என் மலர்tooltip icon

    கடலூர்

    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் 19-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவிலில் முருகப்பெருமான் தனது தந்தை சிவனுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த சிவகுருநாதனாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

    பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் ஆண்டுகளின் தேவதைகளும் இக்கோவிலின் திருப்படிகளாக அமையப்பெற்று தமிழ்க்கடவுளான முருகனுக்கு சேவை செய்து வருவதாக ஐதீகம்

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின்போது சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 15-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 19-ந் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்ததால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் உள்ளது. தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் மழையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சில நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 16 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 63 ஆயிரத்து 160 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 870 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து கீரப்பாளையம் வந்தவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 2,040 நீர்பாசன குளங்கள் உள்ளது. இதில் 840 நீர் தேக்கங்களில் 75 சதவீத தண்ணீர் இருக்கிறது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 28-ந் தேதி தொடங்க வேண்டிய பருவமழை முன்னதாகவே தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த 1-ந் தேதியில் இருந்து மாநிலத்தில் சுமார் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர் பாசனத்துக்கான ஏரிகள் நிரம்பி வருகின்றன.

    கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளன. மாநிலத்தில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இதில் 3,691 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதாவது மொத்த பாசனத்தில் 26 சதவீத ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 555 குளங்கள் நிரம்பின. அதற்கடுத்தபடியாக தென்காசியில் 333, தஞ்சாவூரில் 306, கன்னியாகுமரியில் 287, திருவண்ணாமலையில் 258 குளங்கள், ஏரிகள் நிரம்பின. கடந்த ஆண்டு இதே நாளில் 629 ஏரிகள் மட்டுமே நிரம்பி இருந்தன.

    மேலும் 2,964 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளது. 2,498 குளங்களில் 51 முதல் 75 சதவீதம் வரையிலும், 2,505 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையிலும், 2,066 குளங்களில் 1 முதல் 25 சதவீதம் வரையும் தண்ணீர் இருப்பு உள்ளது. 414 குளங்களில் நீர் இல்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 2,040 நீர்பாசன குளங்கள் உள்ளது. இதில் 840 நீர் தேக்கங்களில் 75 சதவீத தண்ணீர் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கையில் 1,460 குளங்கள் உள்ளது. இதில் 75 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 215 குளங்களில் 76 முதல் 99 சதவீதம் நீர் உள்ளது.

    மதுரையில் 332 குளங்களில் 76 முதல் 99 சதவீத நீர் இருப்பு இருக்கிறது. 158 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 295 குளங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கு கீழும் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடலூரில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

    தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 11-ம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கடலூரில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
    டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    அடுத்து ஆடிய இந்தியா கே.எல். ராகுல், ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 

    இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 37 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 108 போட்டிகளில் விளையாடி 3,038 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

    இந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 3,115 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    நேற்று இரவு 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கிநின்றது. இந்த மழை தொடர்ந்து இன்றும் பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

    கடலூர் லாரன்ஸ் சாலை உள்பட முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இன்று காலை மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலையில் செல்வதை காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக கடலூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தொடர் மழை எதிரொலியால், ரெயில் சேவையும் நேற்று பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரெயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
     
    இந்நிலையில், கனமழையால் தடைப்பட்டு இருந்த மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


    சிதம்பரம் அருகே தனித்தனி சம்பவத்தில் குடும்பத்தோடு குளிக்க சென்ற போது கடலில் மூழ்கி 2 மாணவிகள் பலியாகினர். என்ஜினீயரிங் மாணவியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் அட்சயா (வயது 15). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணி மகள் அனுஸ்ரீ(18) திருச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தராஜ், மணி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டை கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராட்சத அலை எழுந்தது.

    இதில் சிக்கிய அட்சயா, அனுஸ்ரீ ஆகியோரை அலைகள் இழுத்துச் சென்றன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், மாணவிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடலில் மூழ்கிய மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கடலில் மூழ்கிய அட்சயாவை பிணமாக மீட்டனர். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அனுஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் சேத்தியாத்தோப்பு அடுத்த அகர சோழத்தரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள்கள் சித்ரா (16), விசித்ரா (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் விசித்ரா 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விஜயகுமார் தனது குடும்பத்தினர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கீதா ஆகியோருடன் நேற்று சிதம்பரம் அருகே கொடியம்பாளையத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அங்கு சித்ரா, விசித்ரா, கீதா ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கினர்.

    இதை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் சித்ரா, கீதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடலில் மூழ்கிய விசித்ரா பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    செங்கம் குப்பநத்தம் அருகே அருவிக்கு குளிக்க சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே குப்பநந்தம் துரிஞ்சாபுரம் நாமக்கல் நீர்வீழ்ச்சி உள்ளது. தொடர் மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு நேற்று வந்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அருவியில் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பாய்ந்தோடி சென்றது. அருவிக்கு குளிக்க சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    அருவிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    கடலூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே தென்னம்பாக்கம் காலனி சேர்ந்தவர் சங்கர் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு புறம் சுவர் திடீரென்று இடிந்து சங்கர் மீது பலத்த சத்தத்துடன் விழுந்தது.

    அப்போது வீட்டில் இருந்த சங்கரின் மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்துக்கொண்டு, சங்கர் மீது விழுந்த சுவர்களை உடனடியாக அகற்றினர். ஆனால் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து வருவாய்த் துறையினரும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது கடலூர் முதுநகர் அருகே பெரிய காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் சென்ற போது . அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென்று பஸ் மீது கற்கள் வீசி சரமாரியாக தாக்கினார்கள். இதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதன் காரணமாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

    இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20) வெங்கடேசன் (19) ஆகியோர் பஸ் மீது கற்கள் வீசியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    ×