என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ளது மேலக்குப்பம். இந்த பகுதியை சேர்ந்தவர் உக்காண்டி (வயது 46). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு அம்சவள்ளி (7), மீனா (5), கனகவள்ளி (3) ஆகிய 3 பெண்குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் கமலம். இவர் தனது வீட்டில் கோழிபண்ணை வைத்துள்ளார். இந்த கோழிபண்ணையில் உக்காண்டி, அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள வீட்டில் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியின் 2-வது மகள் மீனாவை திடீரென்று காணவில்லை. இதனால் கவலை அடைந்த ராஜேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கம் தேடிபார்த்தார். எங்கும் மீனாவை காணவில்லை.
அதனை தொடர்ந்து உக்காண்டி ஊ.மங்கலம் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். இதற்கிடையே இன்று காலையில் போலீசார் உக்காண்டி, ராஜேஸ்வரி வேலை பார்த்த கமலம் வீட்டிற்கு சென்றனர். பின்பு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாயமான சிறுமி மீனாவை நெய்வேலி அருகே உள்ள முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் அருகே உள்ள கோழிபண்ணையில் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசார் கமலத்தை அழைத்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுமி கொலைசெய்து புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் முதனை கிராம மக்களுக்கு தெரியவந்தது.
உடனே ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமி மீனாவை கொலை செய்து புதைத்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள்? அல்லது அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொன்று புதைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வீராணம் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்கிறது. அதோடு கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய பலத்தமழை நீடித்தது.
வடவாறு வழியாக 2 ஆயிரம் கன அடிநீர் ஏரிக்கு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு 46.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 46.66 அடியாக உயர்ந்து உள்ளது. பாசனத்துக்கு 10 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 60 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் 74 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வீராணம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பர குமார், கீழணை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது சவுந்தரசோழபுரம். இங்கு வெள்ளாறு ஓடுகிறது. இங்கு அரியலூர் மாவட்டத்தை இணைக்கு வகையில் சவுந்தரசோழபுரம் - கோட்டைக்காடுகிடையே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன்வழியாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முள்ளுக்குறிச்சி, ஆதனங்குறிச்சி, கோட்டைகாடு, அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூர் மாவட்டத்துக்கு சென்று வந்தனர்.
அதுபோல் அரியலுர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இருசக்கதர வாகனங்களில் வந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இந்த தரைப்பாலம் கடலூர் மற்றும் அரியலுர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.
பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆணைவாரி ஓடை, உப்பு ஓடை போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. இதனால் சவுந்தரசோழபுரம், கோட்டைக்காடு இடையேயான தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் இன்று காலை அடித்து செல்லப்பட்டது.
இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கடலூர் மாவட்டத்துக்கு வரமு டியாமல் தவித்தனர். அதுபோல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இருசக்கர வாகனங்களில் வரமுடிய வில்லை அவர்கள் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி கடலூர் மாவட்டத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பெண்ணாடம் பகுதியில் பலத்த மழைபெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளபெருக்கிலும் இந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
விழுப்புரம் மாவட்டம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா. விவசாயி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு அஷ்விதா (வயது 5), பவளவேணி (3), ரீபிகா (10 மாதம்) ஆகிய 3 பெண்குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பிரியா தீபாவளி பண்டிகை கொண்டாட கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை பிரியா அவரது கணவர் மகாராஜா மற்றும் 3 குழந்தைகளுடன் பண்டரக்கோட்டைக்கு வந்தார். அங்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினர்.
நேற்று மாலை பிரியாவின் தந்தை கண்ணனுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு பிரியா தன் தந்தையை அழைத்து சென்றார். அப்போது தனது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் செல்வியிடம் விட்டு விட்டு சென்றார்.
செல்வி வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பவளவேணி தனியாக தன் பாட்டி வீட்டுக்கு நடந்து வந்தாள்.
அந்த பகுதியில் லட்சுமி என்பவர் புதியதாக வீடுகட்டி வருகிறார் இதற்காக மணல் எடுக்க அங்கு 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழையினால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
நடந்து வந்த சிறுமி பவளவேணி தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்தாள். சிறிது நேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துவிட்டாள்.
இரவு 7 மணி அளவில் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்த பிரியா வீட்டிற்கு வந்தார். குழந்தையை உறவினர் வீட்டில் தேடிபார்த்தார். அங்கு இல்லை.
