என் மலர்
கடலூர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 26-ந் தேதி தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் குறைந்த உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வந்தது. நேற்று இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. காலை நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலைகளில் செல்வதை காண முடிந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே வாலாஜா ஏரி நிரம்பி உள்ளது. நத்தமேடு அணைக்கட்டு, சிப்பம் ஏரி, உளுத்தூர் அணைகட்டு, அம்மாபுரம் அணைக்கட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 21 ஏரி மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி உள்ளன.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஏரி மற்றும் அணைகட்டுகளில் 76 முதல் 99 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இது தவிர 27 ஏரி, குளங்களில் 51 முதல் 75 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருவதால் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய கண்டியக்குப்பம் பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை இட்லி அரிசியாக புதுப்பித்து கடைகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடலூர் குடிமை பொருள் புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த குடோனில் இருந்து 156 அரிசி மூட்டைகளையும், 58 கோதுமை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் சித்திரை குப்பம் ரேசன் கடை விற்பனையாளரான சின்ன பண்டாரங்குப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், விருத்தாசலத்தை சேர்ந்த கார்த்திகேயன், வேப்பூர் அருகே உள்ள மங்களூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேசன் அரிசியை கடத்திவந்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ரேசன் கடை விற்பனையாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து சின்ன பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் ரெட்டியூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புனிதவள்ளி (வயது 24) இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுதம்ராஜா என்பவரை திருமணம் செய்தார். புனிதவள்ளி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் கீழ மூங்கிலடி அடுத்த பாலுத்தாங்கரையில் உள்ள தனது தாய் வீட்டில் புனித வள்ளி இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள பின் வாசலுக்கு செல்வதாக புனிதவள்ளி கூறிச் சென்றார். ஆனால் புனிதவள்ளி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது வயலில் மயங்கிய நிலையில் புனிதவள்ளி விழுந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் புனிதவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது.
இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புனித வள்ளியின் தாய் கோமதி புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புனிதவள்ளியின் இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியில் இருந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 28-ந் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் எம்.பி. ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 11- ந் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த எம்.பி ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கபட்டார்.
அதன்பின்னர் ரமேஷ் எம்.பி. ஜாமீன் கோரிய மனுவையும் கடந்த 24 -ந்தேதி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரமேஷ் எம்.பி. க்கு வருகிற நவம்பர் 9 -ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
பண்ருட்டி, அக்.27-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என். புரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 85). இவர், பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்திவந்தார். இவரது மனைவி சதானந்தம் (70). சாதனந்தம்கடந்த சில நாட்களாக உடல்நலகுறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சதானந்தம் பரிதாபமாக இறந்தார்.
மனைவி சதானந்தம் இறந்த சோகத்தில் அரசப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று நள்ளிரவு 1 மணிஅளவில் அரசப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் வலிதாங்கமுடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த டாக்டரை வரவழைத்தனர். அரசப்பனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. * * * அரசப்பன், சதானந்தம்.
கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கொரோனா தாக்கம் குறைந்தது. எனவே நவம்பர் 1- ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் கொரோனா தடுப்பூசிபோட அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில் பெரும்பாலான ஆசிரியர்கள் தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். மேலும் பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடலூர்மாவட்டத்தில் ஒருசில ஆசிரியருக்கு கொரோனா ஏற்பட்டு வந்ததையடுத்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த ஆசிரியை ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்.
அதனை தொடர்ந்து ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் எவ்வித தொற்று பாதிப்பும் இல்லை என உறுதியானது.
மேலும் ஆசிரியை குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரியவந்தது.






