என் மலர்tooltip icon

    கடலூர்

    பறவைகள் வந்து செல்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்த்தங்கால் கிராம மக்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரினகாப்பாளரின் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டம், தேர்த்தங்கால், மேலசெல்வனூர், கீழசெல் வனூர் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது.

    சரணாலயங்களின் உள்ளே நாட்டு கருவேல மரங்கள், வரப்புகளில் புளி, வேப்பம், பனைமரம் உள்ளன. பறவைகளுக்கு சிறந்தபுகலிடமாக இந்த பறவைகள் சரணாலயம் திகழ்கிறது.

    மஞ்சள் மூக்குநாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை, கரண்டி வாயன், பாம்பு தாரா, தாழைக்கோழி, நாமக்கோழி, சின்ன முக்குளிப்பான், நீர்காகம், கொக்கு, நாரை, நீலச்சிறகு வாத்து என 200-க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு கண்டறியபட்டு உள்ளன. இந்த பறவைகள் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை வந்து செல்கின்றன.

    உணவை தேடியும் இனப்பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன. இவற்றில் சில இங்கேயே கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகள் உணவுக்காவும், உகந்த சீதோஷ்ண சூழ்நிலைக்கு மட்டும் இங்கு வந்து போகின்றன.

    பட்டாசு வெடிக்காத கிராமமாக திகழும் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு அதிக அளவில் பறவைகள் வருகின்றன.

    இங்கு பறவைகள் வந்து செல்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்த்தங்கால் கிராம மக்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

    வனக்குழு தலைவர் குருசாமி கூறுகையில், முன்பெல்லாம் பறவைகள் நலனுக்காக தண்டோரா போட்டு மக்களுக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தி வந்தோம்.

    தற்போது பறவைகள் எங்கள் ஊரின் அடையாளமாக நிகழ்வதால் கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிப்பது இல்லை. இதன் காரணமாக எங்கும் இல்லாத அளவிற்கு இங்கு சீசன் முடிந்த பின்னரும் பறவைகள் அதிகளவில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

    பறவைகளின் நலன் கருதி தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியாகம் செய்து வருகின்றனர் என்றார்.

    கோவை வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட கரியன் படுகை வனப்பகுதியில் கடந்த 23-ந் தேதி ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை வன ஊழியர்கள் பார்த்தனர்.

    அந்த யானையின் இரண்டு தந்தங்களும் திருட்டு போயிருந்தது. யாரோ யானையின் தந்தங்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் 2 நாட்களுக்கு பின்னர் தந்தங்களை திருடிய மர்மநபர்கள் யானை இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து விட்டு சென்றனர். இதனை வனத்துறையினர் மீட்டனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானையின் தந்தங்களை தாணி கண்டியை சேர்ந்த மருதுபாண்டி (வயது 27), ராமன் (50), சின்னான் (50) ஆகியோர் விற்பனை செய்வதற்காக திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீரை மற்றும் மூங்கில் குருத்து எடுக்க காட்டிற்குள் சென்ற போது இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாகவும், சிக்கி விடுவோம் என்ற பயத்தில் மீண்டும் யானையின் தந்தங்களை வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தனர்.

    பின்னர் வனத்துறையினர் 3 பேரையும் 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் பவானிசாகர் சப்-ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 11 பேரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனையொட்டி அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி 11 இடத்தில் பட்டாசு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 11 பேரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 11 ஆயிரத்து 772 கன அடியானது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று மாலை 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 11 ஆயிரத்து 772 கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 112.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 113.59 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் உள்ள 24 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் மீதமுள்ள 204 ஏரிகளும் விரைந்து நிரம்பி வருகின்றன.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1136 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    மேலும் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1000 மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

    மேலும் கடலூர் மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 24 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் மீதமுள்ள 204 ஏரிகளும் விரைந்து நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை கண்காணித்து வருகின்றனர்.



    சிதம்பரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    நாகையில் இருந்து திருபதிநோக்கி அரசு விரைவு பஸ் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ் சிதம்பரம் அருகே பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் திடீரென பஸ்சின் முன்பகுதியில் கற்களை சரமாரியாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன்பஸ் ஒன்று ஆனத்தூர் வழியாக சிறுகிராமத்துக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் அருண் ஓட்டினார்.

    சே.மங்களம்-ஆனத்தூர் மலட்டாறு வாய்க்கால் பாலத்தில் சென்றபோது மர்மநபர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதுகுறித்து பஸ்சின் டிரைவர் அருண் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.
    சென்னையிலிருந்து 50 கி.மீ, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்.

    இத்திருத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முன் மூங்கில் காடாக இருந்த பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு தினந்தோறும் பால் சுரந்தது. இதை கண்ட இடையன் அங்குள்ள மன்னவனுக்கு தகவல் அளித்தார். இதை அறிந்த மன்னன் அங்கு செனறு புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு சதுர வடிவில் ஆவுடையார அமைத்து கோயில் எழுப்பினான்.

