என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது21). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். வினோத்குமார் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். தற்போது பெய்த மழையினால் அந்த தடுப்பணையில் வெள்ள நீர் பெருக் கெடுத்து ஓடியது.

    வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தடுப்பணையின் குறுக்கே நடந்து சென்று மறுகரையில் உள்ள மதகின் ஆழமான பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.

    வினோத்குமார் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் வினோத்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதுகுறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மணிமுக்தா ஆற்றில் இறங்கி வினோத் குமாரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கீழபாலையூர் அணைக்கட்டு பகுதியில் இறந்த நிலையில் வினோத்குமாரின் உடல் கரைஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    வினோத்குமார் இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணத்தில் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பால் விளைநிலங்களில் வடியாமல் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு அருகில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த காரணத்தால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. மழை நின்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியாமல் அப்படியே நிற்கிறது.

    இதனால் பயிர்கள் அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள வடிகால் ஓடையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடியாமல் நிற்கிறது. தற்போது சுமார் 40 ஏககர் நிலப் பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநின்றதும் தண்ணீரை வடியவைத்து விட்டு, சேதமடைந்த பயிரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தோம். ஆனால் தண்ணீர் வடியாமல் இருப்பதால் எங்களது பயிர்கள் தற்போது முழுமையாக அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க வடிகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கடலூர் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலையை மடக்கிப்பிடித்த வன அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விட்டனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் நேற்று இரவு 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று படுத்திருந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்தும் மழைநீர் நிற்பதால் தங்களது பகுதிக்கும் முதலை வந்திருக்கும் என அதிர்ச்சியில் உரைந்து காணப்பட்டனர்.

    இதுபற்றி கடலூர் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனசரகர் அப்துல் அமீது தலைமையில் வன ஆர்வலர் செல்லா மற்றும் பலர் வெள்ளக்கரை விரைந்தனர். மழைநீரில் படுத்திருந்த முதலையை வன ஆர்வலர் செல்லா பிடிக்க முயன்றார். அப்போது அந்த முதலை வாலால் சுழட்டி தாக்கியது. இதில் அவர் லேசான காயமடைந்தார்.

    உடனே அந்த முதலை தப்பி செல்ல முயன்றது. உஷாரான வன அலுவலர்கள் முதலையை வன ஆர்வலர் செல்லா உதவியுடன் வலைபோட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த முதலை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முதலைகள் இருக்கும் இடத்தில் விடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.



    பண்ருட்டி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் தனசேகர் (வயது 29), கூலி தொழிலாளி. கடந்த 20.1.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி, தனசேகர் வீட்டின் அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். இதை பார்த்த தனசேகர், அந்த சிறுமியை நைசாக தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அவளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே நடந்த சம்பவம் பற்றி அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், தனசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை நல வாழ்வு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

    நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் மணிமாறன் மகன் ஜோயல்(வயது 24). இவர் என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று இவர், பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ.1,500 மதிப்புள்ள மின்சார அடுப்பை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்சார அடுப்பை திருடியது 30-வது வட்டத்தை சேர்ந்த எட்வின் மனோகர் மகன் ஆரோக்கிய ராஜ்(28), 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியராஜ் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவன் கடலூர் சிறார் சீர்திருத்த பள்ளிக்கும், ஆரோக்கியராஜ் கடலூர் மத்திய சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. நள்ளிரவில் மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.

    கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

    கடலூர்-173.2, கலெக்டர் அலுவலகம்-170.2, பரங்கிப் பேட்டை-105.2, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-100, வானமா தேவி-98.8, வேப்பூர்-87, குறிஞ்சிப்பாடி-85, காட்டுமயிலூர்-84, கொத்தவாச்சேரி-83, வடக்குத்து-70.5, புவனகிரி-70, மே.மாத்தூர்-70, பண்ருட்டி-66, அண்ணாமலைநகர்-65, காட்டுமன்னார் கோவில்-64, சிதம்பரம்-63.2, சேத்தியத்தோப்பு-61.2, லால்பேட்டை-60.6, விருத்தாசலம்-53.2, குப்பநத்தம்-52, ஸ்ரீமுஷ்ணம்-51.2, பெலாந்துறை-43.2, கீழச்செருவாய்-34, தொழுதூர்-27, லக்கூர்-9.3.

    கடலூர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரத்தில் மொத்தமாக-1846.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்&-வீராங்கனைகள் தேர்வு திருப்பூரில் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு திருப்பூர் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுச்சாமி ,தேர்வு கமிட்டி தலைவர் ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் காவியஸ்ரீ, ஸ்ரீபிரியா, திவ்யலட் சுமி, சுடியக்கா, மைதிலி, ஜோதிலட்சுமி, மேகலா ஆகிய 7 வீராங்கனைகளும், குருபிரசாத், நிஷாந்த், சாந்தப்பிரியன், அங்கித்து, மதன்குமர், இனியன், கார்வேந்தன் ஆகிய 7 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இணைசெயலாளர்கள் வாலிசன், சின்னு, செல்வராஜ், பயிற்சி யாளர்கள் வெங்கடேஷ், நாகராஜ், நடுவர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேட்டூர் அணை தண்ணீரும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில்  வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை திறப்பு மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேட்டூர் அணை தண்ணீரும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி வரக்கூடிய 800 கனஅடிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    இது தவிர வெள்ளியங்கால் ஓடை வழியாக 1,000 கனஅடி தண்ணீரும், வி.என்.எஸ். மதகு வழியாக 1,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

    வடவாறு வழியாக 1,685 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வீரமுடையான்சத்தம், குமராட்சி, வெள்ளூர், நடுத்திட்டு, பருத்திக்குடி, சிவாயம், நந்திமங்கலம் உள்பட 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    புதுவையின் ஆண்டு சராசரி மழையின் பெரும் பகுதியை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 70 முதல் 80 செ.மீ., மழை பெய்யும்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆண்டு சராசரி மழை அளவு 130 செ.மீ. ஆகும்.

