என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல்- 2 பேர் காயம்
    X

    பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல்- 2 பேர் காயம்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வையாபுரி பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுப்பராயுலு (வயது 55). இவர் தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளராக உள்ளார்.

    சுப்பராயலுவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துக்குமரன் (29), விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் வீட்டுமனை தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்குரிய இடத்தை அளப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். அப்போது சுப்பராயுலுக்கும், முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதை பார்த்த சுப்பராயுலுவின் ஆதரவாளர்களும், முத்துக்குமரனின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் சுப்புராயுலு மற்றும் முத்துக்குமரன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். சுப்பராயுலு கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமரன், கந்தகுமார், தன்டபாணி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதே போல் முத்துக்குமரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பராயலு, சண்முகம், சதீஷ், ராஜேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×