என் மலர்
திண்டுக்கல்
- செயின் பறித்ததாக கொடுத்த புகாரின்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- இவ்வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி (42) இவர் கடந்த மார்ச் மாதம் நத்தம்- மதுரை சாலையில் உள்ள நல்லாகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன் (26) என்பவர் 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரணை செய்து வந்தார். இந்நிலை யில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹரிதர்சனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளி த்தார்.
- அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து மதுரை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் உள்பட அதிகாரிகள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- அணையில் உள்ள ஷட்டர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அமைந்துள்ளது. இந்த நதியின் மொத்த உயரம் 74 அடியாகும். தாண்டிக்குடி, பண்ணை க்காடு, கடுகுதடி, கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இந்த அணை நீர் மூலம் ஆத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்ய ம்பாளையம் பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யங்கோட்டை, தேவரப்பன்பட்டி ஊராட்சி களுக்கு குடிநீர் வினியோக த்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து மதுரை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அணையில் உள்ள ஷட்டர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மஞ்சளாறு வடிநில க்கோட்டை செயற்பொறி யாளர் சுகுமார், உயர் செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
பழனி:
பழனி அடுத்துள்ள மானூர் ஆற்றுப்பாலத்தில் இன்று காலை ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி சரவணன் தலைமையில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பழனி மானூர் அண்ணாநகரை சேர்ந்த காளிமுத்து மகன் சிவா(23) என தெரியவந்தது.
கூலிவேலை பார்த்து வந்த இவர் அவ்வப்போது இரவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் அவருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
- குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்மகன் பாண்டியராஜன்(35). இவருக்கு திருமணமாகி கனகவள்ளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றுஇரவு அந்த டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு பின்னர் மீண்டும் திண்டுக்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் இன்றுகாலை பாண்டியராஜன் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே வேலைக்கு சென்ற தனது கணவர் வராததது கண்டு கனகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் வரவே வத்தலக்குண்டு வந்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும்.
திண்டுக்கல்:
தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி புறப்படும் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு திண்டுக்கல்லில் தெரிவித்ததாவது:-
இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி இந்த சுற்றுலா பயணம் தொடங்குகிறது.
தீபாவளியன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும். இந்த ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், ஒரு பேட்டரிகார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகிறது.
தென்காசியில் புறப்படும் இந்த ரெயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக செல்லும்
நவம்பர் 16-ந் தேதி ராமேஸ்வரம் வந்து பின்னர் 17-ந் தேதி தென்காசி வந்தடையும். பயண கட்டணமாக படுக்கை வசதிக்கு ரூ.16,850ம், மூன்றடுக்கு ஏசி வகுப்புகளுக்கு ரூ.30,500ம் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏசி மற்றும் ஏசி வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
மேலும் மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும். மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம்.
- முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்.
இஸ்ரேல்-காசா மோதல் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-
இஸ்ரேல் தான் எங்களின் ஆரம்ப இலக்கு. உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம். முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்.
லெபனான், சிரியாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் பாலஸ்தீனியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை மற்றும் கொலைகள், குற்றங்கள் இல்லாத 510 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப்பரப்பு ஒரு அமைப்பின் கீழ் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பிணை கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பிணை கைதியை அனுப்பி அவர்களை தூக்கிலிட போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். ஆனால் இதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பாக மண்டல அளவிலான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
போராட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், தேனி மாவட்ட செயலாளர் ராஜன், கரூர் மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தொடக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பூசாரி உள்பட நிர்வாகிகள் விளக்க உரையாற்றினர்.
கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 6வது ஊதியக்குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்திட வேண்டும்.
தமிழகத்தில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- போலீசார் 2 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் லோகேஸ்வரன்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து ேலாகேஸ்வரனை கைது செய்தார்.
இதேபோல் நத்தம் கோமணம்பட்டியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் அஜித்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விக்ேடாரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அஜித்தை கைது செய்தார்.
- மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.
- பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பஸ் நிலையம் நிலக்கோட்டை மையப் பகுதியான இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழமையான தாலுகாவில் நிலக்கோட்டையும் ஒன்று. கோட்டை பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளில் இருந்து நிலக்கோட்டைக்கு பூ மார்க்கெட் பூ விற்பதற்கும்,
அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும் பஸ்களில் திண்டுக்கல் பஸ் மட்டுமே நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்கிறது.மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.
பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பஸ்நிலையம் தெரியாமல் அலையும் சூழல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் நிலக்கோட்டை பஸ்நிலையத்தினுள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தடியன்குடிசை கானல்காடு இடையே பழமையான மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
- பொதுமக்கள் உதவியுடன் 2 அறுவை இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.
பெரும்பாறை :
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை சாரலுடன் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது. இதே போல் மேல்மலை கிராமங்களிலும் தொடர் மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை தடியன்குடிசை கானல்காடு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.
இதனால் பெரும்பாறை - தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தடியன்குடிசை கானல்காடு இடையே நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் சாலைக்கு மேல்புறம் தனியார் தோட்டத்தில் இருந்த பழமையான மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் மின் கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தலைமையில் காலை 8.30 மணிக்கு அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் 2 அறுவை இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கின. இதனால் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மினுக்கம்பட்டி உபமின்நிலையத்தில் நாளை(13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
வேடசந்தூர்:
மினுக்கம்பட்டி உபமின்நிலையத்தில் நாளை(13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அய்யர்மடம், குரும்பபட்டி, குட்டம், ஆசாரிபுதூர், சுக்காம்பட்டி, எஸ்.கே.புதூர், கேட்டைமேடு, வி.புதுக்கோட்டை மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
- சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுவதால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.
- சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில் தரகு மண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்தும், வேடசந்தூர், குஜிலியம்பாறை, அய்யலூர், எரியோடு, கோவிலூர், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
சாம்பார் காய் எனப்படும் சின்ன வெங்காயம் காரம் அதிகம் உள்ளதால் வீட்டு சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை திடீர் உச்சமடைந்தது. மொத்த மார்க்கெட்டில் 3 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட. நிலையில் கிலோ ரூ. 90க்கு விற்கப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் சில்லறை கடைகளில் மூன்று தரங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது புது காய்களின் வரத்து அறவே இல்லாத நிலையில் பட்டறை காய் எனப்படும் பழைய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால் திடீர் விலையேற்றம் உள்ளது. இதுவும் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உச்சத்தை தொடும். தற்போது கிலோ ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது என்று சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.
சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.






