என் மலர்
கடலூர்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் பணிகளை செய்து வருகிறது.
இதற்கிடையில் தேர்தலின் போது பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 50 ரவுடிகள், அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளிகள், குறிப்பாக கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் 7 உட்கோட்டங்களில் உள்ள போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, ரவுடிகளை கைது செய்தனர். அதன்படி பெரியக்குப்பம் புகழ், ரஜினிவளவன், முத்தாண்டிக்குப்பம் எழிலரசன், சுப்பிரமணியன், கரும்பூர் ஸ்ரீதரன் உள்பட 40 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று அதிகாலை விருத்தாசலம் அருகே வேப்பூர் கூட்டு ரோடு சேலம்-விருத்தாசலம் சாலையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் வெள்ளி கொலுசு, மெட்டி, வளையல் என 1,232 வெள்ளி பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 28 லட்சம் ஆகும்.
விசாரணையில் இந்த பொருட்களை சேலம் அருகே உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் கும்பகோணத்துக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஆனால் வெள்ளி பொருட்களுக்குரிய எந்த ஆவணம் இல்லை.
எனவே வெள்ளிபொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் விருத்தாசலம் சப்- கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா இந்தியாவில் தவறான ஆட்சியை நடத்துகிறது. அதையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்ப்பதுதான் எங்கள் நிலை.
தவறான கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். ஒத்த கருத்துள்ள கட்சிகள் இந்த கூட்டணியில் இருக்கின்றன. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.
சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள்.
சுருக்கமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கருத்தை ஆலோசித்து வருகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி வழங்க வேண்டும் என்பதை தி.மு.க. முடிவு செய்யும். கூட்டணி கட்சிகளை நட்புடன் நாங்கள் அணுகுகிறோம்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ராகுல்காந்தி வருகையின் போது மக்கள் அளித்த ஆதரவே இதற்கு சாட்சி.
அவரை காணவந்த பெரும் கூட்டமே காங்கிரஸ் செல்வாக்கு குறையவில்லை என்பதை காட்டுகிறது. கட்சி சார்பில் ஒரு காசுகூட செலவு செய்யாமல் இந்த கூட்டம் கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்யுமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 5 கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 40 ரவுடிகளை போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு 40 ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் 50 ரவுடிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நேற்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சின்னகங்கணாங்குப்பத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். தொடர்ந்து காரில் இருந்த நபர் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இது பற்றி அவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர். அதற்கு அவர் சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் அதற்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை பறக்கும் படையினர் காருடன் கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த மற்றொரு பையையும் சோதனையிட்டனர்.
அந்த பையில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பறக்கும் படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, அவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த ராம்நாத் பிரசாத் என்றும், அவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தற்போது பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வருவதாகவும், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர், வருவாய்த்துறையினர் எண்ணி பார்த்தனர். அதில் ரூ.51 லட்சத்து 36 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்தை கொண்டு வந்ததற்கான எவ்வித ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் நடந்த வாகன சோதனையின் போது, கங்கணாங்குப்பத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் மணிகண்டன் என்பவரிடம் இருந்து ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஆந்திரா மாநிலம் ஹரிப்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 52) என்பவரது காரை வழிமறித்து பறக்கம்படையினர் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 90 பட்டுச் சேலைகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பட்டுசேலைகளை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை காளவாசல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் சென்னையிலிருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த காரின் பின்பகுதியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் வந்த பிரகாஷ்ராஜா என்பவரிடம் விசாரித்த போது அவரிடம் இந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லையென்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 4 இடங்களில் நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.9 லட்சத்து 54 ஆயிரத்து 690 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டய படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி ஏ.டி.ஏம்.மில் பணம் எடுப்பதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்தார். விடுதிக்கு அருகே உள்ள மருத்துவ குடியிருப்பு எதிரில் மாணவி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் மாணவியை ஆபாசமாக திட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி வலிதாங்க முடியாமல் அலறிதுடித்தார்.
சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த வாலிபர் போலீசாருக்கு பயந்து அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சைபெறும் மாணவி மற்றும் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளூர்படை கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ்சேவியர் (30) என்பதும், இவர் ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் சில ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அப்போது அந்த மாணவி இந்த பள்ளியில் படித்து வந்தார். அப்போது அந்த மாணவியை பிரான்சிஸ்சேவியர் ஒருதலையாக காதலித்து வந்தார். தற்போது அந்த மாணவி பல்கலைக்கழகத்தில் வேறு ஒருவருடன் பேசி பழகுவதாக பிரான்சிஸ்சேவியருக்கு தகவல் கிடைத்தது. அந்த மாணவி தன்னைவிட்டுவிட்டு கல்லூரியில் உள்ள ஒரு இளைஞரை காதலிப்பதாக அவர் நினைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிரான்சிஸ்சேவியர் மற்றும் மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்ற பிரான்சிஸ்சேவியர் மீது போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் வங்கி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவர்த்தனை நிகழும் போது அந்த விவரம் குறித்த தகவல்களை வங்கியாளர்களிடமிருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே ஒரு வங்கிக்கணக்கில் கடந்த 2 மாதங்களாக பணப்பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, திடீரென சந்தேகத்திற்கிடமான வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
ஒரு வங்கிக்கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் தேர்தல் காலத்தில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் போது அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் குடும்பத்தை சேர்ந்தோர் ஆகியோரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கட்சியின் வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதர சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள், மேற்கண்ட விதிமுறைகளின் படி சட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமுகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத் திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அதிகாரி அருண்சத்யா, உதவி ஆணையர் (வருமான வரி) ஷாலினி, முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டு (கலால்) ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சரஸ்வதி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் வங்கி மேலாளர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் மாதங்கி என்கிற சந்தியா (24). மகன் சிவகுரு.
சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள எடையார்பாளையம் தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா ஆகிய 2 பேரும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமியும், சந்தியாவும் மர்மநபர்களால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
அந்த இடத்தில் மதுபாட்டில்கள், கப்புகள், சிகரெட்டுகளும், பணமும் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் இறந்த விஜயலட்சுமி, சந்தியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதியை அறிவித்த உடனே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செய்து வருகிறது.
இது தவிர பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவை அமைத்து, மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.
அதன்படி இந்த குழுவினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். நேற்று நில எடுப்பு தனி தாசில்தார் விஜயா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு வில்வேந்திரன், போலீஸ்காரர் சின்ராஜ் ஆகியோர் அடங்கிய நிலையான கண்காணிப்பு குழுவினர் கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினி லாரியை கண்காணிப்பு குழுவினர் மறித்து சோதனை செய்தனர். அதில், 3 மூட்டைகளில் டீ-சர்ட்டும், மற்றொரு 3 மூட்டைகளில் சில்வர் பாத்திரமும் இருந்தது. டீ- சர்ட்டில் முன்பக்கம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவமும், டார்ச் லைட் சின்னமும் இடம் பெற்றிருந்தது. பின் பக்கம் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சோமநாதன் என்பவரின் படமும், டார்ச் லைட் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இதை ஏற்றி வந்த டிரைவரான லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரிடம் கண்காணிப்பு குழுவினர் விசாரித்த போது, அதை அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்கு ஏற்றி செல்வதாக தெரிவித்தார். மேலும் தனக்கு வாடகையாக ரூ.700 தருவதாக பேசி சம்பந்தப்பட்ட நபர் பொருட்களை எடுத்து வரச்சொன்னதாகவும், ஆனால் அதில் உள்ளே என்ன பொருட்கள் இருந்தது என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த குழுவினர், அதை கடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பலராமனிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது பற்றி தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தான் இந்த பொருட்கள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விருத்தாலசம்:
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி விருத்தாசலம் அருகே உள்ள வயலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தண்டபாணி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து வந்த மினி வேனை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் சேர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி வேன் டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். மேலும் அவைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் துணை தாசில்தார் வேல்முருகனிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த வாகனம் சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றி தி.நகரில் இறக்க வேண்டிய ரசீது மட்டும் இருந்துள்ளது. அதுவும் போலியான ரசீது என தெரியவந்தது. மேலும் விருத்தாசலத்தில் இறக்குவதாக கூறி ஒரு விலாசத்தை தந்துள்ளனர்.
ஆனால் அப்படி ஒரு விலாசம் விருத்தாசலத்தில் இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்களோடு, மினி வேனை பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அதற்குரிய முறையான ஆவணங்களை காண்பித்த பின் பொருட்கள் மற்றும் மினி டெம்போ ஒப்படைக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வடக்குத்து கீழூர் செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் டாஸ்மாக்கடையை திறக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே நேற்று மதியம் டாஸ்மாக்கடை திடீரென திறக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடை முன்பு ஒன்று திரண்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் டாஸ்மாக்கடையை உடனே மூடவேண்டும் என்று எச்சரித்தனர். ஆனால் கடை ஊழியர்கள் அதிகாரிகள் கூறினால் தான் மூடுவோம் என தெரிவித்ததால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
உடனடியாக டாஸ்மாக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை வெளியே தூக்கி வந்தனர். பின்னர் சாலையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத டாஸ்மாக்கடை ஊழியர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் கிராம மக்கள் டாஸ்மாக்கடையை மூடியே ஆகவேண்டும் என்று போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக்கடை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






