search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் விடிய விடிய மழை : மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
    X

    தாண்டிக்குடி அருகே சாலையில் குறுக்கே விழுந்த மரம்.

    கொடைக்கானலில் விடிய விடிய மழை : மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    • தடியன்குடிசை கானல்காடு இடையே பழமையான மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
    • பொதுமக்கள் உதவியுடன் 2 அறுவை இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.

    பெரும்பாறை :

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை சாரலுடன் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது. இதே போல் மேல்மலை கிராமங்களிலும் தொடர் மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை தடியன்குடிசை கானல்காடு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் பெரும்பாறை - தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தடியன்குடிசை கானல்காடு இடையே நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் சாலைக்கு மேல்புறம் தனியார் தோட்டத்தில் இருந்த பழமையான மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் மின் கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தலைமையில் காலை 8.30 மணிக்கு அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் 2 அறுவை இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கின. இதனால் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×