அப்போது பள்ளம் தோண்டப்பட்டு தேங்கி இருந்த தண்ணீரில் பவளவேணி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பத்தினர் திரண்டு வந்தனர்.
பின்பு அவர்கள் சிறுமி பவளவேணியின் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுபேட்டை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் தவறிவிழுந்து சிறுமி இறந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று மாலை ஊழியர்கள் பணத்தை நிரப்பிவிட்டு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு அங்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். பின்னர் பணத்தை எடுக்க உடைக்க முயன்ற போது அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆட்கள் வருவதை அறிந்த அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை பணம் எடுக்க வந்த வாடிக்கை யாளர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய பாஸ்வேர்டு எண் உள்ளது. இதன் காரணமாக மர்ம நபர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த பணம் தப்பியது.
இதுகுறித்து திட்டக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா ஆகியோர் விரைந்தனர்.
ஏ.டி.எம். மையம் உள்ள இடம் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் கைதேர்ந்த நபர்கள்தான் இதில் கைவரிசை காட்டி இருக்க முடியும். எனவே போலீசார் வழக்குபதிவு செய்து எந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் யார்? எங்கு பதுக்கி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகையினை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள். ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. இதில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தும் போலீசார் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கடலூர் ஈச்சங்காடு பகுதியில் உள்ள பரவனாறு கரையோரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்,
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் சுஜித் என்கின்ற சிறுவன் தவறுதலாக விழுந்துவிட்டான். தற்போது தமிழக அரசு சிறுவனை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை இருப்பதை ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளேன்.
மேலும் ஆழ்துளை கிணறுகள், திறந்தநிலை கிணறுகள் இருந்தால் உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரபெருமாள் நல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் காசி. இவரது மகன் சிவகண்டன். (வயது 22). பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து உள்ளார்.
இவரது நண்பர்கள் சந்துரு (19), அஜித் (19). அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
நேற்று மாலை சிவகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்கு சென்றார். அவருடன் சந்துரு, அஜித் ஆகியோர் சென்றனர். பெட்ரோல் போட்டு விட்டு 3 பேரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சிவகண்டன் ஓட்டினார்.
பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடந்த போது பண்ருட்டியில் இருந்து பாலூர் நோக்கி அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிவகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் வந்த அஜித், சந்துரு படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேரின் நிலைமை மோசமானது. எனவே அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் இறந்தார். சந்துருவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்பெக்டர் தீபன் ஆகியோர் பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பாக 44.50 அடியாக ஏரியின் நீர் இருப்பு குறைந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில், கீழணையில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. இன்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக 340 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.53 அடியாக இருந்தது. இன்று 46.72 அடியாக உயர்ந்தது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து 57 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இன்று 54 கன அடிதண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு 19கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர்காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர், காவனூர், பாளையங்கோட்டை, சாவடிகுப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மழை தூறிக் கொண்டு இருந்தது. இரவு 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது.
இதனால் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நகரபாடி தெற்கு வீதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நின்றது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி, பண்ருட்டி, மந்தாரகுப்பம், திட்டக்குடி, உள்பட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது.
கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், கருவாடுகள் போன்றவை விற்பனை செய்யப்படும்.
கடலூர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், களிச்சிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
ஒவ்வொரு வாரமும் இந்த சந்தையில் கருவாடு விற்பனை மும்முரமாக நடக்கும். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்ததால் கடந்த சில வாரங்களாக இந்த சந்தையில் கருவாடு விற்பனை சரிவர நடைபெறவில்லை.
புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வாரச்சந்தைக்கு கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பூம்புகார் உள்பட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் காய்கறிகள், விதவிதமான கருவாடு வகைகள் மற்றும் பொருட்களை கொண்டு வந்து விற்பனைக்காக ஆங்காங்கே வைத்திருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அதேபோல் இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்ததால் காராமணிக்குப்பம் வாரச்சந்தைக்கு பொது மக்களின் வரத்து குறைவாக இருந்தது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் வியாபாரிகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்த பொருட்களை ஆங்காங்கே வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்று நம்பி வந்த கருவாடு வியாபாரிகள் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் பெரிதும் கவலை அடைந்தனர்.
காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் வாரந்தோறும் ரூ.5 லட்சம் வரை கருவாடுகள் விற்பனையாகும். ஆனால், இன்று தொடர்மழை காரணமாக கருவாடு விற்பனை மந்தமாகவே இருந்தது.






