. இந்த வன சரணாலயத்தின் பெரும்பாலான பகுதிகள் பர்கூர் மலையின் கீழ் வருவதால் யானைகள் பாதுகாப்புக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும் மனித-விலங்கு மோதல் தடுக்க வாய்ப்பாக அமையும். மேலும் இந்த வனவிலங்கு சரணாலயம் அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி ஆகிய காப்புக்காடு பகுதிகளில் மட்டுமே அமையும்.எனவே அங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது. சரணாலயம் தொடர்பாக அனைவரிடமும் கலந்து ஆலோசனை நடத்தி பின்னர்திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் வரபாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடு முடி, ஈரோடு தாலுகா, டவுன், வெள்ளிதிருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கக்கூடல் கோபி, அந்தியூர் என்ன மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
இதில் அனுமதியின்றி மது விற்றதாக ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரணடனர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை மருத்துவர் வாரம் ஒருமுறை வர வேண்டும்.
50 சதவீதம் கால்நடை தீவன மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். கால்நடைகளுக்கு 24 மணி நேரமும் வாரத்தில் அனைத்து நாட்களும் இலவச மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.
கால்நடை களுக்கு தடை இல்லாமல் விலையில்லா இறப்பு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும் வரை பல்வேறு கட்ட போரா ட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.
இதையொட்டி அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- ஒரு யானை ரோட்டை கடப்பதற்கு வேகமாக ஓடி வந்தது.
- இதைப்பார்த்த வாகன ஓட்டி திடீர் பிரேக் பிடித்தார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்பொழுது வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சி காரணமாக தண்ணீர், உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஒரு யானை ரோட்டை கடப்பதற்கு வேகமாக ஓடி வந்தது.
இதைப்பார்த்த வாகன ஓட்டி திடீர் பிரேக் பிடித்தார். இதனால் யானை பயங்கர சத்தம் போட்டது.
பின்னர் யானை ரோட்டை கடந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைக்கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இது பற்றி வனத்துறை யினர் கூறும்பொழுது,
வரும் 2 மாதங்களுக்கு யானைகள் தண்ணீருக்காக ரோட்டை அங்கும் இங்கும் கடப்பது அதிகமாக இருக்கும்.
அதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதிக்குள் மெதுவாக வாகனத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டனர்.






