search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம்
    X
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடிய கிராம மக்கள்

    பறவைகள் வந்து செல்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்த்தங்கால் கிராம மக்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரினகாப்பாளரின் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டம், தேர்த்தங்கால், மேலசெல்வனூர், கீழசெல் வனூர் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது.

    சரணாலயங்களின் உள்ளே நாட்டு கருவேல மரங்கள், வரப்புகளில் புளி, வேப்பம், பனைமரம் உள்ளன. பறவைகளுக்கு சிறந்தபுகலிடமாக இந்த பறவைகள் சரணாலயம் திகழ்கிறது.

    மஞ்சள் மூக்குநாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை, கரண்டி வாயன், பாம்பு தாரா, தாழைக்கோழி, நாமக்கோழி, சின்ன முக்குளிப்பான், நீர்காகம், கொக்கு, நாரை, நீலச்சிறகு வாத்து என 200-க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு கண்டறியபட்டு உள்ளன. இந்த பறவைகள் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை வந்து செல்கின்றன.

    உணவை தேடியும் இனப்பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன. இவற்றில் சில இங்கேயே கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகள் உணவுக்காவும், உகந்த சீதோஷ்ண சூழ்நிலைக்கு மட்டும் இங்கு வந்து போகின்றன.

    பட்டாசு வெடிக்காத கிராமமாக திகழும் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு அதிக அளவில் பறவைகள் வருகின்றன.

    இங்கு பறவைகள் வந்து செல்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தேர்த்தங்கால் கிராம மக்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

    வனக்குழு தலைவர் குருசாமி கூறுகையில், முன்பெல்லாம் பறவைகள் நலனுக்காக தண்டோரா போட்டு மக்களுக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தி வந்தோம்.

    தற்போது பறவைகள் எங்கள் ஊரின் அடையாளமாக நிகழ்வதால் கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிப்பது இல்லை. இதன் காரணமாக எங்கும் இல்லாத அளவிற்கு இங்கு சீசன் முடிந்த பின்னரும் பறவைகள் அதிகளவில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

    பறவைகளின் நலன் கருதி தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியாகம் செய்து வருகின்றனர் என்றார்.

    Next Story
    ×