    இதில் குளிர் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்கள், கோடைக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்கள், தென் மேற்கு பருவமழையான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் சராசரியாக 40 முதல் 60 செ.மீ., மழை பெய்யும்.

    புதுவையின் ஆண்டு சராசரி மழையின் பெரும் பகுதியை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 70 முதல் 80 செ.மீ., மழை பெய்யும். ஒவ்வொரு பருவத்திலும் சராசரி அளவை விட கூடுதலாகவே மழை பெய்து வருகிறது.

    அதில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 96.1 செ.மீ., அளவு மழை பெய்தது.

    இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இருப்பினும் அதற்கு முன்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 27 செ.மீ., மழை பெய்தது. அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஆண்டின் சராசரி மழை அளவை எட்டியது.

    கடந்த மாதம் 26-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 104.72 செ.மீ., மழை கொட்டியுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டில் நேற்று காலை 8.30 மணி வரை மொத்தம் 227.8 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இது ஆண்டின் சராசரி அளவை விட 75 சதவிகிதம் கூடுதலாகும்.

    கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடியுடன் விவசாயிகள் வந்து, உரிய நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கூட்டம் தொடங்கியதும், நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கையில் அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடிகளுடன் கூட்ட அரங்கிற்குள் வந்தனர். அதன்பிறகு அவர்கள் கலெக்டரை பார்த்து, எங்கள் பகுதியில் மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் கன மழைக்கு சேதமாகி உள்ளது. ஆனால் அதிகாரிகள் இது வரை கணக்கெடுக்க வரவில்லை. ஆகவே சேத விவரங்களை கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதை கேட்ட கலெக்டர், ஏற்கனவே பயிர்கள் மூழ்கி உள்ள விவரத்தை அலுவலர்கள் கணக்கெடுத்து உள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை கேட்டதும் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    அதையடுத்து குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் வந்து, சத்திரம் வாரச்சந்தையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஆகவே சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து கூட்டம் நடந்தது.

    ராமலிங்கம் (விவசாயி):- தாளவாய்க்கால் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து தர வேண்டும்.

    கலெக்டர்:- பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

    நரசிம்மன் (விவசாயி):- மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் மனம்தவிழ்ந்தபுத்தூர் ஏரி 25 சதவீதம் கூட நிரம்பவில்லை. அதற்கு காரணம் அந்த ஏரியை இதுவரை தூர்வாரவில்லை. ஆனால் 2 முறை தூர்வாரி விட்டதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆகவே இதில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். ஏரியை உண்மையிலேயே தூர்வார வேண்டும்.

    கலெக்டர்:- இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிவசரவணன்(விவசாயி):- உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சில உரக்கடைகளில் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரம் வாங்கினால் அதோடு சேர்ந்து இயற்கை உரம் அடங்கிய வாளியையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று சில உரக்கடைக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

    கலெக்டர்:- யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. இது பற்றி உரக்கடைகளில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். வேளாண்மை அதிகாரிகள் இதை ஆய்வு செய்வார்கள்.

    குஞ்சிதபாதம் (விவசாயி):- பெலாந்துறை அணைக்கட்டுக்கு வரும் நேரடி வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    முருகானந்தம் (விவசாயி):- ஜிப்சம் தட்டுப்பாடு உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 18 கிராமங்களை டெல்டா பகுதியில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் ரவீந்திரன், மாதவன், செல்வராஜ், தமிழ்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மார்த்தாண்டம் அருகே அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    தென்காசி மாவட்டம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 42). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளை தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். 

    விற்பனைக் கூடத்தில் கடந்த 2-ந் தேதி படிக்கற்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ராஜலிங்கத்துக்கும், அப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற சுரேஷ், ஞாறான்விளை சேர்ந்த மணி ஆகியோருக்கும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜலிங்கம் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் செல்லக்குட்டி என்ற சுரேஷ் மற்றும் மணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பண்ருட்டி அருகே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக மேல் அருங்குணத்தை சேர்ந்த நரி என்ற சிவபிரதாபன் (வயது 22), விமல் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியாக வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் பார்த்திபன் மட்டும் பணியில் இருந்தார். மற்ற போலீசார் ரோந்து சென்று விட்டனர். விசாரணை கைதியாக இருந்த சிவபிரதாபன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனிடம் தெரிவித்தார்.

    அதற்கு அவர் ரோந்து சென்ற போலீசார் திரும்பி வந்தவுடன் உன்னை அனுப்புகிறேன் என்று கூறினார். அப்போது சிவபிரதாபன் பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடினார். உடனே போலீஸ்காரர் பார்த்திபன் விரட்டிசென்று சிவபிரதாபனை பிடிக்க முயன்றார். ஆனால் சிவபிரதாபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சிவபிரதாபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    ×