என் மலர்
கடலூர்
கடந்த 2014-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பண்ருட்டி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.
இதனை தொடர்ந்து அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி கிராமப்புற மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இதில் தகுதி இல்லாத பலருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு மோசடி செய்திருப்பதாக தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் இன்று கீழ்மாம்பட்டு வந்தனர்.
முறைகேடாக கட்டப்பட்டு உள்ள வீடுகள் எவை? என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியை சேரந்தவர் குப்புசாமி(வயது 75). தி.மு.க. பிரமுகர். இவர் தி.மு.க.தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.
கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை குப்புசாமி வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக செய்தி வாசிக்கப்பட்டது.
இதைகேட்டதும் குப்புசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இறந்துபோன குப்புசாமிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
சிதம்பரம் நகராட்சியில் ஏற்கனவே 5 ஆயிரத்து 300 இணைப்புகள் இருந்தன. ஆனால், புதிதாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்து அதற்கான பணம் முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதேபோல் சிதம்பரம் கனகசபை, பஸ் நிலையம் பகுதிகளில் நீர் உந்துநிலையம் அமைக்க ரூ.11 லட்சத்து 49 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் குடிநீர் அளவீட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை.
நல்லாம்புத்தூரில் சேதமடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணற்றை சீரமைக்காமலேயே சீரமைத்ததாக கணக்கு காண்பித்து அதற்குரிய செலவின தொகை பெறப்பட்டுள்ளது.
பழுது மற்றும் பராமரிப்புக்காக ரூ.1 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் இடத்தில் பொருத்த வேண்டிய குடிநீர் வால்வுகள் அமைக்கப்படவில்லை.
சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.3½ கோடி அளவில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய சிதம்பரம் உதவி செயற்பொறியாளர்கள் அசோகன், பாண்டியன், விஜயகுமார், உதவி பொறியாளர்கள் விஜயலட்சுமி, காசிநாதன், சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சக்தி(வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று நள்ளிரவு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் டேங்குகளை ஏற்றி கொண்டு புதுவைக்கு வந்து கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாரி கடலூர்-சிதம்பரம் சாலை கோ-ஆப்-டெக்ஸ் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் பலத்த சத்தத்துடன் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சக்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த அந்த லாரியை கிரேன் மூலம் அகற்றினர். இந்த விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரம் கடலூர்- சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. லாரியை அகற்றிய பின்பு போக்குவரத்து மீண்டும் சீரானது.
இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் மணிமுக்தாறு செல்கிறது. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரசு சார்பில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த மணல் குவாரிகளில் பணம் கட்டி மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றி சென்று வந்தனர்.
இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி செல்ல மணல் குவாரிக்கு சென்றனர். பின்னர் குவாரியில் மணல் அள்ளி முடித்ததும் குவாரி ஊழியர்களிடம் பணம் கட்ட சென்றனர்.
அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.100 வீதம் கொடுத்தனர். அதை அங்கிருந்த ஊழியர்கள் ஏற்க மறுத்து ஏ.டி.எம். கார்டு மூலம்தான் பணம் கட்ட வேண்டும் என்றனர்.
இதைகேட்டதும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை மணல் குவாரி அருகே வரிசையாக நிறுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாட்டு வண்டிகள் அணிவகுத்து நின்றன.
பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் போராட்டம் நடத்தியதால் அங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும். நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டதால் மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி உபரிநீர் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு வந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது.
இன்று அது 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.75 அடியாக இருந்தது. இன்று காலை அது 45.15 அடியாக உயர்ந்தது. ஏரியில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இன்னும் 2 நாட்களில் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது.
வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகளவு உள்ளதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், சேத்தியாதோப்பு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
வீராணம் ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. ஓரிரு நாட்களில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். மேலும் ஏரி நிரம்பிய பின்னர் சென்னைக்கு வினாடிக்கு 72 கனஅடி நீர் அனுப்பி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். #VeeranamLake
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த திருமலை அகரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பெரியசாமிக்கும், கொள்ளத்தங்குறிச்சி பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். அதற்காக பெரியசாமி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியசாமிக்கும், விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் நந்திமங்கலம் சென்றிருந்தார்.
