என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் நேற்று 200-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 287 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 799 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

    இந்நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. 

    இதுதவிர நேற்று 8 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 275 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.
    பண்ருட்டியில் தையல் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே எல்.என்.புரம். எஸ்.எஸ்.கே. நகரில் வசித்து வருபவர் ஜெயராமன். தையல் தொழிலாளியான இவர் கடந்த 22-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராமன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

    ஜெயராமன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கடலூர், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராமப்புற பயணிகள் தவித்தனர்.
    கடலூர்:

    அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் 12 அரசு பஸ் பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து 608 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் காரணமாக கிராம பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தவித்தனர். என்றாலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் அந்தந்த பணிமனைகளின் வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று விடிய விடிய பணிமனைகளில் வேலைகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாமல் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வழக்கமாக காலை 8 மணி அளவில் இந்த பணிமனைகளில் இருந்து 263 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்றும் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவு வந்தது. இதனால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூருக்கு செல்லக்கூடிய பயணிகள் இன்றும் தவித்தனர்.

    இந்த போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பஸ் பணிமனைகள் முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கடலூரில் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்பட 13 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து 600 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சுமார் 4,500 அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று காலை முதல் தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.

    இன்றும் 2-வது நாளாக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராமப்புற பயணிகள் தவித்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதனால் பயணிகள் வெளியூருக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.

    குறிஞ்சிப்பாடியில் வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர், மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பழைய போஸ்ட் ஆபிஸ் ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் ராகுல்ராஜன் (வயது 41). இவர் ஆப்பிரிக்கா நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்த கருங்குழி நயினார்குப்பத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி (30) என்பவருக்கும் கடந்த 16.9.2015 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள், ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்திருந்தனர். இவர்களுக்கு ஹரிணி (3) என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராகுல்ராஜன் தனது வேலையை விட்டு விட்டு ஊருக்கு திரும்பி விட்டார்.

    அதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் குண்டியமல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வசித்து வந்தனர். அப்போது கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் செந்தமிழ்ச்செல்வி வாங்கும் சம்பளத்தை தன்னுடையை தாயிடம் தான் கொடுக்க வேண்டும் என்று ராகுல்ராஜன் பிரச்சினை செய்தார்.

    இதற்கிடையில் தனது பெண் குழந்தையின் காதணி விழாவில் ராகுல்ராஜன், அவரது தாய் மாரியம்மாள் (67) ஆகிய 2 பேரும் செந்தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்தனர். மேலும் அவரது தாய், தந்தையிடமும் சீர்வரிசை பொருட்களை அதிகமாக கொண்டு வரவில்லை என்று சண்டை போட்டு, அவர்களை விழாவில் இருந்து பாதியிலேயே அனுப்பி விட்டனர்.

    தொடர்ந்து மனைவியிடம் கூடுதலாக நகை, பணம் கேட்டு கணவனும், மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்தனர். இதையடுத்து ராகுல்ராஜன் தம்பி திருமணத்திற்காக செந்தமிழ்ச்செல்வியிடம் அவரும், மாமியார் மாரியம்மாளும் நகை, பணம் கேட்டு தகராறு செய்தனர். இதனால் மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி கடந்த 26.8.2019 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுல்ராஜன், மாரியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராகுல்ராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாரியம்மாளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.

    இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    கடலூர் மாவட்டத்தில் 41 ரவுடிகள் உள்பட 50 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
    கடலூர்:

    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் சுமுகமாக நடத்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள், அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டத்திற்குட்பட்ட 46 போலீஸ் நிலையங்களிலும் ரவுடிகள் பட்டியல், கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொர்புடைய பழைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட குற்றவாளிகள் தணிகைவேல், முத்து, குணசசேகரன் உள்பட 6 பேர், அண்ணாமலைநகர் போலீஸ் நிலைய எல்லை பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பாடலீஸ்வரன், கடலூர் முதுநகர் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நெய்வேலி வீரமணி, குறிஞ்சிப்பாடி தீபன் என மாவட்டம் முழுவதும் 41 ரவுடிகள், அவரது கூட்டாளிகள் என 50 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விவசாயி

    சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் யுகபிரதாபன் மகன் சேரன் (வயது 49), விவசாயி. இவர் தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்ததாகவும், கடந்த 10 மாதமாக சீட்டு பணம் கட்டவில்லை என தெரிகிறது.