    மூங்கில் காடில் தோன்றியதால் சிவனுக்கு “பாசூர் நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

    ஒரு முறை ஸ்ரீ ஆதிசங்கரர் வடமாநிலத்தில் இருந்து காஞ்சி நகருக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கும் பொழுது திருப்பாச்சூர் அருகே வரும்போது மூங்கில் காட்டின் அருகே வரும்போது உஷ்ண நிலையை கண்டு ஏதோ தீப்பற்றி எரிவது போல் உணர்ந்தார். பின்பு தன் ஞானதிருஷ்டியால் மூங்கிலை வெட்டும்போது லிங்கத்தின் மேல் தழும்பு ஏற்பட்டுள்ளது இதனால் சாமி உஷ்ணமாக இருப்பதை ஞானத்தில் அறிந்தார்.

    பின்பு சுவாமியின் உஷ்ண நிலையை சாந்தம் அடைய கருவறை வெளியே அர்தம் மண்டபத்தில் சுவாமியின் வலது பக்கத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை ஸ்ரீசக்கரம், சிவபூஜை எந்திரமும் பிரதிஷ்டை செய்து சிவனை(பாசூர்) வழிபட்டார். அதன் பின்பு ஸ்வாமி உஷ்ண நிலையை குறைத்ததும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இத்திருத்தலத்தில் தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது மேலும் கிழக்கு நோக்கி இரட்டைகாளி, சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிரகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

    திருப்பாச்சூர் தலத்திலும் ஈசனுக்கு வலது புறம் அம்பிகையும் இந்த இரண்டு சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்யர் என ஒரே வரிசையில் அனைவரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஸ்வாமி சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. இதனால் சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.

    மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை மற்றும் வினை தீர்த்த ஈஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதில் 11 விநாயகர் சிலைகளில் ஒன்று மட்டும் வலம்புரி விநாயகர் மற்றும் கேது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு கேது தோஷம் நிவிர்த்தி பரிகாரம் செய்ய 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 கைப்பிடி அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    திருத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். தேவாரப் பாடல்பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

    ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.

    ஸ்ரீ வீராகவப்பெருமாள் சூலை நோய் ஏற்பட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி வினை தீர்த்த ஈஸ்வரர் பூஜை விக்னங்கள் இன்றி நிறைவேற விநாயகப்பெருமானின் 11 சிலைகளை வீராகவப்பெருமாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இதில் திருப்பதி வெங்கடாஜலபதி தன் கல்யாணத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழிபாடு செய்த திருத்தலம்.

    இத்தலத்தில் தினமும் அம்பிகை ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் முதல் பூஜை அம்பிகைக்கு பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
    அம்பிகை, திருமால், சந்திரன், பரத்வாஜார், பிருகு மகரிஷி, சுகர், ரிஷ்ய சிருங்கர், விசுவாமித்திரர் உள்ளிட்ட 10 சித்தர்கள் பூஜை செய்த தலம்.

    இத்திருத்தலத்தில் கேது தோஷம் நிவர்த்தி அடையும் இங்கு வழிபடுவர்களுக்கு திருமண பாக்கியம், உத்தியோகம், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

    துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு இன்று அதிகாலையில் வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வந்தன.

    தங்க கடத்தலை தடுக்க கேரள விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு ஒரு விமானம் வந்தது.

    அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் ஒரு ஆண் மற்றும் பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பயணிகள் இருவரையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பெண் பயணியின் கொண்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் 556 கிராம் தங்க கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இதுபோல வாலிபர் அணிந்திருந்த ஷூவின் சாக்சுக்குள் 105 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.

    இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்ததாக காசர்கோட்டை சேர்ந்த ஜமீலா (வயது 36), கோழிக்கோட்டை சேர்ந்த பைசல் (22) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் மழையால் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிதம்பரம், பண்ருட்டி விருத்தாசலம் திட்டக்குடி காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. கடலூர் நகராட்சி சார்பில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. மேலும் இந்த பலத்த மழையால் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தொடர்ந்து பண்டிகை காலத்தில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் மற்றும் பட்டாசு கடைகள் என அனைத்து இடங்களிலும் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. மேலும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த மழையால் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் 228 ஏரிகள் உள்ள நிலையில் 22 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது மீதம் உள்ள ஏரிகள் அனைத்தும் விரைந்து நிரம்பி வருகின்றனதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அந்தவகையில் செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் மனிதனுக்கு ருனம் மற்றும் ரணத்தை நீக்கக்கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மற்றும் பித்ரு தோஷமும் விலகும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி, திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து, பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் பட்டினி அகலும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.பிரதோஷ தினத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட்டால் ஈசனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
    கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியிலும், மேட்டூர் அணை தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக நீர்மட்டம் உயர்நதுள்ளது. நேற்று நீர்மட்டம் 44.70 அடியாக இருந்தது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 957 கனஅடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1739 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 62 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் கூடுதலாக 450 கனஅடி தண்ணீரை வெள்ளியங்கால் ஓடை வழியாக திறந்து விட்டனர். இந்த மழை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் வீராணம் ஏரி 2-வது முறையாக நிரம்பி விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
    ரஜினி, விஜய் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார்.

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
    ×