அங்கிருந்து பெரியசாமி சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இரவு 9.50 மணியளவில் அவரது மோட்டார் சைக்கிள் திருமலையகரம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆண்டுதோறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ஸ்ரீமுஷ்ணம் கீழ் மற்றும் மேல்புளியங்குடி, ஸ்ரீராமன், ரெட்டிபாளையம், கரப்பை போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல் கொள்முதல் செய்து பயன்பெற்று வந்தனர்.
இந்த ஆண்டு நெல் கொள்முதல் தாமதமாக கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் மட்டும் திறந்து குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்தனர்.
ஆனால், விவசாயிகள் அந்த நெல் கொள்முதல் நிலையம் முன்பு நெல்களை மூட்டைகளாகவும், குவியல் குவியலாகவும் வைத்தனர். நெல் மூட்டைகளை எடை போடுங்கள் என்றால், எடை மிஷின் சரியில்லை. நெல் நனைந்தால் எடைபோட முடியாது எனவும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தினமும் சரியான நேரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்தும், தற்போது இந்த கொள்முதல் நிலையம் தினமும் இரவு நேரத்தில் மழை பெய்வதால் உடனடியாக நெல் மூட்டைகளை எடை போட வேண்டும் என்று வலியுறுத்தி நெல் குவியல் முன்பு நின்று கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சனிக்கிழமை இந்த நிலையத்துக்கு எடைபோட செல் எடுத்து வந்தேன். இதுவரை எடை போடவில்லை. கடந்த ஆண்டு விருத்தாசலம் செல்லும் சாலையில் நெல் கொள்முதல் நிலையம் பரந்து விரிந்து பாதுகாப்பான இடத்தில் இருந்தது.
இந்த ஆண்டு அரசு இடத்தில் மலைமேடு பகுதியில் பள்ளம்-மேடாக உள்ள இடத்தில் இந்த நிலையத்தை தொடங்கி உள்ளனர். அதனால் நெல் குவியலாக உள்ள இடத்தில் மழைநீர் தேங்கி குட்டைப்போல் காட்சி அளிக்கிறது.
மேலும் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து குவித்து வைத்துள்ள நெல்களை தின்று சேதப்படுத்தி விடுகிறது. கடன் மற்றும் நகை பொருட்களை அடமானம் வைத்து பயிரிட்டு பின்பு அறுவடை செய்து அதில் பணத்தை பெற்று கடன்களை அடைக்கலாம் என்றால் வட்டி கூட கட்ட முடியாத நிலையில் உள்ளோம். எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை காலதாமதம் இல்லாமல் திறந்து எங்கள் நெல் மூட்டைகளை எடைபோட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் யோக மாலினி(வயது19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டுபடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்த யோக மாலினி திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை யோகமாலினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவி யோகமாலினிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் செல்லஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து செல்லஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் பஸ்நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் கடத்திக்கொண்டு தெய்வசிகாமணி(வயது 60) என்பவர் வந்தார். அவரிடம் கிராம நிர்வாக அதிகாரி மணல் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து மணடல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 43.35 அடியாக இருந்தது. இன்று அது படிப்படியாக உயர்ந்து 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விரைவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் அதிகளவு உள்ளதால் வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.
வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறந்து விடப்படும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. ராட்சத குழாய்கள் , மோட்டார்கள் பராமரிப்பு பணிகள், நீரேற்று நிலைய குழிகள் மற்றும் குழாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த பணிகளை சென்னை மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வீராணம் ஏரியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சென்னைக்கு இன்னும் 1 வாரத்தில் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. #VeeranamLake
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வையாபுரி பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுப்பராயுலு (வயது 55). இவர் தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளராக உள்ளார்.
சுப்பராயலுவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துக்குமரன் (29), விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் வீட்டுமனை தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்குரிய இடத்தை அளப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். அப்போது சுப்பராயுலுக்கும், முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதை பார்த்த சுப்பராயுலுவின் ஆதரவாளர்களும், முத்துக்குமரனின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் சுப்புராயுலு மற்றும் முத்துக்குமரன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரும் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். சுப்பராயுலு கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமரன், கந்தகுமார், தன்டபாணி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதே போல் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பராயலு, சண்முகம், சதீஷ், ராஜேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






