என் மலர்tooltip icon

    கடலூர்

    ராமநத்தம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே தொழுதூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அருகே உள்ள தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் தொழுதூர்-ஆத்தூர் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோாிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார், ஊராட்சி தலைவர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கடலூர் மாவட்டத்தில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 14 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள விருத்தாசலம் நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 636 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 4 பேர் குணமடைந்து சென்றனர். கொரோனா பாதித்த 48 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 24 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    470 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    கீரப்பாளையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளக்கரை துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 60), வீரத்தமிழன் (50), தமிழன் (52), சிங்கார குப்பத்தை சேர்ந்த அப்பு (40). ஆகிய 4 பேரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சிதம்பரம் பகுதியில் உள்ள வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் படகு வந்த போது அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் படகில் இருந்த 4 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். அப்பு, குணசேகரன் ஆகிய 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். வீரத்தமிழன், தமிழன் ஆகிய 2 பேரும் கரை திரும்பவில்லை.

    இதையடுத்து நடந்த சம்பவத்தை அங்கிருந்த கடலோர காவல் துறையினரிடம் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் மாயமான தமிழன், வீரத் தமிழன் ஆகிய 2 பேரையும் படகுகள் மூலம் தேடும் பணி யில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் வடக்கு முடசல்ஓடை பகுதியில் தமிழன், வீரத்தமிழன் ஆகிய 2 பேரின் உடல்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கரை ஒதுங்கிய 2 மீனவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கால்நடை பராமரிப்புத்துறை புறம்போக்கு இடத்தில் வசித்த 231 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
    கடலூர்:

    சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டம்-மேய்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நில ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்குதல் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உயர்மட்டக்குழு அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங் களில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்களுக்கு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது குறித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுடன் ஸ்தல ஆய்வு செய்து கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளது.

    இந்த கருத்துருவின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 231 பேருக்கு 8.76 ஏக்கர் நிலத்தை நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துருக்கள் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

    மாவட்டத்தில் மேய்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு வகைபாட்டில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட இனங் களான 335-ல் தாசில்தார்களால் ஏற்கப்பட்ட இனங்கள் 231 எனவும், நிராகரிக்கப்பட்ட இனங்கள் 104 எனவும், மாவட்டத்தில் தகுதியுள்ள எந்த பயனாளியும் விடுபட கூடாது.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் பிரவின்குமார், மதுபாலன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) (பொறுப்பு) கற்பகம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) கண்ணன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் முதுநகர் அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 56). இவர் முதுநகர் அருகில் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தினகரன் பணியில் இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர், அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கில் இருந்த இரும்பு பொருட்களை திருடினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். திருடுபோன இரும்பு பொருட்களின் மதிப்பு ரூ.35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தினகரன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி கல்பனா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா, விஷத்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோவிலில் ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே இறையூர் பகுதியில் திட்டக்குடி-விருத்தாசலம் மெயின் ரோட்டின் அருகே பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகியமனவாள பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 3 அடி உயரமுள்ள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகளும், 2½ அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது.

    இந்த கோவிலுக்கு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    நேற்று இரவு வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் தர்மகர்த்தா பாலசுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலின் சுற்றுசுவர் மீது ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலையை திருடினர். பின்னர் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கநகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று அதிகாலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக கோவில் தர்மகர்த்தா பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோவிலுக்கு விரைந்து வந்து பார்த்தார்.

    அப்போது கோவிலில் இருந்த ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விருத்தாசலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன்சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திட்டக்குடி- விருத்தாசலம் மெயின்ரோட்டின் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அழகியமனவாள பெருமாள் கோவிலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 24 ஆயிரத்து 611 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 285 பேர் பலியாகியுள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 530 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 24 ஆயிரத்து 611 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 285 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 530 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம் என பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது மக்களுக்கு தான் பாதகம். அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கேட்காதீர்கள், வாங்காதீர்கள்.

    அனைத்து சமுதாய மக்களையும் சமத்துவமாக பார்ப்பது, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மட்டுமே. இன்று வரை அ.தி.மு.க. கூட்டணியுடன் தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம். அதன் பிறகு தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆனால் நிச்சயமாக தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவில் சுவரில் தலையை மோத செய்து என்எல்சி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகங்கை (வயது 70).நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    சொரத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாமி தரிசனம் செய்வதற்காக சிவகங்கையும் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். ஆனால் சிவகங்கை கோவிலிலேயே படுத்து தூங்கினார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவர் கோவிலுக்கு வந்தார். அவர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மதுபோதையில் இருந்து முருகன் கோவிலில் தூங்கிய சிவகங்கையை எழுப்பி திட்டினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த முருகன் சிவகங்கையை பிடித்து கீழே தள்ளினார். பின்னர் சிவகங்கையின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் சிவகங்கையின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிவகங்கை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், நந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சிவகங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகங்கை கொலை செய்யப்பட்டு கோவிலில் பிணமாக கிடப்பது குறித்து அறிந்த பொது மக்கள் அந்த பகுதியில் திரண்டு நின்றனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முருகனும் ஒன்றும் தெரியாதது போல் அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.

    முருகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் முருகன் குடிபோதையில் சிவகங்கையை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து முருகனிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×