search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை காரணமாக காராமணிக்குப்பம் வாரச்சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
    X
    மழை காரணமாக காராமணிக்குப்பம் வாரச்சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மந்தம்- வியாபாரிகள் கவலை

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், கருவாடுகள் போன்றவை விற்பனை செய்யப்படும்.

    கடலூர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், களிச்சிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    ஒவ்வொரு வாரமும் இந்த சந்தையில் கருவாடு விற்பனை மும்முரமாக நடக்கும். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்ததால் கடந்த சில வாரங்களாக இந்த சந்தையில் கருவாடு விற்பனை சரிவர நடைபெறவில்லை.

    புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வாரச்சந்தைக்கு கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பூம்புகார் உள்பட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் காய்கறிகள், விதவிதமான கருவாடு வகைகள் மற்றும் பொருட்களை கொண்டு வந்து விற்பனைக்காக ஆங்காங்கே வைத்திருந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    அதேபோல் இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்ததால் காராமணிக்குப்பம் வாரச்சந்தைக்கு பொது மக்களின் வரத்து குறைவாக இருந்தது.

    மழை தொடர்ந்து பெய்து வருவதால் வியாபாரிகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்த பொருட்களை ஆங்காங்கே வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்று நம்பி வந்த கருவாடு வியாபாரிகள் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் பெரிதும் கவலை அடைந்தனர்.

    காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் வாரந்தோறும் ரூ.5 லட்சம் வரை கருவாடுகள் விற்பனையாகும். ஆனால், இன்று தொடர்மழை காரணமாக கருவாடு விற்பனை மந்தமாகவே இருந்தது.
    Next Story
    ×