
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ கடந்து பதிவானது. தொற்று பரவல் தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் சிதம்பரம் நகரில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவை மூலம் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் மாலை கட்டி தெருவில் 10 பேருக்கும், வ.உ.சி. தெரு வில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த 2 தெருக்களிலும் 15பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் தொற்று தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீன் உத்தரவின்பேரில், மாலை கட்டி தெரு, வ.உ.சி தெருவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்புகளை அமைத்தனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதார நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த தெருக்களில் வசிப்பவர்களை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதுடன், அவர்களுக்கு தேவையான பொருட்களை நகராட்சி ஊழியர்கள் மூலம் வாங்கிக்கொடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.