search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டியதில் மோசடி- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
    X

    தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டியதில் மோசடி- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

    பண்ருட்டி அருகே தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டியதில் மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடந்த 2014-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பண்ருட்டி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.

    இதனை தொடர்ந்து அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி கிராமப்புற மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

    இதில் தகுதி இல்லாத பலருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு மோசடி செய்திருப்பதாக தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் இன்று கீழ்மாம்பட்டு வந்தனர்.

    முறைகேடாக கட்டப்பட்டு உள்ள வீடுகள் எவை? என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×