search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விபத்து ஏற்படுத்திய அரசு டவுன்பஸ்சை படத்தில் காணலாம் .
    X
    விபத்து ஏற்படுத்திய அரசு டவுன்பஸ்சை படத்தில் காணலாம் .

    பண்ருட்டி அருகே விபத்து: காய்கறி வியாபாரி- பாலிடெக்னிக் மாணவர் பலி

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரபெருமாள் நல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் காசி. இவரது மகன் சிவகண்டன். (வயது 22). பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து உள்ளார்.

    இவரது நண்பர்கள் சந்துரு (19), அஜித் (19). அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    நேற்று மாலை சிவகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்கு சென்றார். அவருடன் சந்துரு, அஜித் ஆகியோர் சென்றனர். பெட்ரோல் போட்டு விட்டு 3 பேரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சிவகண்டன் ஓட்டினார்.

    பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடந்த போது பண்ருட்டியில் இருந்து பாலூர் நோக்கி அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிவகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் வந்த அஜித், சந்துரு படுகாயம் அடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேரின் நிலைமை மோசமானது. எனவே அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் இறந்தார். சந்துருவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்பெக்டர் தீபன் ஆகியோர் பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×