என் மலர்
ஈரோடு
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக இன்று நடைபெறவுள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும். மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி நோய் வரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் தோழமைச் சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து பணியாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் முடிவு செய்யப்படும்" என்றார்.
- சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
- விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் சார்பில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று கோபி-சத்தி மெயின் ரோடு கொடிவேரி அணை பிரிவு பகுதியில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து காலை 10 மணி முதலே விவசாயிகள் கொடிவேரி அணை பிரிவு பகுதிக்கு கையில் பதாகைகளுடன் திரண்டு வந்தனர். பின்னர் காலை 10.50 மணி அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன சபை தலைவர் ராமசாமி வரவேற்றார். இதில் காலிங்கராயன் பாசன பகுதி சங்கத் தலைவர் வேலாயுதம் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு பிரியதர்ஷினியை மருத்துவ குழுவினர் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் சுகாதார செவிலியரின் துரித செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தாலுகா பங்களாதொட்டி ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (20). நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் வலியால் துடித்தார். உடனடியாக மருத்துவர் அவரை மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு பிரியதர்ஷினியை மருத்துவ குழுவினர் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆசனூர் வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டு இருந்த போது பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட அவசர கால மருத்துவ நுட்புநர் தனசேகர், சுகாதார செவிலியர் லாவண்யா மற்றும் டிரைவர் குருமல்லப்பா வனவிலங்கு நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி பிரசவம் பார்த்தனர்.
இதில் பிரியதர்ஷினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் சுகாதார செவிலியரின் துரித செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது மகனை பார்க்க வந்தார்.
அப்போது அவர் குடி போதையில் இருந்தார். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவரை பள்ளிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து அவர் ஆசிரியர்களை ஆபாசமாக பேசி னார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து தகராறு செய்தார்.
இதை தொடர்ந்து குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கிழித்துக் கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார்.
போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தீபன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதை தொடர்ந்து தீபன் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு போன் செய்து தகாத வார்த்தையால் பேசி, 'காலை என்ன செய்கிறேன் பார்' என கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து பள்ளி தலைைம ஆசிரியர் பவானி சாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைமறைவான தீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- கண்டெய்னர் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் உரசியது.
- விபத்து நடந்த பகுதி சேலம்-கோவை பைபாஸ் சாலை என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானி:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சீதாராம் பாளையம் சத்திவேல்நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (65). இவரது மகன் தனசேகரன் (34). இவர்கள் 2 பேரும் இன்று காலை ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஜாதகம் பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். அவர்கள் பவானி லட்சுமிநகர் காவிரி ஆற்று பாலத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் வெப்படைக்கு 14 சக்கரம் கொண்ட கண்டெய்னர் லாரி பஞ்சு லோடு ஏற்றிக் கொண்டு சென்றது. லாரியை கேரளாவைச் சேர்ந்த ஹக்கீம் (47) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது திடீரென கண்டெய்னர் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் நிலைத்தடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது பின்பக்க சக்கரங்கள் அவர்கள் மீது ஏறி இறங்கி நசுக்கியது. இதில் ஞானசேகரன் அவரது மகன் தனசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மூளை சிதறி பலியானர்கள்.
இது குறித்து தெரிய வந்ததும் சித்தோடு போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த பகுதி சேலம்-கோவை பைபாஸ் சாலை என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 12 டன் மீன்கள் வரத்தாகி உள்ளது.
- மீன்வரத்து எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதமாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் மீன்கள் வரத்தாகி வருகிறது.
இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு வந்தது. வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 12 டன் மீன்கள் வரத்தாகி உள்ளது. மீன்வரத்து எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.
இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:
அயிலை-250, மத்தி-250, வஞ்சரம்-1000, விளாமீன்-350, தேங்காய் பாறை-450, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-700, இறால்-700, சீலா-450, வெள்ளை வாவல்-900, கருப்பு வாவல்-750, பாறை-500, மயில்மீன்-800, பொட்டு நண்டு-450, கிளிமீன்-600, மதனமீன்-500, மஞ்சள்கிளி-300, கடல் விலாங்கு-300, திருக்கை-400.
இதேபோல் ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இன்று மார்க்கெட்டிற்கு கேரளா, ஆந்திராவில் இருந்து வெறும் 2 ஆயிரம் பெட்டி தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ தக்காளி விலை கிடுகிடுவன உயர்ந்து ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் தக்காளி ரூ.20 முதல் 30-க்கு விற்பனையானது. அதன் பின்னர் ரூ.45 முதல் 50 ரூபாய் உயர்ந்து விற்கப்பட்டது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 70 ஆக உயர்ந்தது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.
- மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட புஞ்சை துறையா ம்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் அவரிடம் அரசு மது பானத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ப னை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.
விசார ணையில் அவர் கொ டிய ம்பாளை யத்தை சேர்ந்த ராம சா மி (62) என்ப து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல மொடக்குறிச்சி போலீசார் மேற்கொ ண்ட சோத னையில் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி டாஸ்மாக் அருகில் அரசு மதுபானத்தை சட்டவிரோ தமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த மொடக்குறிச்சி, மஞ்சக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த தண்ட பாணி (78) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
- இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 27 லட்சம் ஆகும்.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரக்கொப்பரைகள் 1,947 மூட்டைகள் வர பெற்றிருந்தன.
இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 70-க்கும், அதிகபட்சமாக ரூ. 79.20-க்கும் விற்பனையாகின. 2-ம் தரக்கொப்பரைகள் 1,696 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.21-க்கும், அதிகபட்சமாக ரூ. 74.09-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 27 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறை அருகே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருந்துறை-கோவை ரோட்டில் உள்ள பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் 1 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் சிவகிரி, மாரங்காட்டூர் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பதும் தற்போது பெருந்துறை ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.44 அடியாக சரிந்து உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 1,138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதேநேரம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.44 அடியாக சரிந்து உள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 171 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- 3-வது நாளாக இன்று தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
- பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும்.
இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.725-யை ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்று தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி கூறியதாவது:
3-வது நாளாக இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் நாளை காலை மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.அதன் முடிவை பொறுத்து பணியாளர்களின் போராட்டமும் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 3 நாட்களாக குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பவானி தீயணைப்பு துறை சார்பில் முதல் உதவி சிகிச்சை ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
பவானி:
தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவேரி ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின் போது தண்ணீரால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டு பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி கூடுதுறையில் பவானி தீயணைப்பு துறை சார்பில் தண்ணீரில் அடித்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வரை என ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் பவானி தீயணை ப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள், பொது மக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