    இதனால் தனியார் நிறுவன மேலாளர் சம்பவத்தன்று சேரனின் வீட்டுக்கு வந்து, அவரிடம் உடனடியாக சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சேரன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் விரைந்து வந்து, சேரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேரன் சீட்டு பணம் கட்ட முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாத உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி கடலூரில் நேற்று மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    40 சதவீதம் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கி, முழு ஊதியம் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை (பி.எச்.எச்) அட்டைகளாக அறிவித்திட வேண்டும்.

    ஒரு கண் பார்வை இழந்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய அளவில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமையில் பொருளாளர் நடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதனை ஏற்றுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பெண்கள் உள்பட 90 பேரை பேரை கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 17). அதே பகுதியை சேர்ந்தவர் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா(17).

    நண்பர்களான இவர்கள் இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரவீன்குமாரும், ஜெயசூரியாவும் மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்தில் இருந்து செங்கமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜெயசூர்யா ஓட்டினார்.

    கூடலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் பலத்த காயமடைந்த பிரவீன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான ஜெயசூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாரி மோதி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் நேற்று உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 112 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 287 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 760 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இவர்களில் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த கடலூரை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூர், பண்ருட்டியை சேர்ந்தவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

    இதுதவிர நேற்று 12 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில் 251 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.
    ஸ்ரீ முஷ்ணம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஸ்ரீ முஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூவேந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 23) கூலி தொழிலாளி.

    இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் தனிப்டை அமைத்து விசாரித்து வந்தனர்.

    அதில் அவர்கள் வெளியூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திகேயன் மற்றும் சிறுமியை சேத்தியா தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஆலிஸ்மேரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக 800 ஏக்கர் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை விடிய விடிய தொடர்ந்து காலை வரை நீடித்தது.

    கடலூர் தாழங்குடா, நாணமேடு, சுப உப்பலவாடி, உச்சிமேடு, நெல்லிக்குப்பம் அடுத்த வானமாதேவி, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம், திருமாணிக்குழி, கட்டார சாவடி, புதுப்பாளையம், குமளங்குளம் நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள், காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு இருந்தது .

    சுமார் 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் மணிலா, கத்திரிக்காய், மிளகாய், வெங்காயம், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி வகைகள், உளுந்து, மரவள்ளி மற்றும் பூ வகைகள் பயிரிடப்பட்டது.

    தற்போது விளைச்சல் அடைந்து வரும் நிலையில் தொடர்மழை காரணமாக நிலத்தில் தண்ணீர் தேங்கி காய்கறிகள், உளுந்து, மரவள்ளி மற்றும் பூ வகைகள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக மழைநீர் முழுவதும் நிலப்பகுதியில் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்தன. இந்த நிலையில் வானமாதேவி பகுதியில் நேற்று காலை முதல் நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு வாகனங்கள் மற்றும் வேலையாட்கள் தயார் நிலையில் இருந்ததையும் காண முடிந்தது. ஆனால் இரவு தொடங்கிய மழை காலை வரை தொடர்ந்து நீடித்ததால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாதநிலை ஏற்பட்டது.

    ஒருசில விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை குமளங்குளம் ஏரியின் அருகே குவித்து வைத்திருந்தனர். திடிரென நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. நெல் மூட்டைகளும் மழைநீரில் மூழ்கியது.

    இந்த திடீர் கனமழை காரணமாக அனைத்து விளைபொருட்களும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து உள்ளனர்.

    91 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் கடலூரில் நேற்று ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.
    கடலூர்:

    வளி மண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கன மழை பெய்தது. கடலூரில் மிக கன மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை கடலூரில் வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் மேலும் கூறுகையில், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளது. கடலூரில் இன்று (நேற்று) காலை 8.30 மணி வரை பெய்த மழை 19 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது. கடந்த 9.2.1930 அன்று கடலூரில் 11.9 சென்டி மீட்டர் மழை பெய்ததே பிப்ரவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது. ஆனால் 91 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடிய, விடிய பெய்த கனமழை, முந்தைய சாதனையை முறியடித்தது.

    அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழை முன்னறிவிப்பு உள்ளது. கடலூரில் மழைக்கு சிறிய இடைவெளி உள்ளது. இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை என்பது கடுமையான மழை பொழிவாகும். இதில் காலை 4 மணி முதல் 8.30 மணி வரை மிக கனமழை பெய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மழையா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்த வளி மண்டல சுழற்சியானது வடகிழக்கு பருவத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை போன்ற வானிலை நிலவும் என்றார்.
    ×