என் மலர்tooltip icon

    கடலூர்

    நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் நேற்று 45.05 அடியாக இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.15 அடியாக உயர்ந்துள்ளது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மற்றும் பருவமழை காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 2 மடங்கு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் தற்போது மழை ஓய்ந்ததால் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது.

    ஆனால் கடந்த 2 நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துவருகிறது. நேற்று இரவும் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று 45.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.15 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு 652 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.

    தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பாலசுப்பிர மணியம் (வயது 51). இவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என வந்தது. இருப்பினும் கலெக்டருக்கு தொடர்ந்து காய்ச்சல், உடல் வலி இருந்ததால் நேற்று காலை மீண்டும் கலெக்டர் பாலசுப்பிரமணியம், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

    இதன் பரிசோதனை முடிவு மாலையில் வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம், கலெக்டர் அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் சிவக்குமார். பா.ம.க.வை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர், காய்ச்சலால் அவதியடைந்து வந்தார். இதையடுத்து மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

    இதன் முடிவு நேற்று வெளியானதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார், திருவாமாத்தூர் பொன்அண்ணாமலை நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே சிவக்குமார் எம்.எல்.ஏ., தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், தன்னுடன் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏ.வள்ளியத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி கல்யாணி (வயது 80). இவரை கவனித்து வந்த அவரது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவரை யாரும் கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கல்யாணி வீட்டு பின்புறம் இருந்த வாகை மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அவரது பேத்தி தில்லைநாயகி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன.

    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அசுரவேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 587 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    முழு ஊரடங்கு நாளில் 50 பேர்களை கொண்டு திருமணம் நடத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் மார்கழி மாதம் என்பதால் சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன.

    தை மாதம் தொடங்கி இன்று முகூர்த்த நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வந்தன.

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன. மேலும் திருவந்திபுரம் சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் 40 -க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில்கள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்ததால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மூடப்பட்டு கோவில் முகப்பு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக கோவில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் சாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முகக் கவசம் அணியாமல் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் நடைபெறும் திருமணத்தின் போது அவர்கள் உறவினர்கள், பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

    மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நடைபெற வேண்டும் என கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபங்களில் அரசு அறிவித்த 50 பேர் மட்டுமே திருமணம் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கவேண்டுமென அறிவுறுத்தினர்.

    இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் திருவந்திபுரம் பகுதியில் திறந்திருந்த அனைத்து கடைகளிலும் மூட வேண்டும் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் எச்சரிக்கையால் திறந்திருந்த கடைகள் முழுவதும் மூடப்பட்டன.

    மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் கூட்டம் அதிகளவில் சேராமல் இருக்கவும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முக கவசம் அணியாத 15 பேருக்கு அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள டி.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 31). இவரது மனைவி சுசித்ரா (24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சுசித்ரா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த ராம்குமார் தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் சுசித்ரா கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ராம்குமார் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சுசித்ரா குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தலைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சசி குமார் (வயது 45). சம்பவத்தன்று சசிகுமார் புவனகிரி அருகே உள்ள திரெளபதி அம்மன் கோவில் தெருவில் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியே வந்த 2 மர்ம நபர்கள் சசி குமாரிடம் இருந்த 1000 ரூபாயை கொள்ளையடித்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் சசிகுமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து சசிகுமார் புவனகிரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மேல் புவனகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் சசிகுமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று வழக்கத்தைவிட மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.
    கடலூர்:

    கொரோனா 3-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும், பஸ்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு 50 சதவீத பொதுமக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    மேலும் கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் நாளை ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி கடந்த 2 வார சனிக்கிழமைகளில் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பிடித்து கொண்டுவந்த மீன்கள் வாங்க வியாபாரிகள் மற்றும் மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

    அப்போது வழக்கம் போல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி பின்பற்றாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 552 பேர் தொற்று பரவல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் மக்களால் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் இன்று வழக்கத்தைவிட மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.

    மேலும் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் காலை முதல் வழக்கத்தை விட சற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் சங்கரா ரூ. 350, வஞ்சரம் ரூ. 600, நண்டு ரூ. 500, இறால் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
    காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.

    காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொது இடங்களில் மது அருந்திய 72 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் இதுவரை காவல்துறையின் அறிவுரையை பின்பற்றாத 843 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசாரின் இத்தகைய நடவடிக்கை மூலம் கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்திவிட்டு அதன் காரணமாக ஏற்படும் காய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் காவல் நிலையங்களில் வழக்குபதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    சிதம்பரம் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அண்ணாமலை நகர்:

    சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டலப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 23). இவர் வாடகை கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர் வாடகை கார் ஓட்டி விட்டு, புதுச்சேரியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்ற அவர் யாரும் எதிர்பாராத வகையில் அங்குள்ள அறையில் வேட்டியால் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த, குடும்பத்தினர், அருள்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அருள்பாண்டியன் இறந்து விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம் நகர பகுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் காட்பாடியில் 2 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இரும்பு தகடுகளால் அடைத்து கண்காணித்து வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ கடந்து பதிவானது. தொற்று பரவல் தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் சிதம்பரம் நகரில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவை மூலம் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிதம்பரம் மாலை கட்டி தெருவில் 10 பேருக்கும், வ.உ.சி. தெரு வில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த 2 தெருக்களிலும் 15பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் தொற்று தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீன் உத்தரவின்பேரில், மாலை கட்டி தெரு, வ.உ.சி தெருவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்புகளை அமைத்தனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதார நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த தெருக்களில் வசிப்பவர்களை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதுடன், அவர்களுக்கு தேவையான பொருட்களை நகராட்சி ஊழியர்கள் மூலம் வாங்கிக்கொடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ரவிச்சந்திரன் மனைவி பார்வதி. சீமை ஓடு போட்ட வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்குள் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப் பற்றி எரிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பிரிட்ஜ், பீரோ மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்பட அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் தாசில்தார் மற்றும் தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் மற்றும் நியமனம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் என 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் விவரம் வருமாறு:-


    தாசில்தார்கள் இடமாற்றம்
    ×